Tuesday, May 19, 2009

திருமுறை உற்சவம்

பன்னிரு திருமுறைகள் உற்சவம்

திருமுறையே சைவநெறிக் கருவூலம் தென் தமிழின் தேன்பா காகும்
திருமுறையே கயிலையின்கண் சிவபெருமான் செவிமடுத்த செந்தமிழ் வேதம்
திருமுறையே நடராசன் கரம்வருந்த எழுதிய அருள் தெய்வ நூலாம்
திருமுறையே சொக்கேசன் மதிமலிவாய் மலர்ந்தருளும் சிறப்பிற்றாமால்

வெள்ளை யாணையில் பன்னிரு திருமுறைகள் பவனி

சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானமாகிய உவமையிலா கலை ஞானம் பெற்ற ஞானாசிரியர்களால் திருமுறைகள் அருளப்பெற்றன.

சைவ நெறி கருவூலம் மண்ணக உணர்வு குறைந்து விண்ணக உணர்வு பெருக முதலாசிரியர் அன்னையின் ஞானப்பால் உண்ட ஆளுடைய பிள்ளையாம் திருஞான சம்பந்தர் விண்ணிலே அம்மையப்பரைக் கண்டு தோடுடைய செவியன் என்று பாட ஆரம்பித்தது, முயலகனை தீர்த்து, குளிர் ஜுரம் தீர்த்து, பொற்கிழி பெற்று, அராவிடம் தீர்க்கப்பெற்றது, ஆலவாய் அண்ணல் அருளால் வெப்பு நோய் நீங்கியது, புனல் வாதம் , அனல் வாதம் செய்து வெற்றி பெற்று இறிதியில் எலும்பு பெண்ணாகியது.

அப்பர் பெருமானின் பதிகங்களினால் நஞ்சு அமுதானது, கொலையாணை பணிந்தது, கடலில் கல் தெப்பமானது, பாம்பு தீண்டியவன் உயிர் பெற்றது. திருவையாற்றில் செம்பொன்சோதியைக் கண்டு இன்புற்றார்.

வன்தொண்டர் சுந்தரர் திருத்தொண்டர் தொகை பாடி பசித்திருந்தபோது பொதி சோறு அளித்தது, நடுநிசியில் தொண்டர் நாதனை தூது அனுப்பியது, திருமுதுகுன்றத்தில் பொன் பெற்றது.

முதலையுண்ட பாலனை அழைப்பித்தது, நரி பரியாகி, வைகை பெருகி, பிட்டுக்கு மண் சுமந்து, புத்தரை வாதில் வென்று ஈழப் பெண்ணின் ஊமைப் பெண்ணை பேச வைத்த மாணிக்க வாசகர் முன் இறைவனே தோன்றி பஞ்சாட்சரத்தை முதலாக கொண்ட சிவபுராணம் பாட வைத்த பரமன் ஏடெழுத திருவாசகம் மலர்ந்தது.

பதினோராம் திருமுறையினைப் பாடி அருளியாதால் எம் ஐயனும் ஞானாசிரியரில் ஒருவரானார்.

சிவபாத சேகரன், இராஜராஜன், திருநாரையூர் நம்பியாண்டார் நம்பி மூலம் இத்திருமுறைகளை மீட்டு ஒதுவார்களைக் கொண்டு பாடச்செய்தான்.




இவ்வளவு சிறப்புக்கள் பெற்ற திருமுறைகள் உற்சவம் திருக்கரணியில் பன்னிரண்டாம் நாள் மாலை நடைபெறுகின்றது. பன்னிரு திருமுறைகள் வெள்ளை யானை மேல் அலங்காரம் செய்யப் பெற்று திருவிதி வலம் வருகின்றன. ஓதுவார் மூர்த்திகள் பன்னிரு திருமுறைகளைப் பாடியபடி உடன் வலம் வருகின்றனர். ஐயனின் அருளை, கருணையை, புகழைப் பாடும் பதிகங்களுக்கும் அவருக்கு செய்யும் சிறப்பு செய்யப்படுகின்றது.

மாலை ஆறு மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு உற்சவ சாந்தி சிறப்பு நவ கலச அபிஷேகம். ஆகம விதிப்படி இறை மூர்த்தங்கள் திருக்கோவிலை விட்டு வெளியே சென்று விட்டு வரும் போது சாந்தி அபிஷேகம் செய்ய வேண்டுமென்பது மரபு.
சோமாஸ்கந்த மூர்த்தத்தில் மூன்று மூர்த்தங்கள், முருகர் வள்ளி தேய்வானையுடன், விநாயகர், சொர்ணாம்பாள் மற்றும் சண்டிகேஸ்வர் என்று ஒன்பது மூர்த்தங்களுக்கு தனித் தனியாக கலசம் ஸ்தாபித்து யாகத்தினால் மந்திரப் பூர்வமாக சுத்திகரித்து நதியாய்ப் பாயும் திரவியங்களால் அபிஷேகம் நடைபெறுகின்றது.

உற்சவ சாந்தி நவகலச அபிஷேக யாகம்

சாந்தி அபிஷேகம் முடிந்த பின்
பஞ்ச மூர்த்திகள் அருட்காட்சி


பின்னர் உற்சவ சாந்தி தேவார இன்னிசைக் கேட்டருளி யதாஸ்தானம் திரும்புகின்றனர் பஞ்ச மூர்த்திகள். இத்துடன் இத் தொடர்பதிவு நிறைவடைகின்றது. விநாயகர் உற்சவம் தொடங்கி சாந்தி அபிஷேகம் வரை அனைத்து உற்சவங்களையும் தரிசனம் செய்ய அருள் புரிந்தார்கள் அம்மையப்பர்கள், அவ்வருட்காட்சிகளையே அன்பர்களாகிய தங்களுடன் பகிர்ந்து கொண்டேன். வந்து தரிசனம் பெற்ற அனைவருக்கும் நன்றி.

2 comments:

தங்க முகுந்தன் said...

அருமையான பதிவு!
தில்லைச் சிற்றம்பலவாணனுக்கு ஒரு பதிவு - திருமுறைக்குத் தாங்கள் கொடுக்கும் மதிப்புக்கும் மரியாதைக்கும் எமது வாழ்த்துக்கள்! இன்று தான் கண்டேன் இந்த அரும்பதிவை!
இனி அடிக்கடி வருவேன்!

S.Muruganandam said...

வாருங்கள் தங்க முகுந்தன். முதல் முறையாக வருகின்றீர்கள்.

//இனி அடிக்கடி வருவேன்!//

அவசியம் வந்து அருள் தரிசனம் பெறுங்கள்.