Sunday, February 22, 2009

மஹா சிவராத்திரி -2 (அங்காளபரமேஸ்வரி)

காரத்தொழுவு அங்காளபரமேஸ்வரி

மேல் மலையனூர் ஆதி அங்காளி



முன்னை பழம் பொருட்கும் முன்னைப் பழம் பொருளும் பின்னைப் புதுமைக்கும் பேற்றும் அப்பெற்றியனுமான சகல புவனங்களையும் ஜீவராசிகளையும் படைத்தும், காத்தும், அழித்தும், அருளியும் மறைத்தும் ஐந்தொழில் புரிந்து விளையாடும் சிவ பரம்பொருளுக்கு உரிய மஹா சிவராத்திரி அம்மைக்கும் மிகவும் உரியது, அதுவும் குறிப்பாக பிரம்ம சிரத்தேசம் செய்த காலத்தில் அன்னை எடுத்த அவதாரமான அங்காள பரமேஸ்வரிக்கு மிகவும் உகந்த நாள் இன்றைய மஹா சிவராத்திரி நன்னாளில் அடியேன் குல தெய்வமான கோவை மாவட்டம், உடுமலை வட்டம், காரத்தொழுவு அங்காள பரமேஸ்வரி அம்மனின் மகிமை மற்றும் மஹா சிவராத்திரி பெருவிழா பற்றியும், சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா அங்காளம்மன் பிரம்மோற்சவத்தின் சில காட்சிகளையும் காண்போம்.

சுமார் நூறு வருடங்களுக்கு மேலாக கும்பாபிஷேகம் நடைபெறாத காரத்தொழுவு அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் அம்மனின் திருவுள்ளக் கருணையினால் மீண்டும் திருப்பணிகள் துவங்கி கோவில் முழுவதும் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் வரும் வைகாசி மாதம் (28-05-2009) அன்று சிறப்பாக நடைபெற உள்ளது. இத்திருப்பணியில் கலந்து கொள்ளுமாறு அன்பர்கள் அனைவரையும் தாழ்மையுடன் அழைக்கின்றேன்.

அடியேனின் குல தெய்வம் அங்காள பரமேஸ்வரி அம்மைக்கு உகந்த விரதம் இந்த மஹா சிவராத்திரி விரதம். விவரம் தெரிந்த நாள் முதலாய் எங்கள் குலதெய்வத்தை இந்நாளன்று கொண்டாட மறந்ததில்லை எனவே ஒரு மஹா சிவராத்திரி நாளன்று இப்பதிவு.

2ம் நாள் உற்சவம் கம்பா நதிக் கோலம்

என் அன்னையை பற்றி கூறும் போது ஒன்றை கூறாமல் இருக்க முடியாது. 70களில் நடந்த சம்பவம். கிராமத்துக் கோவில் என்பதால் அதிக பாதுகாப்புக் கிடையாது. உற்சவ அம்மன் சிலை மொத்தம் ஒரு அடி தான் ஆனால் அம்மையின் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை, இடக்காலை மடக்கி வலக்காலை தொங்க விட்டு வீராசனத்தில் நான்கு கரங்களில், சூலம், கபாலம், உடுக்கை, பாசம் தாங்கி அக்னி ஜுவாலையுடன், திருவாசியில் உள்ள கோலங்கலும், ஓம் என்னும் பிரணவமும், ஐந்து தலை நாகமும் கொண்டு மிகவும் எழிலாக வீற்றிருக்கின்றாள் அன்னை ஒரு பக்கம் இருந்து பார்த்தால் அன்னை உக்ர ரூபிணியாய் காட்சி தருவாள் அந்த ஆதி பராசக்தி அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. அதே நாம் மனக் கனிந்து தாயே நான் உன் பிள்ளையல்லாவா? லோக மாதாவே என்று பார்த்தால் அப்படியே சாந்த சொரூபியாக காட்சி தருவாள் அன்னை திரிபுர சுந்தரி இராஜ ராஜேஸ்வரி இவ்வாறு ரௌத்ரமும் சௌந்தர்யமும் இனைந்த மூர்த்தம் அன்னை அங்காள பரமேஸ்வரி.

5ம் நாள் உற்சவம் அங்காள பரமேஸ்வரி ரிஷப வாகனம்

அன்னையின் அழகில் மயங்கிய சில துஷ்டர்கள் அந்த லோக மாதாவையே திருட முயற்சி செய்துள்ளனர். அம்மை தன்னை கோவிலிருந்து வெளியே எடுத்துச்செல்ல அனுமதித்தாள், திருடர்களும் மனம் மகிழ்ச்சி கொண்டு கோவிலின் வெளியே சென்றனர். அங்கு தான் அன்னை தன் சக்தியை அவர்களுக்கு காண்பித்தாள் அக்னி ஜுவாலையையே மகுடமாக கொண்ட அந்த அங்காள பரமேஸ்வரி, ஆதி சக்தி தீப்போல தகித்தாளோ? அல்லது ஒன்றாய் அரும்பி பலவாய் விரிந்த அம்மை எவ்வாறு கனந்தாலோ? அல்லது அவர்கள் முன் தன் நாக ரூபத்தைக் காட்டினாளோ? என்ன சோதனை கொடுத்தாள் என்று தெரியவில்லை, துஷ்டர்களை கருவறுக்கும் அம்மனின், துர்கா தேவியின், காளியின் உக்கிரம் தாங்க முடியாமல் , அன்னையை திருடிய அந்த கயவர்களால் அப்படியே அருகில் இருந்த வேலியில் அம்மனைப் போட்டு விட்டு ஓடி விட்டனர். அடுத்த நாள் காலை பூசை செய்ய வந்த பூசாரி, உற்சவ அம்மனைக் காணாது திகைத்தார். அம்மை தன் இருந்த இடத்தை உணர்த்த கோவிலை சுற்றி தேடிய போது வேலியில் அன்னை கிடைத்தாள் இது தாய் நடத்திய ஒரு திருவிளையாடல்.

5நாள் உற்சவம் சிவபெருமான் ( சோமாஸ்கந்தர்)


காவிரி நதியின் துணை ஆறான அமராவதி ஆற்றங்கரையில் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன், கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மஹா மண்டபத்துடன் ஒரு பிரகாரத்துடன் கோவில் கொண்டுள்ளாள் அன்னை. அன்னையின் இன்னொரு சிறப்பு அம்மையின் வாகனமாக நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அடியேன் தரிசித்த பல ஆலயங்களில், மயிலை கற்பகாம்பாள், காஞ்சி காமாட்சி உட்பட பல ஆலயங்களில் கூட அன்னைக்கு சிங்கமே வாகனமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இக்கோவிலிலே நந்தி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. ஆகம விதிப்படி சிவபெருமான் மற்றும் அம்மையின் விமானங்கள் அமைப்பதில் சில நுணுக்கங்கள் உள்ளன சிவ பெருமானின் விமானம் பொதுவாக நாகர (சதுர) வடிவத்தில் இருக்கும் ஐயன் சிவம் என்பதால் மேலே ஒரு கலசம் இருக்கும். தொண்டை மண்டலத்தில் கஜ பிருஷ்ட விமானம் என்னும் யானையின் பின் பக்கம் போன்ற கர்ப்பகிரகமும், விமானமும் உள்ள தலங்கள் அதிகம் உள்ளன. கஜ பிருஷ்ட விமானத்தில் மூன்று கலசங்கள் ஒன்றுக்கு பின் ஒன்றாக பிரதிஷ்டை செய்யப்படுகின்றன. ஆனால் அம்மனின் விமானங்கள் ராஜ கோபுரம் போல் அமைக்கப்படுகின்றன.அம்மை சக்தி அல்லவா? எனவே முன்று நிலைகளோ அல்லது ஐந்து நிலைகளோ இருக்கும் அம்மனின் விமானத்தில், எனவே முன்று அல்லது ஐந்து கலசங்கள் பிரதிஷ்டைசெய்யப்படுகின்றது. இக்கோவிலும் இவ்வாறே மூன்று நிலை கோபுர வடிவத்தில் மூன்று கலசங்களுடன் விமானம் அமைந்துள்ளது. ஆயினும் நந்தி வாகனமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளதால் அங்காளம்மன் உக்ர தேவதை என்றாலும் இக்கோவிலில் ஈஸ்வரி ( சிவ சக்தி) அம்சமாகவே குடி கொண்டுள்ளாள். அடியேன் இவ்வாறு நந்தி வாகனத்தை அம்மைக்கு பார்த்த தலம் கோவை பேரூர் பச்சை நாயகி (மரகதாம்பாள்) ஆனால் அங்கு அம்மனின் விமானம் நாகர வடிவத்தில் ஒரு கலசத்துடன் முழு சிவ அம்சமாக அமைந்துள்ளது. இவ்வாறு சிவ சக்தி ஐக்கிய ரூபிணியாய் ஸ்ரீ லலிதாம்பிகையாய், கேட்டவர்க்கு கேட்டவரம் அருளும் கற்பகமாய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள் அன்னை அங்காளபரமேஸ்வரி.

5ம்நாள் உற்சவம் வள்ளி தேவஸேனா சமேத முருகர்

இவ்வாலயத்தின் இன்னொரு தனி சிறப்பு அம்மனின் ஆயுதம் அலகு கத்தி. மேற் பக்கம் வாள் போன்று இருக்க நடுவில் கைப்பிடி உள்ளது கீழ் பக்கம் திரிசூலம் போல் மூன்று முனைகளுடன் உள்ளது, திரிசூலமும் வாளும் கலந்தது இந்த அலகு கத்தி. மஹா சிவராத்திரியன்று அலகு தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. சக்தி கும்பத்தின் மேல் கத்தி முனையில் இந்த அலகு கத்தி நிற்பதே அலகு தரிசனம்.

மூலவர் அம்மன் மூன்றடக்கு ஜ்வாலா மகுடத்துடன் , சுகாசனத்தில் , மேற்கரங்களில் வாள், உடுக்கை தாங்கியும், கீழ்க்கரங்களில் திரி சூலமும், கபாலமும் தாங்கி, வலக்காலை தாமரை மலரில் தாங்கிய கோலத்தில் எழிலாக அருட்காட்சி தருகின்றாள். அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத அங்காளவல்லியின் அழகை வர்ணிப்பது அந்த ஆதிசேஷனால் கூட முடியாது. ஆலயத்தில் ஆதி அங்காளம்மன் சிலையும் உள்ளது, ஆதியில் முன்னோர்கள் வழிபட்ட அம்மன் முக்கோணக் கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிவமைக்கப்பட்ட அம்மன், ( ஆதி காலத்தில் வணிக மக்களான எங்கள் முன்னோர்கள் வண்டியில் பயணம் சென்று கொண்டிருந்த போது அவர்கள் மூட்டையில் அன்னை கல் வடிவில் வந்து அமர்ந்து கொண்டாள் என்றும், கல்லை தூக்கி எறிந்தாலும் பின்னும் அதே மூட்டைக்குள் வந்து பின் அம்மன் தான் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி என்றும் தன்னை குல தெய்வமாக ஏற்று வழிபடும் படி ஆணையிட பின் கோவில் உருவானது என்பது செவி வழிச் செய்தி) மஹா மண்டபத்தில் கணபதியுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்றும் இந்த அம்மனுக்கும் பூசைகள் நடைபெறுகின்றன.

5ம்நாள் உற்சவம் சண்டிகேஸ்வரர் ரிஷப வாகனம்

இனி இத்திருக்கோவிலில் நடை பெறும் மஹா சிவராத்திரி உற்சவம் பற்றிப் பார்ப்போம். சதுர்த்தசியன்று மாலை தொடங்கி சிவராத்திரி இரவு முழுவதும் தொடர்ந்து அமாவாசை இரவு வரை உற்சவம் நடைபெறுகின்றது. விழாவில் அறுவருக்கு கங்கணம் கட்டப்படுகின்றது. இவ்விழா முடியும் வரை இவர்கள் கோவிலேயே இருந்து விழாவை முடிக்கின்றனர்.


விழா தொடங்க முதலில் அம்மன் ஆலயத்தில் புண்யாவாஹனம் நடை பெற்று ஆலயம் வேத மந்திரங்களினாலும், துர்கா ஸுக்தத்தினாலும், புனித நீராலும் சுத்திகரிக்கப்படுகின்றது. பின்னர் சுற்று நீர், புகை நீர் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. முதலில் அனைவரும் வேப்பிலையால் பல் விளக்கி , கிணற்றடியில் குளித்து திருவிழாவிற்கு தயாராகின்றனர்.

பின் முதலில் அம்மை அழைப்பு நிகழச்சி நடைபெறுகின்றது. உற்சவ அம்மனை முன் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து அபிஷேகம் செய்து , பூஜைகள் செய்து பின் நான்கு திக்குகளிலும் திரும்பி நின்று (பிரம்ம)கபாலம் வைத்து பூஜை செய்து தாயே உன் உற்சவம் சிறப்பாக நடக்க அருள் புரி என்று வேண்டி வணங்கி கற்பூர தீபம் காட்டி கங்கணம் கட்டும் அறுவருக்கும் தாம்பூலம் வழங்கி பம்பையால் அம்மை அழைத்து யுகே! யுகே! சத்தத்துடன் அம்மை அங்காள பரமேஸ்வரி திருகோவிலுக்குள்ளே கோவிலை வலம் வந்து எழுந்தருளுகின்றாள்.


5ம் நாள் உற்சவம் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு


பின் கணபதிக்கும், ஆதி அங்காள அம்மனுக்கும் முதலில் அபிஷேகம் நடைபெற்று பின் மூலவருக்கும் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்துடன் பூஜை முடித்து கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது, உற்சவம் முடியும் வரை அதில் கலந்து கொள்பவர்களுக்கு எந்தவித தடங்கலும் வரக்கூடாது என்று முதலில் வினாயாகருக்கும், பின் ஆதி அங்காளம்மனுக்கும், மூலவர் அம்மனுக்கும், உற்சவர் அம்மனுக்கும் , நந்திக்கும் முதலில் கங்கணம், அடுத்து அலகு கத்தி, கபாலம், மணி ஆகியவற்றுக்கும் பின் அறுவருக்கும் கங்கணம்.

இதற்குப் பின் கொடியேற்றம். 5 நாட்களுக்கும் குறைவான உற்சவம் என்பதால் தனி கொடி மரம் கோவிலில் இல்லை. பச்சை மூங்கிலில் கரும்பு சோகை கொண்டு கயிறாக திரித்து கட்டிய கொடி நவ தான்யம் மூட்டையாக கட்டப்படுகின்றது. யுகே! யுகே! முழக்த்துடன் கோவிலை சுற்றி கொடியை எடுத்து சென்று பின் கொடி ஏற்றப்படுகின்றது.

6ம் நாள் உற்சவம் கஜலக்ஷ்மி அலங்காரம்


அடுத்தது சிவராத்திரியின் முக்கிய நிகழ்ச்சியான முகக்கப்பரை எடுக்கும் நிகழ்ச்சி. பிரமனின் ஆணவம் கொண்ட ஐந்தாவது தலையை சிவபெருமான் கிள்ள அந்த தலை அவர் கையில் ஒட்டிக் கொள்ள பிக்ஷடணராய் அலைய, அம்மை அதைக் கண்டு அந்த பிரம்ம கபாலத்தை தன் கையில் ஏந்திக்கொள்ள அம்மன் பித்துப் பிடித்து அலைய அண்ணன் திருமாலின் யோசனைப்படி சிவராத்திரி நன்னாளில் சோறு செய்து இறைக்க அந்த பிரம்ம கபாலம் அந்த சோற்றை உண்ண இறங்க அம்மை அதை தன் காலடியில் அடக்கி அங்காள பரமேஸ்வரியாய் மலையனூரில் கோவில் கொண்ட வரலாறு வருடாவருடம் முககப்பரை நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகின்றது இவ்வாலயத்தில். முகக்கப்பரையில் மூன்று முகங்களே செய்யப்படுகின்றது . ஒரு பெரிய முகம் மேல் பகுதியிலும், மற்ற இரண்டு முகங்கள் கீழ்ப்ப்பகுதியிலும் இருக்கும் விதமாய் முககப்பரை செய்யப்படுகின்றது. கண்களுக்கு கோழி முட்டையும், பற்களுக்கு உரித்த ஆமணக்கு விதைகளும், மீடையும், சிவப்பு, கருப்பு, பச்சை என்று ஒவ்வொரு முகத்திற்கு வர்ணமும், சுற்றியும் அரளிப்பூ மாலையும் , பின் பக்கம் வேப்பிலை கொத்துகளும் . தொங்க கீழாக சிவப்பு புடவை தொங்கவிட்டு முககப்பரை பார்ப்பதற்கு சிறிது திகிலாகவே இருக்கும். கோவிலின் முன் முகக்கப்பரைக்கு பூஜை செய்து பிரம்ம கபாலத்திற்கு சோறு இறைத்துக் கொண்டே முகக்கப்பரையை எடுத்து ஆக்ரோஷமாக பம்பை உடுக்கை நாதத்துடன் சப்பரத்தில் மயான பூஜைக்கு அம்மை புறப்படும் போது நள்ளிரவாகிவிடும். கப்பரை எடுத்து ஆடிச் செல்லும் போது அம்மனின் சப்பரம் தானே அப்படியே சுற்றி, ஆடி வரும் அம்மனின் அருளால். பின் மயானம் சென்று அந்த் கப்பரையை எறிந்து விட்டு பம்பைக்காரர் உடம்பு முழுவதும் விபூதி அணிந்து சிவ பெருமான் வேடத்தில் வர பிரம்ம கபாலம் கையிலிருந்து நீங்கிய ஐதீகத்துடன் முகக்கப்பரை நிகழச்சி முடிவடைகின்றது. (இந்நிகழ்ச்சியையே சில கோவில்களில் மயான கொள்ளை என்று கொண்டாடுகின்றனர். சில ஆலயங்களில் மயானக் கொள்ளை என்பது வல்லாளனின் மனைவியின் நிறை மாத கருவை அழித்து அவனது ஏழு சுற்று கோட்டையை அழித்து அவனை வதம் செய்த நிகழ்ச்சியாக கொண்டாடப்படுகின்றது.)

பின் கோவிலுக்கு திரும்பி வந்து அம்மனுக்கு பள்ளய பூஜை நடைபெறுகின்றது. சிவராத்திரி இரவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறுகின்றது. மேல் மலையனூர், திருமூர்த்திமலை, கொடுமுடி ஆகிய தலங்களில் இருந்து வந்த தீர்த்தங்களினால் அன்னைக்கு ஆனந்தமாக அபிஷேகம் நடைபெறுகின்றது. பள்ளயம் என்பது உப்புப் போடாமல் வேகவைக்கப்பட்ட மொச்சைக் கடலை , மஹா சிவராத்திரியன்று கொங்கு நாட்டில் எல்லா அம்மன் ஆலயங்கலிலும் இதுவே பிரசாதம். அம்மனுக்கு இந்த பள்ளயமும், மாவும் நைய்வேத்யமாக படைக்கப்பட்டு பூஜை முடிகின்றது. பள்ளய பூஜை முடியும் போது அதிகாலை நேரமாகி விடும். பின் அம்மன் அமராவதி ஆற்றுக்கு எழுந்தருளுகின்றாள்.

7ம் நாள் உற்சவம் மீனாக்ஷி அலங்காரம்


ஆற்றிலே அம்மனின் தீர்த்தவாரி, அமராவதி ஆற்றிலே அன்னை இன்று நாம் எல்லோரும் உய்ய தலை முழுகுகின்றாள். பின்னர் ஆற்றிலிருந்து ஐந்து கும்பங்கள் ஸ்தாபிதம் செய்து கொண்டு வருகின்றோம். மேலும் அலகு தரிசனத்திற்காக அலகு கத்தியும் அலங்கரிக்கப்பட்டு எடுத்து வரப்படுகின்றது. மேலும் பள்ளயம் பிரிப்பதற்காக ஆற்று களி மண்ணால் ஆன நான்கு நந்திகளும் எடுத்து வரப்படுகின்றது . மொத்தம் ஐந்து கும்பங்கள் ஸ்தாபனம் செய்யப்படுகின்றது, நடுவில் சக்தி கும்பம் இரண்டு செம்புகள் கொண்டது மற்ற நான்கு கும்பங்களும் ஒரு சொம்பு. ஆற்றில் தலை குளித்த அங்காள பரமேஸ்வரி ஆகப்பட்டவள் அருள் முகத்துடன் ஆடி ஆடி வருகின்றாள் திருக்கோவிலுக்கு கும்பங்களுடனும், அலகு கத்தியுடனும், வரும் வழியில் அம்மனின் சப்பரம் வரும் முறை அவளின் அருள் சில சமயம் ஒரே இடத்தில் நின்று விடுவாள் அன்னை பம்பைக்காரர் அம்மை அழைத்து கூட்டி வர வேண்டும். ஆற்றிலிருந்து அம்மன் கோவிலுக்குள் வரும் போது நந்தி திரையால் மூடப்பட்டிருக்கும். கோவிலை வலம் வந்து அருளுடன் முதலில் சக்தி கும்பமும், பிறகு மற்ற கும்பங்களும் சன்னதிக்குள் செல்ல இறுதியாக அலகு கத்தி யுகே! யுகே! கோஷத்துடன் உள்ளே கொண்டு செல்லப்படுகின்றது. பின் அலகு தரிசனம்.

அன்னை அங்காள பரமேஸ்வரி அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி! மஞ்சள் காப்பு அலங்காரத்தில் கொண்டை முடி அலங்கரித்து ஸர்வாபரண பூஷதையாய் மந்தகாச புன்னகையுடன் எழிலாக காட்சி த்ருகின்றாள். அலகு கத்தி எந்தவித பிடிமானமும் இல்லாமல் சக்தி கும்பத்தின் மேல் வாள் நுனையில் நிற்கின்றது திரிசூலப் பகுதி மேல் பக்கம் இருக்கின்றது. இந்த தரிசனம் ஒரு நாழிகை நேரம் மட்டுமே கிடைக்கும், அலகு தரிசனம் சிவ சக்தி ஐக்கியத்தை குறிக்கின்றது. அதனால் தான் நந்தியை திரை போட்டு மூடி வைத்திருக்கின்றோம்.


அலகு தரிசனம் முடிந்த பின் பள்ளயம் பிரித்தல் நிகழ்ச்சி நடைபெறுகின்றது. நந்தியை பார்ப்பதற்காகாக அம்மன் ( பூசாரி அம்மனாக) மிளகு பள்ளயம், žரக பள்ளயம், கடுகு பள்ளயம், சொர்ண பள்ளயம் கொண்டு வர பம்பைகாரர் நந்தியை காட்டுகிறேன் வேறு பள்ளயம் கொண்டு வா, நடராஜர் போல ஆடி வா, கோபால கிருஷ்ணர் போல குழலூதி வா என்று கூறி ஆற்றிலிருந்து கொண்டு வந்த நான்கு களி மண் நந்திகளையும் மறைத்து வைத்து விடுகின்றார் இறுதி சுற்றில் நந்தி இங்கு இல்லை அடுத்த வருடம் வா அம்மா என்று அனுப்பி விடுகின்றார். இந்த அலகு தரிசனம், நந்தியை மறைத்தல் பள்ளயம் பிரித்தல் ஆகியவற்றின் தாத்பரியம் என்ன என்று விளங்கவில்லை. எங்கள் மூத்தவர்களை கேட்டுப் பார்த்தேன் யாருக்கும் தெரியவில்லை. பள்ளயம் பிரித்தல் நிகழ்சிக்குப் பிறகு பொங்கல் மற்றும் மா விளக்கு பூசை, கோவிலேயே பொங்கல் வைத்து மா விளக்குடன் சேர்த்து அம்மனுக்கு படைத்து தேங்காய் பழம், தாம்பூலம் படைத்து வழி படுகின்றோம். பொங்கல் பூசை மாலை மூன்று மணி வரை நடை பெறுகின்றது.

மாலை நான்கு மணிக்கு மேல் பரி வேட்டை நிகழ்ச்சி ஆரம்பம். கொடுங்கோலன் வள்ளாளனை வதம் செய்ய, அவனது மனைவியின் நிறை மாத கர்ப்பத்தை நிர்மூலம் செய்ய (துஷ்ட நிக்ரக சிஷ்ட பரிபாலனத்திற்காக) அதாவது துஷ்டர்களை அழித்து பக்தர்களை காப்பாற்ற அன்னை புறப்படுகின்றாள். வேட்டைக்காக அம்மன் காட்டில் வழியே செல்லும் போது அங்கு வந்த ஒரு வேடன் ஒருவன், மான் வேட்டையாட வந்தவன் அன்னைப் பார்த்து மான் என்று அம்பு போடுவது போல் ஒரு வேடிக்கையான ஒரு சடங்கு நடத்தப்படுகின்றது. ஒருவர் காட்டுமிராண்டி வேடன் போல வேடம் இடுகின்றார். இலை தலைகளால் ஆன உடை கையிலே வில் அம்பு, தலையிலே கோழி இறகு, அம்புராத்தூணியிலே தேங்காய் குடுமி, வாழைப்பழ சீப்பு, தேங்காய் ஓடு , முதலியன வைத்து கட்டி வருகின்றான். அவன் அம்மனைப்பார்த்து அம்பை குறி வைக்க பூசாரி அவரிடம் என்ன செய்கின்றாய் என்று கேட்கின்றார். மானை நோக்கி குறி வைத்துள்ளேன் என்கிறான் வேடன், அட முட்டாளே! இது அம்மன் மானல்ல என்று கூறுகிறார், இல்லை இல்லை மான் தான் என்று கூற நன்றாகப்பார் அம்மன் என்று கூற வேடன் கூர்ந்து பார்த்து விட்டு ஐயையோ! ஆமாம் அம்மன் தான் நான் அம்மன் மேல் அம்பு போடப் போனேனே என்று அழத்தொடங்குகிறான் , அவனை சமாதானப் படுத்தி அன்னை கோபம் கொள்ள மாட்டாள், மன்னிப்புக் கேட்டு வணங்கு, பூசைக்கு என்ன கொண்டு வைத்திருக்கிறாய் என்று கேட்கிறார், அங்காள பரமேஸ்வரிக்கு žப்பும், என்ணையும் , கண்ணாடியும் கொண்டு வந்திருக்கின்றேன் என்று கூறி அம்புராத் தூணியை அவிழக்கின்றான் அதில் இருப்பதோ பழ žப்பு பழம் இல்லாமல், தேங்காய் மூடி தான் கண்ணாடி என்கிறான், பரவாயில்லை உன் žர் அம்மா ஏற்றுக் கொள்கின்றாள், இனி விழுந்து கும்பிடு என்று கூற தலை கீழாக அம்மனுக்கு எதிர் பக்கம் தலை வைத்து வணங்குகின்றான். பூசாரி அவனை எழுப்பி நேராக படுக்க வைத்து, தாயே தெரியாமல் தவறு செய்து விட்டான், காட்டில் திரியும் வேடன் தானே மன்னித்து விடு தாயே ! என்று வேண்ட பின் பூஜை செய்து அவனுக்கு திருநீறு வழங்குகிறார். வெளிப்பார்வைக்கு இது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சி போல தோன்றினாலும் ஆழ்ந்த உள்ளார்த்தம் உள்ளது. வேடன் தான் வாத்மா, இந்த உலகத்தில் மாயையினால் சூழப்பட்டு அவன் பரமாத்மாவாம் அம்மனை மறந்து தன் அன்றாட வாழ்க்கையில் சிக்கி வயிற்றுப் பிழைப்புக்காக மானை தேடி அலைந்து கொண்டிருக்கின்றான். அவன் அந்த மாயை நீங்கி பரமாத்வாவுடன் இனைவதைக் காட்டுவதே இந்த வேடன் உற்சவம்.


பின் பரி வேட்டை உற்சவம் நடைபெறுகின்றது. ஒரு புளிய மரத்தினடியில் ஏழு சுற்றுக் கோட்டை அமைக்கப்பட்டுள்ளது அம்மன் அங்கு வந்தவுடன் அம்மை வள்ளாள கண்டனின் ஏழு சுற்றுக் கோட்டையை அழித்து அவனை வதம் செய்து, அவனது மனைவியின் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தவளை வெறும் வயிறாக்கி, கோட்டைக் காவலுக்காக இருந்த புலிகளை கொன்று பமபையை உருவாக்கிய வரலாற்றை பாடிக் கொண்டே அந்த ஏழு சுற்றிக் கோட்டையை காலால் அழிக்கின்றார் பம்பைக்காரர். முற்காலத்தில் இந்நிகழ்ச்சியின் போது சூலாடு குத்தும் வழக்கம் இருந்திருக்கின்றது. இப்போது பூசணிக்காய் தான் பயன்படுத்தப்படுகின்றது. பின் அந்த பள்ளயம் பிரித்து அனைவருக்கும் வழங்கப்படுகின்றது. துஷ்டனை வதம் செய்த அம்மன் கோவிலுக்கு திரும்பி வருகின்றாள் கோவில் வாசலில் அம்மனுக்கு மங்களம் பாடி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகின்றது.


அங்காளம்மன் திருக்கல்யாணக் கோலம்

மஹா சிவராத்திரி திருவிழாவில் இறுதியாக அம்மனுக்கு மஹா அபிஷேகம் நடைபெறுகின்றது.அம்மன் கோவிலை விட்டு வெளியே சென்று வருவதால் பிராயசித்த அபிஷேகமாக மஹா அபிஷேகம் செய்யப்படுகின்றது. இப்போதும் கும்ப ஸ்தாபிதம் செய்யப்பட்டு அர்ச்சகர்களால் வேத முறைப்படி பூஜை நடைபெறுகின்றது. முதலில் அம்மனுக்கு பால், தயிர் , பஞ்சாமிர்தம், மஞ்சள், இள நீர், தேன் சந்தனம் முதலியவற்றால் அபிஷேகம் நடை பெறுகின்றது. பின் ஆற்றிலிருந்து வந்த கும்பங்களின் நீரால் அபிஷேகம் நடைபெறுகின்றது. பின் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், மஹா சிவராத்திரி உற்சவம் சிறப்பாக நடைபெற்றதால் அம்மனின் முகத்தில் அற்புதமான சிரிப்பை காணலாம். தத்ரூபமாக அம்மன் ஒய்யாரமாக புன்னகைப்பது நன்றாகவே தெரியும். பின் தூப, தீப நைவேத்யங்களுடன், வேத கோஷம், மந்திர புஷ்பம், அபிராமி அந்தாதி, ஆசிர்வாதம், க்ஷமா பிரார்த்தனை ஆகியவற்றுடன் விழா முடிவிற்கு வருகின்றது. தாயே! அடுத்த வருடமும் இது போலவே உன் திருவிழா சிறப்பாக நடைபெற வேண்டும் என்று மனமுருக பிரார்த்தனை செய்து கொடியிறக்கி கங்கணம் அவிழ்த்து கங்கையில் சேர்த்து , அம்மனின் நைவேத்யமாம் தித்திக்கும் கல்கண்டு பொங்கல் சுவீகரித்து வீடு திரும்புவோம்.

நினைவு தெரிந்த நாள் முதல் மஹா சிவராத்திரி நாளில் அம்மனின் காலடியில் கிடக்கும் அடியேன் ஒரு வாய்ப்புக் கிடைத்ததால் அந்த அம்மனின் விழாவை எழுத்தில் கொண்டு வர செய்த அம்மனுக்கு அனந்த கோடி வணக்கங்கள்.



இப்பதிவில் உள்ள அம்மனின் படங்கள் எல்லாம் சென்னை லேக் ஏரியா அங்காளம்மன் திருக்கோவிலின் பிரம்மோற்சவத்தில் எடுக்கப்பட்டவை. 78வது ஆண்டாக இவ்வருடமும் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது. முதல் நாள் கொடியேற்றம், தினமும் இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா, ஐந்தாம் நாள் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, எழாம் நாள் பகலில் தேர், அமாவாசையன்று மயான கொள்ளை பின்னர் மகிஷாசுர மர்த்தினி கோல புறப்பாடு, அடுத்த வெள்ளி திருக்கல்யாணம், விடையாற்றி என்று மஹா சிவராத்திரி உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது இத்திருக்கோவிலில்.

இந்த மஹா சிவராத்திரி நன்னாளில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அன்னை அங்காள பரமேஸ்வரியை


ஓம் காளிகாயை வித்மஹே மாதாஸ்வரூபாயை தீமஹி|

தந்நோ அங்காளி ப்ரசோதயாத் ||


என்று வணங்கி அருள் பெறுவோமாக.

*****************