Sunday, May 10, 2009

திருக்காரணி யானை வாகன சேவை

ஆறாம் நாள் மாலை யானை வாகன சேவை

திரிபுவன சக்ரவர்த்தி திர்யம்பகேஸ்வரரரும், மஹா திரிபுர சுந்தரி அம்பாளும் இந்த ஈரேழு பதினான்கு லோகங்களையும் படைத்தும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் ஐந்தொழில் புரியும் அரசனாய் வெள்ளை யானையாம் ஐராவதத்தில் பவனி வரும் இந்த அழகைக் காணக் கண் கோடி என்பதில் ஐயம் இல்லை.


ஐயன் அர்த்த சந்திர அம்பு ஏந்தி அரச கோலத்தில் சுகாசனத்தில் அமர்ந்த கோலத்தில் சேவை சாதிக்க உடன் பாகம் பிரியா அம்மை வீராசனத்தில் கையில் கொஞ்சும் கிளி ஏந்தி சேவை சாதிக்கும் அழகே அழகு.

பாற்கடலைக் கடைந்த போது வந்த மங்களப் பொருள்களுள் ஐராவதமும் ஒன்று, எம்பருமான் தியாகராஜனாக அந்த மங்களப்பொருள்களையெல்லாம் மஹா விஷ்ணும் மற்றும் இந்திராதி தேவர்களுக்கு அளித்து விட்டு தான் மட்டும் யாருக்கும் வேண்டாத ஆலகால விஷத்தை உண்டு சகல ஜீவராசிகளையுன் காப்பாற்றி அருளிய பரமகருணாமூர்த்தி. இந்த யானை வாகன தரிசனம் செய்யும் போது அந்த தியாகராஜப் பெருமானை சரணடைவோம்.
ஐராவதத்தின் பின்னழகு


ஐராவதத்தில் அருள் பாலிக்கும் அன்னை சிவசொர்ணாம்பிகை

அன்னையில் கரங்களில் உள்ள ஒரு ஆயுதம் அங்குசம். எப்படி சிறிய அங்குசமானது மிகப்பெரிய யானையை அடக்குகின்றதோ அது போல நாம் நம்முடைய மனதை அடக்கி ஆளவேண்டும் என்பதை அங்குசம் குறிப்பிடுகின்றது. பாசாங்குசம் தரிக்கும் அன்னை மஹா காமேஸ்வரி பண்டாசுரனை வதைக்க சென்ற போது அங்குசத்தில் இருந்து தோற்றுவித்த சக்தி ஸம்பத்கரி. குரோதம் மற்றும் ஞானத்தின் வடிவான அங்குசத்திலிருந்து பிறந்தவள். அன்னையின் யானைப் படையின் தலைவி. யானையும் ஓம் என்னும் பிரணவத்தின் வடிவம். யானையின் மஸ்தகத்தில் மஹா லக்ஷ்மி வாசம் செய்கின்றாள்,

அங்குசம் கைக் கொண்டு நமக்கு அருளும் அன்னையை இன்று வைரம் சூடும் வாலையளாய் வழிபடுவோம்.

வைரம்

உரனார் உள்ளம் உவந்தீயும்

உரகம் ஆடும் வார்ச் சடையாய்

உவணம் ஊர்ந்தோ னிளையோளே

ஊழை ஒறுத்தாய் உத்தமியே

சுரனாய் வாழுஞ் சுகம் வேண்டேன்

சுடரும் வைரம் தேர்ந்தணியாய்

சுவையூ றொலிகொள் நுகரேசை

சூழும் புலன் சேர் சூலியளே


நரனாய் என்றும் பிறப்புற்றால்

நலமே நின்னை யேத்திடவே

நவையில் ஞானம் நயந்தேற்கு

நல்கும் நடனார் நாயகியே


அரனார் காசி விசாலாட்சி

அறங்கூர்ச் சைதைப் பொற்கொடியே

அடிமை கொண்டாய் அருள்வாமி

அன்னாய் சிவசொர் ணாம்பிகையே (6)


முருகன் முத்துக்குமரனின் எழில் தரிசனம்


அன்னையின் பின்னே அருட்குமரன் பின்னே
அன்பன் சண்டிகேஸ்வரர் என்ன அற்புதக் காட்சி


ஆறாம் நாள் திருநாளின் தாத்பர்யம்: ஆறாம் திருநாளில் அம்மையப்பரை தரிசிக்க நம் உள்ளத்தில் உள்ள காமம்( விருப்பம்), குரோதம்(கோபம்), உலோபம்(கஞ்சத்தனம்),மோகம்( மூவாசை), மதம்(ஆணவம்), மாச்சரியம்(பொறாமை) என்னும் ஆறு வகை அழுக்குகள்(மலம்) படிந்துள்ளன, அவற்றை விரட்டி நல்வழிப்படுத்துகின்றனர் அம்மையப்பர் இந்த ஆறாம் நாள் சேவையின் மூலம்.

நாளை திருத்தேரோட்டம்.....


No comments: