Thursday, June 25, 2009

அங்காள பரமேஸ்வரியின் ஆனந்த மஹா கும்பாபிஷேகம் -5

கும்பாபிஷேக நாளும் வந்தது அதிகாலையிலேயே ஆவலுடன் எழுந்து விட்டோம். மனதிலே ஆயிரம் மத்தாப்புக்கள் 90 வருடங்களாக எதிர்பார்த்த ஒரு புண்ணிய நிகழ்ச்சி இன்று நிறைவேறப் போகின்றது என்று பேரானந்தம். அதே சமயம் அம்மா எந்த வில்லங்கமும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாக முடிய வேண்டுமே என்று மானிட இயல்பில் சிறு வேண்டுதல். சிறு வயது முதல் என்னை ஈன்ற அன்னையின் கனவாக இருந்த ஒரு ஆசை நிறைவேற போகின்றதே அதைக் கண் மடுக்க அவர்கள் இல்லையே என்ற ஒரு சிறு சோகம் என்று மனதெங்கும் ஒரு அற்புத கலவையாக கனத்து இருந்தது. சூரியன் அற்புதமாக தோம்றினான் வானம் நிர்மால்யமாக இருந்தது, பறவைகள் அற்புதமாக பூபாளப் பண் பாடின, அனைத்து சகுனங்களும் நல்லதாகவே இருந்தன.

அடியேனை ஆன்மீகத்தில் ஈடுபடுத்தியது என் அன்னை சரவணம்மாள் அவர்கள். சிறு வயதிலேயே அடியேனுக்கும், என் தம்பிக்கும் சோறு ஊட்டும் போது ஆன்மிகக் கதைகளைக் கூறி நல்வழிப்படுத்தியதும் என் அன்னை தான். ஒவ்வோரு மஹா சிவராத்திரியன்றும் எங்கள் குல தெய்வத்தை தரிச்சிக்க எங்களை் அழைத்துச் செல்ல என் அம்மா தவறியதில்லை. அவர்கள் இறக்கும் தருவாயில் கூட அங்காளம்மா உன் கோயில் கும்பாபிஷேகம் பார்க்காமல் போகின்றோமே என்ற அங்கலாய்ப்பு அவரிடம் இருந்தது. இன்று அவர்களுடைய கனவை நிறைவேற்றும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒரு பெரும் கடமையை முடித்த பெரும் திருப்தி.

இந்த கும்பாபிஷேக பதிவுகள் அனைத்தும் எனை ஈன்ற என் தாய்க்கு சமர்ப்பணம்.

அன்னை அங்காள பரமேஸ்வரி

உற்சவர் அம்மன்

வேதம் நான்கிற்கும் சாரமாய் விளங்கும் நாரணன் சோதரிக்கு
நான்காம் கால யாக பூஜை

அதிகாலையிலேயே மங்கள இசையுடன் திருவிழா தொடங்கியது. கும்பாபிஷேகம் என்பது கும்பத்திலிருக்கும் சக்தியை பிம்பத்திற்க்கு மாற்றுவதுதானே. பூரண சக்தியுடன் கும்பத்தில் அன்னை அருள் புரிய வீற்றிருந்தாள். முதலில் பிம்ப சுத்தி - இரவு பிரதிஷ்டை செய்யப்பட்ட பிம்பங்கள் முதலில் சுத்திகரிக்கப் பட்டன, பின்னர் பிம்ப ரக்ஷாபந்தனம் - பிம்பங்களுக்கு ரக்ஷாபந்தனம் என்னும் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அடுத்து வேதபாராயணம் முடிந்து ஸ்பர்சாகுதி என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒன்பது யாக குண்டத்திலிருந்தும் ஆகுதி நெய் மூல மூர்த்திக்கு கொண்டு செல்லப் பெற்று அம்மனுக்கு சக்தி ஊட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின் நாடி சந்தானம் நடைபெற்றது. தர்ப்பைக் கயிறு, சிவப்பு நூல். வெள்ளிக் கம்பி மூலம் மூலவர் அம்மனும் பிரதான கும்பமும் இனைக்கப்பட்டன மந்திரங்களின் மூலம் பிராண சக்தியின் தத்துவங்கள் மூல மூர்த்திக்கு மாற்றப்பட்டன. இதை சிவாச்சாரியார் பிம்பம் என்பது ஒரு பிறந்த குழந்தை போல அதற்கு பெயர் கிடையாது குணமும் கிடையாது. அந்த குழந்தைக்கு அங்காள பரமேஸ்வரி என்று பெயர் சூட்டுவதே இந்த நாடி சந்தானம் என்று விளக்கினார். நான்காம் கால யாக சாலை நிறைவாக விசேஷ த்ரவ்யாகுதி மற்றும் மஹா பூர்ணாகுதி நடைபெற்று கும்பங்கள் புறப்பட்டன.

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி மஹா திரிபுர சுந்தரி
அங்காள பரமேஸ்வரிக்கு மஹா கும்பாபிஷேகம்


மூலவர் கும்பம் மற்றும் விமான கலச கும்பம் புறப்பாடு

கேரள ஜெண்டை மேளம், நாதஸ்வரம் ஒலிக்க தோரணங்கள். பதாகைகளுடன் கலசங்கள் புறப்பட்டன அருள் முகத்துடன் சிவாச்சாரியார்கள் கும்பங்களை தாங்கி வந்த போது எங்கள் அனைவரின் கண்களிலும் ஆனந்த கண்ணீர் பொங்கியது தாயே! இவ்வளவு காலம் கழித்து இன்று நீ அருள் புரிந்து அடியோங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொண்டாயே என்று மனம் முழுவதும் ஒரு அற்புத நிம்மதி பரவியது.

கோபுர கலச கும்பம் விமானத்தை அடைகின்றது.


விமான கலசங்களுக்கு பூஜை

விமான கலசங்களுக்கு மந்திர நீரால்
மஹா கும்பாபிஷேகம் நடைபெறும் அற்புத தருணம்.


குறித்த மங்களகரமான நேரத்தில் கோபுர விமான கலசத்திற்க்கு பூஜைகள் நடைபெற்று மஹா கும்பாபிஷேகம் சிறப்பாகம் நடைபெற்றது. கலச புனித நீர் வந்திருந்த பக்தர்கள் அனைவர் மேலும் தெளிக்கப்பட்டது.

பின்னர் விநாயகருக்கு முதலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது அடுத்து மூலவர் அம்மனுக்கும் அடுத்து ஆதி அங்காளம்மன், நாகர், பால முருகர் ஆகியோருக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மற்ற பரிவார தேவதைகளுக்கும் மஹா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.



பால முருகருக்கு மஹா கும்பாபிஷேகம்


மஹா கும்பாபிஷேகம் ஆனந்தமாக நடந்து முடித்த பின் தசதானம், தச தரிசனம் நடைபெற்று அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெற்றது, நதியாய்ப் பாயும் திரவியங்களால் அம்மன் மனம் குளிர அபிஷேகம் நடைபெற்றது. பின் மஞ்சள் காப்பு அலங்காரத்தில் அம்மன் அனைவருக்கும் அற்புத தரிசனம் தந்தாள்.



அம்மன் திருக்கல்யாணம்




கும்பாபிஷேகம் என்பது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறுவது வெறும் திருக்கோவிலை சீர்படுத்துவது மட்டுமில்லை. அந்த தெய்வத்தை வணங்கும் அனைவருக்கும் நன்மையை வேண்டியும் , அக்கோவில் அமைந்துள்ள கிராமத்தில் உள்ள அனைவரின் நன்மையும் வேண்டித்தான். எனவேதான் கும்பாபிஷேகம் நடந்த அன்று மாலை திருக்கல்யாணம் நடைபெறுகின்றது. இதன் மூலம் கன்னிப் பெண்களுக்கு உள்ள தோஷங்கள் நீங்கி அவர்கள் விரைவில மணம் கூட இந்த உற்சவங்கள் நடைபெறுகின்றன.

திருக்கல்யாணம் முடிந்த பின் காப்பு நீக்கும் நிகழ்ச்சியும் , முளைப்பாலிகைகள் கங்கை ( அமராவதி) ஆற்றில் சேர்க்கப்பட்டன. தற்போது நந்தா தீபமும் மண்டாலாபிஷேக நித்ய அபிஷேகங்களும் நடந்து கொண்டிருக்கின்றன.



அடியேனின் வேண்டுகோளை ஏற்று கும்பாபிஷேகத்திற்க்கு பொருள் உதவி செய்த அனைவருக்கும் அனந்த கோடி நன்றிகள். அம்மன் அங்காள பரமேஸ்வரி அனைவருக்கும் எல்லா நலங்களையும், வளங்களையும் வழங்க பிரார்த்திக்கின்றேன்.

5 comments:

மெளலி (மதுரையம்பதி) said...

இந்த தொடரை இன்றுதான் முழுவதும் படிக்க முடிந்தது. மிக அருமை.

அன்னையின் அருளை நானும் வேண்டிக் கொள்கிறேன்.

S.Muruganandam said...

வரும் ஞாயிறு (19-07-09) அன்று மண்டலாபிஷேகம் அன்று அன்னையிடம் அனைவரின் நலத்திற்காக வேண்டிக் கொள்கின்றேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இன்று தான் முழுக்க வாசித்தேன் கைலாஷி ஐயா!
அருமை! அழகான படங்கள்!

// 90 வருடங்களாக எதிர்பார்த்த ஒரு புண்ணிய நிகழ்ச்சி இன்று நிறைவேறப் போகின்றது என்று பேரானந்தம்//

அந்த மகிழ்ச்சி பதிவு முழுக்கவும் தெரிந்தது! :)

//சிறு வயது முதல் என்னை ஈன்ற அன்னையின் கனவாக இருந்த ஒரு ஆசை நிறைவேற போகின்றதே//

அன்னையின் அருளால்
அன்னையின் ஆசை ஈடேறியது!

//அடியேனின் வேண்டுகோளை ஏற்று கும்பாபிஷேகத்திற்க்கு பொருள் உதவி செய்த அனைவருக்கும் அனந்த கோடி நன்றிகள்//

நன்றிகள் அனைவர்க்கும்!
இது பற்றிப் பதிவில் அறிவித்து இருந்தீர்களா என்ன? அடியேன் பார்க்க, கூட வில்லையோ?

நிறைவான குடமுழுக்குப் பதிவுகளுக்கு நன்றி!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!

S.Muruganandam said...

இது பற்றிப் பதிவில் அறிவித்து இருந்தீர்களா என்ன? அடியேன் பார்க்க, கூட வில்லையோ?

பதிவிட்டிருந்தேன் ஐயா மஹா சிவராத்திரி பதிவில் அன்னையைப் பற்றி எழுதிய போது.

S.Muruganandam said...

//நிறைவான குடமுழுக்குப் பதிவுகளுக்கு நன்றி!
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்!//

அன்னை அங்காள பரமேஸ்வரியின் அருள் அனைவருக்கும் கிட்ட வேண்டுகிறேன்.