Monday, November 30, 2009

தீப மங்கள ஜோதி நமோ நம!


தீப வழிபாடு
அன்பர்கள் அனைவருக்கும் இனிய திருக்கார்த்திகை ஜோதி நல்வாழ்த்துக்கள். எல்லா புவனங்களையும் தன் ஒளியால் பிரகாசிக்கச் செய்யும் சூரிய சந்திரன் மற்றும் அக்னியையே கண்களாகக் கொண்ட முக்கண் முதல்வரை ஜோதி வடிவாக வழிபடும் திருக்கார்த்திகை திருநாளில் தீபங்களை பற்றி சிறிது பார்ப்போமா?

மஹா பாரதத்தில் வரும் ஒரு சிறு கதை. கிருஷ்ண பரமாத்மா தர்மர் மற்றும் துரியோதனன் இருவர் வீட்டிற்கும் வர ஒத்துக் கொண்டார், ஆனால் ஒரு நிபந்தனையுடன், அந்த நிபந்தனை அவர் வரும் போது தங்கள் இல்லம் முழுவதையும் ஏதாவது ஒரு பொருளால் நிறைத்து வைக்க வேண்டும் என்று. துரியோதனன் வைக்கோலை வாங்கி தன் வீடு முழுவதும் நிறைத்து வைத்தான். கிருஷ்ண பரமாத்மா வந்த போது அவர் இல்லத்துள் நுழைய முடியாமல் அப்படியே வெளியே இருந்து விட்டு திரும்பி விட்டார். அவர் தர்மர் வீட்டிற்கு சென்ற போது அந்த இல்லத்தின் மையத்தில் அழகிய குத்து விளக்கை ஏற்றி வைத்து இருந்தார். அதன் ஒளியானது இல்லம் முழுவதும் ஒளியூட்டியது. அங்கே வந்த ஸ்ரீ கிருஷ்ணர் தர்மரின் அறிவை மெச்சி அவரை வாழ்த்திச் சென்றார்.

இவ்வாறு தீபம் எல்லா திசைகளிலும் பரவி ஞானம் என்னும் ஒளியை பாய்ச்சி அஞ்ஞானம் என்னும் இருளை அகற்றுகின்றது.

எனவே தான் அருணகிரி நாதரும் இறைவனை தீப மங்கள் சோதி நமோ நமோ! என்று பாடுகின்றார்.

வள்ளலார் சுவாமிகளும் அருட்பெருஞ் ஜோதி! அருட்பெருஞ் ஜோதி! தனிப்பெருங்கருணை! தனிப்பெருங்கருணை! என்று பாடுகிறார்.

மாணிக்க வாசக சுவாமிகளோ ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ் ஜோதி என்று அனுபவக்கின்றார்.

தீப ஒளியில் முத்துக்குமரன்

அண்ணாமலை ஜோதி தரிசனம் திரிஜென்ம பாப விமோசனம், ஸ்ரீ ஐயப்பன் மகர ஜோதி தரிசனம் மனித வாழ்வில் பெரு வரம். இவ்வாறு எல்லா தெய்வங்களையும் நாம் ஜோதி வடிவாக காண்கின்றோம்.

தீபச்சுடரில் லட்சுமி தேவியும், ஒளியில் சரஸ்வதி தேவியும், சுடரில் வெளி படும் வெப்பத்தில் பார்வதி தேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே தீப தரிசனம் செய்வதன் மூலம் மூன்று தேவியர்களின் அருளையும் பெற்று கல்வி, செல்வம், வீரத்தில் சிறப்பிடம் பெறலாம் என்பது நம்பிக்கை.


ஓம் அஸதோ மா ஸத் கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அம்ருதம் கமய
ஓம் சாந்தி: ஓம் சாந்தி: ஓம் சாந்தி:


ஓ தீன பந்து, ஆபத் பாந்தவா, அனாத இரட்சகா, என்னை, அசத்யத்திலிருந்து என்னை சத்யத்திற்கு அழைத்துச் செல் ; அஞ்ஞான இருளிலிருந்து ஓளிக்கு அழித்துச் செல்; ஜனன மரணம் என்னும் இந்த சம்சார சாகரத்திலிருந்து மோக்ஷத்திற்கு அழைத்துச் செல் என்ற உபநிஷத் வாக்கியப்படி அஞ்ஞான இருளில் இருந்து ஞான ஓளிக்கு அழைத்து செல்வதை விளக்குகின்றன தீபங்கள்.

தீப வழிபாடு நெறியை சங்க நூல்களும், தேவாரமும் சிறப்பாக கூறுகின்றன. தீபங்களை வரிசையாக வைத்து வழிபாடு செய்யும் மரபு சங்க காலத்திலேயே இருந்திருக்கின்றது. மழைக்கூறு நீங்கிய தெளிவான வான மண்டலத்தில் ஆறு நட்சத்திரங்கள் அருகிருக்க தோன்றும் முழு நிலா நாளில் வீதி தோறும் விளக்கேற்றியும் மலை உச்சியில் விளக்கு வைத்தும் கார்த்திகை விழா கொண்டாடியதை அகநானூறு கூறுகின்றது. இவ்விளக்கின் ஒளிவெள்ளம் எப்படி இருந்ததென்றால், இலவ மரத்தின் மொட்டுகள் இதழ் விரித்த மலர்ச்சியைப் போல் இருந்ததாக அகநானூறு கூறுகின்றது.

லட்ச தீப ஒளியில் மிளிரும் ஸ்ரீ ராமர்

எனவே கார்த்திகை மாதத்தில் அக்னியை மானசீகமாக பூசித்து , வீடுகளில் விடியற்காலையிலும், மாலையிலும் தீபம் ஏற்றி வந்தால் நன்மை பயக்கும் என்று மஹரிஷிகள் கூறியுள்ளனர். குறிப்பாக, பரணி தீபம் அன்றும், கார்த்திகை தீப தினம் அன்றும் , நம் வீடுகளில் மாலையில் தீபங்களை ஏற்றி வைத்து, இறைவனை வழி பட வேண்டும்.

திருவண்ணாமலையில் கார்த்திகை ஜோதி தரிசிப்பதின் பலனை சிவப்பிரகாச சுவாமிகள் இவ்வாறு பாடுகின்றார்.

கார்த்திகை விளக்கு மணிமுடி சுமந்து
கண்டவர் அகத்திருள் அனைத்தும்

சாய்த்து நின்றெழுந்து விளக்குந்
சோண சயிலனே கயிலை நாயகனே! ஆம் கார்த்திகை தீப தரிசனம் காண்பவர் அக இருளை அகற்றி தூய்மைப்படுத்துகிறார் அந்த அண்ணாமலையார், அருணாசலர், சோணாசலர், கயிலை வாசர்.



இம்மாதத்தில் திருக்கோவில்களில் சென்று தங்கள் கையினால் தீபம் ஏற்றி வைப்பது அவசியம், குழந்தைகளையும் ஏற்றச்சொல்லவும், ஏனென்றால் திருக்கோவில்களில் தீபம் ஏற்றி வைப்பது அனைத்து தோஷங்களுக்கும் உடனடியாக நிவாரணம் அளிக்கும் சக்தி கொண்ட ஒரு எளிய பரிகரமாகும். கொடிய பாவங்களினாலும், கடினமான மருத்துவ, அறுவை சிகிச்சைகளினாலும் ஒருவர் துன்புறும் போது, உடனடியாக, அவருக்காகக் திருக்கோவில் ஒன்றில் தீபம் ஏற்றி வைப்பது, அவரது உடல் உபாதைகளை உடனடியாக குறைக்கும். மேலும், வசதியில்லாத திருக்கோயில்களுக்கு கார்த்திகை மாதத்தில் அவரவர் சக்திக்கேற்ப, நெய் அல்லது எண்ணெய் மற்றும் திரி வாங்கிக் கொடுத்தால், குடும்பத்தில் துன்பங்கள் நீங்கி, இன்ப ஒளி வீசும்.

ஓளிக்கு காந்த சக்தி உள்ளது. அந்த சக்தி நம் எண்ணங்கள், உணர்வுகள், வார்த்தைகள், அனைத்தையும் ஈர்த்து நமக்கே திருப்பியளிக்கின்றது. எனவே விளக்கு வைக்கும் நேரத்தில் தீய சொற்களைக் கூறக்கூடாது, ஏனென்றால் அவை பலித்து விடும் எனவே நல்லவைகளையே கூற வேண்டும்.


தீபங்கள் தான் எத்தனை வகை



இனி, தீராத வினைகள் தீர, திருக்கோவில்களில் எவ்வளவு தீபம் ஏற்ற வேண்டும் என்று பார்ப்போமா?
1 தீபம். : மன அமைதி
9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.
12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.
18 தீபங்கள்:சக்தி தரும் சக்தி தீபம்
27 தீபங்கள்:நட்சத்திர தோஷம் நீங்கும், நல்லன கிட்டும்.
48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.
108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்
508 தீபங்கள்:திருமணத் தடை நீங்கும்
1008 தீபங்கள்:சந்தான பாக்கியம்.


தீபத்தின் தன்மை :
இருளை அகற்றும். அதற்கு மேல் பக்கம், கீழ் பக்கம் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற பேதமில்லை. தீபம் திருமகளின் வடிவம். வெள்ளிக் கிழமையன்று மாலை தீபம் ஏற்றி வைத்து வணங்கினால் அதன் ஜோதியானது அவரவர்கள் விருப்பப்படி அதுவே அம்பிகை அல்லது திருமகள். ஆகவே தான் நாம் நம்முடைய எல்லா நல்ல காரியங்களையும் செய்யும் போது குத்து விளக்கு ஏற்றி வைக்கிறோம். இனி குத்து விளக்கின் தத்துவத்தைப் பற்றி காண்போம். தாமரை போன்ற ஆசனம் பிரம்மா. நெடிய தண்டின் நீட்சி மஹா விஷ்ணு, நெய்யேந்தும் அகல் ருத்திரன், திருமுனைகள் யாவும் மஹேஸ்வரன், நுனி சதாசிவன். நெய் - நாதம், திரி -பிந்து, சுடர்- அலை மகள், தீப்பிழம்பு -கலை மகள், ஜோதி - அம்பிகை மலை மகள். எனவே குத்து விளக்கு என்பதே இறைவடிவம்.

குத்து விளக்கின் ஐந்து முகங்கள் அன்பு, அறிவு, உறுதி, நிதானம், பொறுமை என்னும் ஐந்து நல்ல பண்புகளை குறிக்கின்றது. குத்து விளக்கில் ஒரு முகம் மட்டும் ஏற்றினால் மத்திமப்பலன் ஏற்படும், இரண்டு முகங்கள் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை ஏற்படும், மூன்று முகங்கள் ஏற்றினால் குழந்தை பாக்கியம் கிட்டும், நான்கு முகங்கள் ஏற்றினால் பசு, பூமி, வீடு, வாகனம் அமையும், ஐந்து முகங்களும் ஏற்றினால் அனைத்து வளங்களும் ஏற்படும். விளக்கு ஒரு மானிட உருவமும் கூட, பாதம், உடல், கழுத்து, முகம் எனப் பிரிக்கப்பட்டுள்ளன.அதன் ஒளிதான் உயிர். ஐந்து முகங்களும் பஞ்ச பூதங்கள். ஐந்து முகங்களையும் ஏற்றித்தொழுவதே நலம் தரும். முதலில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றிய பிறகுதான் திரியிட்டு தீபம் எற்ற வேண்டும். இனி தீபங்களைப்பற்றிய மற்ற குறிப்புகளைக் காண்போம்.


தீபம் ஏற்றும் திசையின் பலன்கள்:
கிழக்கு : துன்பம் ஒழியும், கிரகமும் பீடையும் ஒழியும்
மேற்கு: கடன் தொல்லை நீங்கும், சனி பீடை, கிரக தோஷம், பங்காளிப் பகை நீங்கும்.
வடக்கு: திரண்ட செல்வம், மங்களம் பெருகும், திருமணம், கல்வி, சர்வ மங்களம்.
தெற்கு: தீபம் ஏற்றக் கூடாது.

தீபம் ஏற்றும் நேரம்:
காலை : பிரம்ம முகூர்த்தம் 3 மணி முதல் 5 மணி வரை விளக்கேற்ற சர்வ மங்களம் உண்டாகும்.
மாலை : குடும்ப சுகம், புத்திர சுகங்களைத் தரும், நல்ல கணவர் அமைவர், நல்ல வேலை அமையும்.

தீபம் துலக்கும் நாட்கள் மற்றும் அதன் பலன்கள்:
குத்து விளக்கைத் துலக்கி சுத்தப்படுத்தும் பணியினை செய்ய குறிப்பிட்ட நாட்கள் உண்டு

ஞாயிறு, திங்கள், வியாழன், சனி ஆகிய நாட்களில் மட்டும் தான் குத்து விளக்கை தேய்க்க வேண்டும்.

திங்கள் நடு இரவு முதல் புதன் நடு இரவு வரை குபேர தன தாட்சாயணியும், குக குரு தன தாட்சணியும் குத்து விளக்கில் பூரணமாய் குடியிருப்பதாய் கூறப்படுகின்றது. எனவே இந்த நாட்களில் விளக்கினை தேய்த்துக் கழுவினால் இந்த சக்திகள் விலகிப் போகுமென்பது நம்பிக்கை.

வெள்ளியன்று கழுவுவதால் அதில் குடியிருக்கும் குபேர சங்க நிதி யட்சிணி விலகிப் போய் விடும் என்பதும் மக்களின் பரவலான நம்பிக்கை.

ஞாயிறன்று விளக்கைத் துலக்கி தீபம் போடுவதால் கண் சம்பந்தமான நோய்கள் அகலும். மனம் நிலைப்பட திங்கள் அன்று துலக்கி தீபம் ஏற்ற வேண்டும். 'குரு பார்வை' இருந்தால் கடினமான வேலைகளையும் எந்தவிதமான பிரச்சினையும் இல்லாமல் எளிதாக செய்ய முடியுமே!.

வியாழன் அன்று தீபமேற்றினால் 'குருவின் பார்வையும்'- அது தரும் கோடி நன்மையும் நமக்கே கிடைக்கும். வாகன விபத்துக்களைத் தவிர்க்க உதவுவதுதான்

சனியன்று விளக்கு துலக்கி நாம் போடும் தீபம். மற்ற நாட்களில் விளக்கு துலக்காமல் தீபம் போடலாம். விளக்கு துலக்காத நாட்களில் விசேஷமான நாட்கள் வந்தால் விளக்கை நீரில் கழுவித் துடைத்து விபூதி கொண்டு தேய்த்துச் சுத்தமான துணியினால் விளக்கைத்துடைத்து தீபம் ஏற்றலாம்.

பஞ்சமி திதியன்று விளக்கேற்றுவது அகால மரணத்தைத் தவிர்க்கும், புதிதாக நெய்த பருத்தி ஆடையில் அரைத்த சந்தனம், பன்னீர் சேர்த்துத் தடவிக் காய வைத்து, அதை திரியாக்கி வடக்கு முகமாக வைத்து , 'பஞ்ச தீப' எண்ணெய் ஊற்றி திருவாதிரை நட்சத்திரத்தன்று தொடர்ந்து ஓராண்டு விளக்கேற்ற நோய்களின் வேகம் குறையும். பல காலம் வராமலிருந்த பணம் தேடி வரும். இது அருந்ததிக்கு சாவித்திரி தேவி அருளிய வாக்கு.


இறைவனுக்கு உகந்த எண்ணெய்:

நெய் : மஹா லக்ஷ்மி
நல்லெண்ணெய் : நாராயணன்
தேங்காய் எண்ணெய்: கணபதி
இலுப்பை எண்ணெய்: ருத்திரபதி, சர்வ தேவதை.

பலன்:
ஆமணக்கு எண்ணெய்: நல்லது நடக்கும். குல தெய்வத்தின் முழு அருள் கிட்டும்

நெய்: மிகச்சிறந்தது. சகல வித சுகத்தையும் தரும். வீட்டின் நலம் பெருகும். அதிலும் பசு நெய் பயன் படுத்துவது மிகவும் உத்தமமானது. தேவர்கள் மற்றும் அனைத்து தேவர்களும் பசுவில் வசிக்கின்றனர். பசுவின் பாலில் இருந்து உருவாகும் நெய்யில் அம்பிகை வாசம் செய்வதாக ஐதீகம். ஆகவே தீபத்தில் பசு நெய் இடுவதால் அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது.

நல்லெண்ணெய்: பீடைகள் விலகும், துக்கம் அகலும்.

விளக்கெண்ணெய்: புகழ், பந்த சுகங்கள் கிடைக்கும், வளம், செல்வம் பெருகும்.

வேப்பெண்ணெய்: கணவன் மனைவி உறவு நலம் பெறும், மற்றவர்களின் உதவி கிட்டும்.

வேப்பெண்ணெய், நெய், இலுப்பெண்ணெய் மூன்றும் சேர்த்து விளக்கேற்றினால் செல்வம் உண்டாகும், குல தெய்வத்திற்கு ஏற்றது.

நெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய ஐந்து எண்ணெய்களும் கலந்து தீபமேற்றினால் தேவியின் அருள் சக்தி கிட்டும்.

கடலை எண்ணெய் : ஊற்றக் கூடாது.



பூஜைக்கு ஏற்ற விளக்கு:

அகல் விளக்கு, வெள்ளி விளக்கு, பஞ்ச லோகத்தால் செய்த விளக்கு.

விளக்கு திரிகளின் வகைகள்:
பஞ்சு : பஞ்சுத் திரிதான் விளக்கேற்ற மிகவும் சிறந்தது. மெல்லிய திரிகளாக திரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திரிக்கும் போது ஒரு பக்கம் மட்டுமே உருட்ட வேண்டும். வீட்டில் மங்களம் பெருகும், சுகங்களைக் கூட்டும்.

தாமரைத்தண்டுத்திரி: தீவிணை போகும், செல்வம் நிலைக்கும்.

வாழைத்தண்டுத்திரி: குழந்தை பாக்கியம், தெய்வக்குற்றமும், குடும்ப சாபமும் நீங்கும். செல்வம் தங்கும்.

வெள்ளெருக்கு- இதன் பட்டையை திரியாக செய்து தீபம் போட்டால் செல்வம் பெருகும் , பேய் விலகும்.( கணேசருக்கு உகந்தது)

மஞ்சள் நிறத்திரி: அம்மனின் அருள் கிட்டும், வியாதி குணம் ஆகும்

புது சிவப்புவண்ணத் திரி: திருமணத்தடை, குழந்தை பாக்கியமின்மை விலகும்.

புது வெள்ளை வண்ணத் திரி: தரித்திரம் அகலும், சுபிட்சம் பெருகும்.

விளக்கை எண்ணெய் இல்லாமல் தானே அனைய விடுவது தவறு. நாமே அமர்த்துவது நல்லது, ஒரு சொட்டு பால் கொண்டோ அல்லது மலர் கொண்டோ அமர்த்துவது உத்தமம். குறிப்பாக வெளியில் செல்லும் போதும் இரவு படுக்கச்செல்லும் போதும் விளக்கை தொடர்ந்து எரிய விடாமல் அமர்த்தா வேண்டும். வாயினால் ஊதி அமர்த்தக் கூடாது.



இனி விளக்கு வழிபாட்டினைப் பார்ப்போம். அம்மனுக்கும் குல தெய்வத்திற்கும் மிகவும் உகந்தது பொங்கலும் மா விளக்கும். பச்சரிசியை பொடி செய்து வெல்லப் பாகுடன் கலந்து மா விளக்கு செய்து அதில் நெய் ஊற்றி தீபமேற்றி அம்மனுக்கு பொங்கலுடன் படைப்பது ஒரு மிகச்சிறந்த பரிகாரம். அது போலவே பலர் குறிப்பால இராகு காலத்தில் துர்க்கைக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றுகின்றனர். அது போலவே பல கோவில்களில் தேங்காய் மூடிகளில் விளக்கு ஏற்றும் வழக்கமும் உள்ளது.


 லக்ஷ தீப ஒளியில் மிளிரும் குளக்கரை


திருவிளக்கு பூஜை:

இருள் துன்பம் தருவது. ஓளி இன்பம் தருவது. ஓளி இன்றி உலகமேது? வாழ்க்கையேது? புற அருள் நீக்குவது ஒளி. அக இருளைப் போக்குவது அருள் ஒளி உணர்வு. இருளாகிய துன்பம் நீங்கி அருளாகிய இன்பம் நிறைந்திட திருவிளக்கு பூஜை செய்கிறோம். திருவிளக்கை திருமகளாக, தீப லக்ஷ்மியாக, அம்பிகையாக பாவித்து சுமங்கலிகள் பூஜை செய்வது திருவிளக்கு பூஜை எனப்படும். குறிப்பாக அம்மனுக்கு உகந்த ஆடி, தை வெள்ளி நாட்களில் திருவிளக்கு பூஜை செய்வது மிகவும் சிறந்தது. திருவிளக்கு வழிபாடு செய்வதால் நம் வாழ்வில் தூய்மையும் தெய்வத்தன்மையும் பெருகும்.சஞ்சலமும் வறுமையும் நீங்கி சாந்தியும் வளமையும் நிறையும். தினமும் மாலையில் திருவிளக்கேற்றி வழிபடும் இல்லத்தில் அஷ்ட லக்ஷ்மிகளும் வாசம் செய்கின்றனர். திருவிளக்கு வழிபாடு தினந்தோறும் நடைபெறும் இல்லங்களில் தெய்வ சாந்நித்யம் பெருகுவதால் பேய், பிசாசு, பில்லி, சூனியம் ஒன்றும் அங்கே அணுகாது.

இனி திருக்கோவில்களில் நடைபெறும் தீப ஷோடசோபசாரங்கள் என்ன என்று பார்ப்போம்.1. தூபம், 2. ஏக தீபம் (உருக்களி) 3. அலங்கார தீபம் ( 1, 3, 5 7, 9 அல்லது 11 அடுக்குகள் கொண்ட தீபம். புஷ்ப தீபம், மஹா தீபம் என்றும் அழைக்கப்படுவதுண்டு) 4. நாக தீபம், 5.வ்ருஷப தீபம்( நந்தி தீபம்), 6.புருஷா ம்ருக தீபம், 7. சூல தீபம், 8. கூர்ம தீபம் (ஆமை தீபம்), 9. கஜ தீபம்( யானை தீபம்), 10. சிம்ஹ தீபம், 11.வ்யாகர தீபம் ( புலி தீபம்) 12. கொடி தீபம். 13. மயூர தீபம், 14. பஞ்ச தட்டுடன் பூர்ண கும்ப தீபம், 15. நக்ஷத்ர தீபம், 16.மேரு தீபம். ஆகியவையே அந்த 16 தீபங்கள்.

சொக்கப்பனை:

வீட்டளவில் தீபம் என்பது ஊரளவில் சொக்கப்பனை. சொக்கப்பனையின் உள்ளார்த்தம் மன இருள் அகன்று அக ஒளி ஏற்பட்டால் தீயன கருகும் ஞான ஒளி மனதில் உண்டாகும், தீயன தூசாகும் என்பதே. கார்த்திகை பௌர்ணமியன்று பல ஆலயங்களில் சொக்கப்பனை கொளுத்தப்படுகின்றது. அதில் பனை ஒலை கொளுத்தப்படுகின்றது, பனை மரத்தின் ஒவ்வொறு பாகமும் மற்றவர்களுக்காக பயன் படுகிறது கொழுத்தப்பட்ட பனை ஒலையின் சாம்பல் கூட புனிதமானது அதுவும் நமக்கு பயன் படுகின்றது அது போல நாமும் மற்றவர்களுக்கு பய பட வேண்டும் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்துகின்றது.

இந்த திருக்கார்த்திகை நாளில் நாமும் நம் இல்லங்களின் எதிரே விளக்கேற்றி ஜோதி ரூபமான இறைவனை வழிபட்டு நன்மையடைவோமாக.

Monday, November 2, 2009

அன்னாபிஷேகம் என்ன சிறப்பு

அன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி

இன்று (02-11-09) ஐப்பசி முழுமதி நாள் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் சிறப்பாக மாலை நடைபெறும் நாள். இன்றைய இப்புண்ணிய நாளில் சென்ற வருடம் வெளியிட்ட ஒரு இடுகை மீள் பதிவிடப்படுகின்றது சில அரிய தகவல்களுடன், தலைப்பு மட்டும் மாற்றப்படுகின்றது, சக்தி விகடனில் 2007 இப்பதிவு வெளிவந்த தலைப்பு இந்த இடுகையின் தலைப்பாக உள்ளது. சென்ற வருடம் படிக்காத அன்பர்கள் படித்து மகிழலாம். சென்ற வருடம் படித்தவர்களும் படிக்கலாம்.

கோடி சிவ தரிசன பலன் தரும் அன்னாபிஷேகம்

”அப்பா! சாமி வெள்ளையா மாறீட்டாரு ” ன்னு ஒரு நாள் காரைக்காலில், சௌந்தராம்பிகை சமேத கயிலாச நாதர் ஆலயத்தில் என் மகள் ஓடி வந்து என்று படபடப்பாக கூறினாள், என்னடா இது சுவாமி கூட Fair and lovely போட்டு வெள்ளையாகிவிட்டாரோ? ன்னு சந்தேகத்தோட உள்ள போயி பார்த்தால் சுவாமி அன்னாபிஷேகத்தில் அற்புதமாக அருட்காட்சி தந்துகிட்டு இருந்தார். பின் சுவாமி நிறம் மாறவில்லை அன்னாபிஷேகம் கண்டருளுகிறாருன்னு மகளுக்கு விளக்கினேன், வாங்களேன் நீங்களும் அன்னாபிஷேகம்ன்னா என்னான்னு தெரிஞ்சுக்க.




அன்னாபிஷேக கோலத்தில் லிங்க மூர்த்தி



சாம வேதத்திலே ஒரு இடத்தில் "அஹமன்னம், அஹமன்னம், அஹமன்னதோ" என்று கூறப்பட்டுள்ளது, அதாவது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.

அம்மை பார்வதியும் எல்லா ஜீவராசிகளுக்கும் படியளக்கும் அன்னபூரணியாகவும் தானே காசியிலே அருட்காட்சி தருகின்றாள்.

அந்த இறைவனின் அருவுருவமான லிங்க மூர்த்திக்கு அன்னம் சார்த்தி வழிபடும் நாளே அன்னாபிஷேக நாள், ஐப்பசி பௌர்ணமி நாள்.

முதல் முதலில் அன்னாபிஷேகத்தை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது "மயிலையே கயிலை" ஆன திருமயிலையில், அன்று ஏதோ தோன்றியது கபாலீச்வரரையும், கற்பகவல்லி அம்பாளையும் தரிசனம் செய்ய வேண்டும் என்று, அலுவகத்திலிருந்து நேராக திருக்கோவில் சென்றேன். எப்போதும் 4.30 மணிக்கே திறந்து விடும் கபாலீஸ்வரர் சன்னதியில் அன்று மட்டும் திரை போடப்பட்டிருந்தது. 6:30 மணியளவில்தான் தரிசனம் கிடைத்தது ஆனால் அற்புதமான தரிசனம் எப்போதும் கருநிறமாக இருக்கும் எம்பெருமானின் திருமேனி அன்று மட்டும் வெண்ணிறமாக இருந்தது. விபூதி அலங்கரம் போல் தோன்றவில்லை அர்ச்சகரிடம் விசாரித்த போது இன்று எம்பெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்துள்ளோம் என்று கூறினார்.

இரண்டாவது முறை அன்னாபிஷேகம் பார்த்தது காரைக்காலில். அக்கோவிலில் அன்னாபிஷேகம் செய்யப்பட்டிருந்த விதமே மிக அருமையாக இருந்தது, எம்பெருமானின் மேனி முழுவதும் சாதம், ஐந்து முகங்கள் அமைக்கப்பட்டிருந்தன, கண்களுக்கு கருப்பு திராட்சை, காதிலே குண்டலமாக முறுக்கு, இரண்டு பக்கமும் புடலங்காய், ஆவுடையாரின் மீது அன்னாசிபழங்கள், மற்ற இனிப்பு வகைகள், அந்த தரிசனத்திலே மயங்கி அன்றே மற்ற அண்ணாமலையார், பார்வதீஸ்வரர், சோமேஸ்வரர் ஆலயங்களிலும் அன்னாபிஷேக அலங்காரங்களை தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அந்த அழகில் மயங்கி அன்னாபிஷேகம் பற்றி படித்து, விசாரித்து அறிந்து கொண்டவைகளை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவே இப்பதிவு.

பல்குஞ் சரந்தொட்டு எறும்பு கடையானதொரு
பல்லுயிர்க் குங் கல்லிடைப் பட்டதேரைக்கும்
அன்றுற் பவித்திடும் கருப்
பையுறு சீவனுக்கும்
மல்குஞ் சராசரப் பொருளுக்கும் இமையாத
வானவர் குழாத்தினுக்கும்
மற்றுமொரு மூவருக்கும் யாவருக்கும்

அமுது படைக்கும் அந்த ஆண்டவனுக்கே அமுது படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். ஐப்பசி மாதப் பௌர்ணமியன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் ஐயன் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

பௌர்ணமியன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் பூரண சோபையுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பௌர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு போஜனம் அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும். அனைவருக்கும் அன்னம் பாலிக்கும் அந்த அன்ன பூரணியை தனது வாம பாகத்திலேக் கொண்ட அந்த மாதொரு பாகனை அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகில் பஞ்சம் வராது என்பது உண்மை.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம், எனவே அன்று சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம்.

சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம் அவற்றுள் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது உச்சநிலை சிறப்புடையதாகும்.

ஆலய வழிபாட்டில் மாத பௌர்ணமியன்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு நடசத்திரத்திற்கு உரிய பொருளால் சிவபெருமானை வழிபடுவது விஷேமானதாகும். ஐப்பசி மாதம் இவ்வாறே அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பௌர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிக்ஷமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.

ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.

அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

இனி அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? ஐப்பசி பௌர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகின்றது பின் எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுகின்றனர். இது அன்னாபி ஷேகனம் எனப்படுகின்றது. சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியிலிருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருகின்றார் எம்பெருமான். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பகதர்களுக்கு வழங்கப்படுகின்றது. பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

இராஜேந்திரன் சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தில் அமைத்த
பிரகதீஸ்வரரின் அன்னாபிஷேக கோலம்


சர்வ சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் மிகவும் சிறப்பாக நடைபெறும் தலங்களுள் சில தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்திலே உள்ள தலங்களில் சிறப்பாககொண்டாடப்படுகின்றது. தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்கள் ஆகும் இவ்விரு ஆலயங்களிலும் எம்பெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் ( கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம். ) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்குகின்றது புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிகின்றது 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குகின்றனர் அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது., அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக அன்னம் வந்து கொண்டிருக்கும் எம்பெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக அன்னம் சாற்றப்படுகின்றது. எம்பெருமானின் திருமேனி முழுவது அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவரும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது.

அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப் பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறுகின்றது பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறுகின்றது. மாலை ஐந்து மணிக்கு எம்பெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படுகின்றது. பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீபாரதாணையும் நடைபெறுகின்றது. இரவு 9 மணி அளவில் மீனாக்ஷி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திர சேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுகின்றான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாக்ஷ’ சுந்தரேஸ்வரரை பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

பொதுவாக அன்னம் எம்பெருமானின் மேனி முழுவதும் சாற்றுவது மிகவும் எளிமையான அலங்காரம்.

ஆனால் பல ஆலயங்களில் அன்னத்தில் எம்பெருமானின் ஒரு முகத்தையோ அல்லது ஐந்து முகங்களையோ அலங்காரம் செய்கின்றனர்.

சில ஆலயங்களில் அன்னத்துடன் அனைத்து காய்கறிகள் மற்றும் பழங்கள், பட்சணங்கள் ஆகியவற்றையும் படைத்து அலங்காரம் செய்கின்றனர்.

இன்னும் சில ஆலயங்களில் கருவறையின் படியிலிருந்தே படிப்படியாக ஆவுடை வரைக்கும் பலப் பல படிகள் அமைத்து அந்த படிகளிலே அனைத்து காய்கறிகளையும் பழங்களையும் பட்சணங்களையும் கொலுவாக அமைத்து அலங்காரம் செய்கின்றனர்.

சென்னை அசோக் நகரில் அமைந்துள்ள கருமாரி திரிபுர சுந்தரி ஆலயத்தில் திரியம்பகேஸ்வரருக்கு மிகவும் நூதனமான முறையில் அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. ஒரு வருடம் எம்பெருமானின் மூன்று கண்களை குறிக்கும் வகையில் மூன்று லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர், ஒரு வருடம் பஞ்ச பூதத் தலங்களை குறிக்கும் வகையில் ஐந்து லிங்கங்களை அமைத்து அலங்காரம் செய்தனர், ஒரு வருடம் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களை குறிக்கும் வகையில் பன்னிரண்டு லிங்கங்களாக அலங்காரம் செய்திருந்தனர்.

அசோக் நகர் சித்தி விநாயகர் சொர்ணபுரீஸ்வரர் ஜடாமுடியிலிருந்து கங்கை பாய, நாகம் கழுத்தில் ஆட திருக்கயிலை நாதராக முக்கண்களுடன் எழிற்கோலம் காட்டுகின்றார்.

வடபழனி வேங்கிரீஸ்வரர் ஆலயத்தில் கையிலாய மலையையே அன்னாபிஷேகதன்று தரிசனமாக காட்டினர்.

மஹாலிங்கபுரம் மஹாலிங்கேஸ்வரர் யோகியாக அலங்கரிக்கப்பட்டிருந்தார்.

சென்னை மேற்கு மாம்பலம் முருகாஸ்ரமத்தில் பால முருகனுக்கும் இன்று அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. முழுவதும் அன்னம் சார்த்தப்பட்டு அழகன் முருகன் அன்று சிவ பெருமானாக அருட்காட்சி தருகின்றார். உத்திராட்ச மலைக்கு கறுப்பு திராட்சைப்பழங்களும், காதுக்கு குண்டலமாக அப்பிள் பழமும் அருமை.

காஞ்சியில் காமாக்ஷ’யம்மன் ஆலயத்தில்

அன்னபூர்ணே சதாபூர்ணே சங்கர பிராண வல்லபே ஞான வைராக்கிய சித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

என்று நாம் வழிபடும் அன்னபூரணிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது, சென்னை திருமயிலை முண்டககன்ணீயம்மனுக்கும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது.



இன்று பல ஆலயங்களில் அன்னதான நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடைபெறுகின்றது.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.

வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக
அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து

கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக்
கூட்ட முதலான žவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும் அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.

* * * * *

13 Comments:

  • At November 11, 2008 7:23 PM , Blogger கவிநயா said...

    ஆஹா, இத்தனை தலங்களிலும் அன்னாபிஷேகம் தரிசிக்க கிடைத்ததா உங்களுக்கு? முதல் முறையாக அன்னாபிஷேகம் பற்றி அறிந்து கொண்டேன். படமும் கொள்ளை அழகு. மிக்க நன்றி.

  • At November 11, 2008 7:50 PM , Blogger ஜீவா (Jeeva Venkataraman) said...

    அழகாக இருந்தது வர்ணணை ஐயா.
    அன்னமயகோசமால் மூடப்பட்டிருக்கிறாய் மனிதா நீ, என உணர்த்துவது போல் உள்ளது!

  • At November 12, 2008 1:19 AM , Blogger மதுரையம்பதி said...

    மிகுந்த மற்றும் அறிய செய்திகளுடனான பதிவு. நன்றி கைலாஷி சார்.

  • At November 12, 2008 2:22 AM , Blogger Kailashi said...

    //முதல் முறையாக அன்னாபிஷேகம் பற்றி அறிந்து கொண்டேன்//

    யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.

    முதல் தடவை அடியேனும் அன்னாபிஷேகம் கண்ட போது ஒன்றும் தெரியவில்லை, தாத்பரியமும் புரியவில்லை, பின் அவர் அனைத்தையும் அறிய வைத்தார் அதை அன்பர்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் அவ்வளவே.

  • At November 12, 2008 2:23 AM , Blogger Kailashi said...

    //அன்னமயகோசமால் மூடப்பட்டிருக்கிறாய் மனிதா நீ, என உணர்த்துவது போல் உள்ளது!//


    அற்புதமான வீளக்கம் ஜீவா சார்.

  • At November 12, 2008 2:24 AM , Blogger Kailashi said...

    ஐயனின் அற்புதங்கள் இன்னும் தொடரும் வந்து தரிசியுங்கள் மதுரையம்பதி ஐயா.

  • At November 12, 2008 7:42 AM , Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //அன்னாபிஷேகத்தன்று எம்பெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை அன்னமும் ஒரு சிவலிங்கம்//

    ஆகா! எம்புட்டு சத்தியமான வார்த்தை! ஒவ்வொரு பருக்கையும் தோற்றத்தில் சிவலிங்க பாணம் போலத் தான் இருக்கு!

    தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவனே சிவலிங்கம் என்பார் திருமூலர்.
    அதான் ஜீவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆனது போலும்!

    சிவாலயங்களில் அன்னாபிஷேகம் போலவே திருப்பாவாடை என்று வைணவத் தலங்களில் நடக்கும்!

  • At November 12, 2008 7:44 AM , Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர்//

    அடியேனே கேக்கணும்னு இருந்தேன்!
    இது ஏன் கைலாஷி ஐயா?

    பாண லிங்கத்தின் மேல் பட்டம் அன்னம் ஏன் பிரசாதத்தில் தவிர்க்கப்படுகிறது? ஆவுடையாரில் இருந்து மட்டும் அன்னம் எடுத்துத் தருவார்களா?
    மற்ற அபிஷேகங்களில் லிங்கத்தின் மேல் பட்ட பஞ்சாமிர்தக் கலவையோ, தயிரோ, பாலோ தரும் போது, அன்னம் மட்டும் ஏன் அப்படித் தருவதில்லை?

  • At November 12, 2008 8:53 AM , Blogger Kailashi said...

    //சிவாலயங்களில் அன்னாபிஷேகம் போலவே திருப்பாவாடை என்று வைணவத் தலங்களில் நடக்கும்!//

    சரிதான் KRS ஐயா, வைணவத்தலங்களில் அன்னாபிஷேகம் திருப்பாவாடை என்று அழைக்கப்படுகின்றது.

    //பாண லிங்கத்தின் மேல் பட்டம் அன்னம் ஏன் பிரசாதத்தில் தவிர்க்கப்படுகிறது? //

    லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம்( கதிர் வீச்சு) நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம் என்வே ஆவுடை மற்றும் பிரம்மபாகத்தின் மேல் உள்ள அன்னம் விநியோகம் செய்யப்படுகின்றது.

    அன்னாபிஷேகம் மாலை 6.00 , அதாவது சாயரட்சை சமயம் துவங்கும் பின்னர் இரண்டாம் காலம் அதாவது இரவு 8:30 மணி வரை ஐயன் திருமேனியிலேயே அன்னம் இருப்பதாலோ? இவ்வாறு விதித்திருக்கின்றனர் முன்னோர்.

    மற்ற அபிஷேக பொருட்கள் ஐயன் திருமேனியில் பட்டவுடன் அவை வெளியே வந்து விடுகின்றன என்பதால் அவை பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

  • At November 12, 2008 5:04 PM , Blogger கோவி.கண்ணன் said...

    கைலாஷி சார்,
    வெறும் தகவலாக இல்லாமல் கிடைப்பதற்கு அறிய படத்துடன் உணர்வு பூர்வமாக எழுதி இருப்பதாக தெரிகிறது.

  • At November 12, 2008 7:22 PM , Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

    //லிங்கத்தின் மேல் சார்த்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம்( கதிர் வீச்சு) நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம் என்வே//

    விளக்கத்துக்கு நன்றி கைலாஷி ஐயா!

    விபூதிக் காப்பில் இறைவன் மேல் நெடுநேரம் இருந்த திருநீறைத் தருகிறார்கள்! அதை வாயிலும் போட்டுக் கொள்கிறார்கள்!
    அளவு சிறிதென்றாலும் கதிர் வீச்சு, வீச்சு தானே?
    அதே போன்று எலுமிச்சம்பழ மாலைகள் நெடுநேரம் இருந்து பின்னர் சாறும் ஆக்கப்படுகிறது.

    இன்னும் சற்று நுணக்கினாலோ, ஆகம விற்பன்னர்களைக் கேட்டாலோ விடை கிடைக்கலாம்-ன்னு நினைக்கிறேன்!

  • At November 13, 2008 1:20 AM , Blogger Kailashi said...

    நன்றி கோவிக்கண்ணன் அவர்களே.

  • At November 13, 2008 1:21 AM , Blogger Kailashi said...

    //இன்னும் சற்று நுணக்கினாலோ, ஆகம விற்பன்னர்களைக் கேட்டாலோ விடை கிடைக்கலாம்-ன்னு நினைக்கிறேன்!//

    அடியேனும் விசாரிக்கின்றேன் தாங்களும் விசாரித்து தெரியப்படுத்துங்கள்.