Tuesday, December 29, 2009

பஞ்ச லோக படிம ஸ்தலங்கள் தரிசனம்

திருசிற்றம்பலம்

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட
மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட

கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட குஞ்சரமுகத்தனாட
குண்டல மிரண்டாட தண்டைபுலி யுடையாட குழந்தை முருகேசனாட

ஞானசம்பந்தரொடு யிந்திராதி பதினெட்டு முனியட்ட பாலகருமாட
நரை தும்பை யறுகாட நந்தி வாகனமாட நாட்டியப்பெண்களாட

வினையோட உனைப்பாட யெனைநாடி யிதுவேளை விருதோடு ஆடிவருவாய் யீசனே சிவகாமி நேசனே யுனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

செப்பறை காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் ஆலயம்

இந்த ஆருத்ரா தரிசன நல்வேளையில் முதலில் காவிரிக் கரையின் தஞ்சை மண்டலத்தின் திருநல்லம் சுயம்பு நடராஜர் தரிசனம் கண்டோம்.

அடுத்து கொங்கு மண்டலத்தின் நொய்யலாற்றங்கரையின் மேலைச் சிதம்பரம் பேரூர் நடராஜர் தரிசனம் கண்டோம்.

இப்பதிவில் நாம் காணப்போகும் தரிசனம் தண்பொருநை என்னும் தாமிரபரணி பாய்ந்து வளம் கொழிக்கும் தென்பாண்டி நாட்டின் செப்பறை மற்றும் இத்தலத்துடன் தொடர்புடைய ஆலயங்களின் ஆனந்த தாண்டவ மூர்த்தியின் தரிசனம் , வாருங்கள் அன்பர்களே.

தில்லை சிற்றம்பலவணார்

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்து ஆடும் தீர்த்தன்; நல் தில்லைசிற் றம்ப்லத்தே தீஆடும் கூத்தன்;இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்க்கலைகள்
ஆர்ப்புஅரவம் செய்ய அணிகுழல்மேல் வண்டு ஆர்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொன்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடுஏல்ஓர் எம்பாவாய்!


தென்பாண்டி நாட்டில் தாமிரபரணிக் இரு கரையிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கின என்று புராணங்கள் பேசுகின்றன, எனவே இப்பகுதி சிவலோகம் என்றே அழைக்கப்பட்டது. இந்த புண்ணிய பூமியில் அம்பலவாணரின் பஞ்ச சபைகளில் இரண்டு சபைகள் உள்ளன அவையாவன செப்பம்பலம் என்னும் தாமிர சபை திருநெல்வேலியில் உள்ளது. சித்திர அம்பலம் என்னும் சித்திர சபை குற்றாலத்தில் உள்ளது. இவை மட்டுமல்லாது உலகின் முதல் நடராஜ மூர்த்தம் என்று நம்பப்படும் மூர்த்தம் செப்பறையில் உள்ளது. இச்செப்பறையில் உள்ளது போன்ற நடராஜர் கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், மற்றும் தூத்துக்குடி மாவட்டம் கட்டாரி மங்கலம் ஆகிய தலங்களில் அருள் பாலிக்கின்றனர். இந்த நான்கு தலங்களுடன் சேர்ந்து துருவை என்னும் தலமும் பஞ்ச லோக படிமத்தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. வாருங்கள் தில்லை ஆனந்த கூத்தப் பிரான் எவ்வாறு செப்பறை வந்து சேர்ந்தார் என்று காண்போம்.



சிங்கவர்மன் என்னும் மன்னன் சிதம்பரத்தில் ஸ்தாபிதம் செய்ய ஒரு நடராஜர் மூர்த்தத்தை வடிக்க எண்ணி சோழ நாட்டு சிற்பி நமசிவாயமுத்து ஸ்தபதியை கூப்பிட்டு அனுப்பினார். அப்போது என்ன நடந்தது?

( சிங்கவர்மன் அரசவையில் தனது அமைச்சர்களுடன் அமர்ந்திருக்கின்றான் அப்போது அரண்மனை காவலன் வந்து கூறுகின்றான்.)

காவலன்: மன்னர் மன்னா வணக்கம், தங்களைக் காண நமசிவாயமுத்து ஸ்தபதி வந்திருக்கின்றார்.

அரசன்: அப்படியா? மிக்க நன்று, அவரை உரிய மரியாதையுடன் அவரை உள்ளே அழைத்துவா.

(ஸ்தபதி உள்ளே வந்து மன்னனை தண்டனிட்டு நிற்கின்றார்.)

அரசன்: வாருங்கள் ஸ்தபதியாரே, தங்களை அழைத்ததற்கு காரணம், ஐந்தொழில் புரியும் எம் ஐயனுக்கு, முக்கண் முதல்வருக்கு, ஆனந்த கூத்தாடும் நடராசருக்கு, பொன்னார் மேனியருக்கு ஒரு அற்புத சிலை வடிக்க வேண்டும், ஆகம விதிப்படி வடிப்பீர்களாக.

ஸ்தபதி: அப்படியே ஆகட்டும் மன்னா.

அரசன்: அமைச்சரே! சிற்பி கேட்கின்ற அளவு பொன்னும் பொருளும் என் பொக்கிஷத்திலிருந்து அளிக்கவும், ஐயனின் சிலை அற்புதமாக அமைய வேண்டும்.
அமைச்சர்: அதில் ஒன்றும் ஐயம் வேண்டாம் அரசே. அடியேனே முன் நின்று சிற்றம்பலவாணருக்கு அருமையான மூர்த்தம் அமைய வேண்டிய உதவிகளை செய்கின்றேன்.

(சிற்பி தமது சீடர்களுடன் வேயுறு தோளி பங்கரின் சிலை வார்க்கும் பணியை ஆரம்பித்தார். (ஒரிரு மாதம் கழித்து )

அமைச்சர்: அரசே! ஒரு மிக நல்ல செய்தி!

அரசன்: என்ன எம் சபாநாயகர் மூர்த்தம் தயாராகி விட்டதா அமைச்சரே ?
அமைச்சர்: ஆம் ஐயனே, அது தான் அந்த ஆனந்த செய்தி.

அரசன்: வாருங்கள் இப்போதே சென்று சிவகாமி மணாளரின் திருவழகைக் கண்டு களிக்கலாம்.

(அரசனும், அமைச்சரும் மற்ற பிரதானிகளும் சிற்பியின் இல்லத்திற்கு செல்கின்றனர்.)

அரசன்: சிற்பியே! எங்கே என் ஐயன், அம்பலத்தரசரின் அருள் வடிவம் எவ்வாறு வார்த்திருக்கின்றீர்கள். அவரைக் காண இத்தனை நாள் தவம் செய்து கொண்டிருக்கின்றேன். உடனே அவரது எனக்கு தரிசனம் செய்து வையுங்கள்.

சிற்பி: வாருங்கள் அரசே, பூசையறை செல்வோம் அங்கு தான் அம்மையப்பரின் அழகிய திருமூர்த்தத்தை அமைத்திருக்கின்றேன்.

(பொன்னம்பலவரின் முதல் சிலையைக் கண்ட மன்னன் முகத்தில் திருப்தி இல்லை.)

அமைச்சர்: அரசே! என்ன தங்கள் முகம் சூரியனைக் கண்ட தாமரை போல மலரவில்லையே, ஆர்த்த பிறவி துயர் கெட ஆடும் ஐயனின் மூர்த்தம் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லையா? தங்கள் வதனம் வாடியுள்ளதே.

அரசன்: ஆம் அமைச்சரே! எம் ஐயன் தேவாதி தேவன், சகல புவனத்தையும், படைத்தும், காத்தும், அழித்தும், அருளியும், மறைத்தும் விளையாடும் முதல்வர், திருக்கயிலை மலையில் ஆனந்த தாண்டவம் ஆடுபவர். அவருக்கு அமைந்த மூர்த்தம் செப்பு சிலையாக அமைந்துள்ளதே.

அமைச்சர்: ஐம்பொன் சிலை என்றாலும் அதிகம் செம்பு கலந்துள்ளதால் தங்களுக்கு செப்பு சிலையாக தோன்றுகின்றது அரசே.

அரசர்: பொன்னம்பலத்தில் நிருத்தியம் செய்யும் என் பொன்னார் மேனியருக்கு பொன்னால் மூர்த்தம் அமைந்தால் தான் பொருத்தமாக இருக்கும் உயர்ந்த சொக்கத் தங்கத்தில் அல்லவா அமைய வேண்டும் புது சிலை செய்ய உத்தரவிடுகின்றேன். அது பசும்பொன் சிலையாக அமையட்டும்.

(சிற்பி பொன்னால் சிற்றம்பலவாணருக்கு இரண்டாவது சிலை வடிக்க ஆரம்பித்தார். சிலைப்பணிகளும் முடிந்தன. ஆனால்…)

சிற்பி: அமைச்சரே! என்னவென்று தெரியவில்லை. இவ்வளவு பொன் போட்டும் ஐயனின் சிலை மட்டும் செப்பு சிலையாகவே வந்திருக்கின்றது. இது என்ன என்று புரியவில்லை.

அமைச்சர்: அது எப்படி சாத்தியம், தாங்கள் பொன் அனைத்தையும் நடன சிகாமணி சிலை வடிக்கத்தானே பயன் படுத்தினீர்கள்?

சிற்பி: அமைச்சரே அதில் ஒன்றும் ஐயம் வேண்டாம் அமைச்சரே.

அமைச்சர்: நான் அரசரிடம் சென்று அறிவிக்கின்றேன், ஆனால் இராஜ தண்டனைக்கு தாங்கள் தயாராக இருங்கள்.

( சிற்பி மனப்பூர்வமாக அந்த ஆண்டவன் தாள்களையே பற்றி அவரிடம் வேண்டுகின்றார். முக்கண் முதல்வரே தாங்கள் உண்மையை அறிவீர்கள் அரசனுக்கு தாங்கள்தான் உண்மையை உணர்த்த வேண்டும்.)

இரண்டாவது சிலையை வந்து பார்த்த மன்னன் அச்சிலையும் செப்புச்சிலையாகவே இருந்ததையும் கண்டு கோபம் கொண்டு, சிற்பியை சிறையிலிட உத்தரவிட்டு சென்று விடுகின்றார். இரவில் மன்னன் கனவில் வார் சடை அண்ணல் தோன்றி "நான் உன் கண்ணுக்கு மட்டுமே தங்கமாக தெரிவேன். மற்றவர்கள் கண்ணுக்கு தாமிர மாகவே தெரிவேன். இதுவே என் விருப்பம்!'' எனக்கூறி மறைந்தார்.)

அரசன்: ஐயனே என்ன மடமை. தங்களின் திருவுள்ளம் இது என்ற உண்மை தெரியாமல் சிற்பியை சிறையிலிட்டுவிட்டேனே. ஆண்டவா! என்னை மன்னித்து விடுங்கள் காலை எழுந்ததும் முதலில் அவரை விடுதலை செய்கின்றேன்.

காலை எழுந்தவுடன் அமைச்சரை கூப்பிட்டனுப்பி சிற்பியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அரசர்: சிற்பியே அடியேன் தான் தவறு செய்து விட்டேன் , இவ்வாறு அமைய வேண்டும் என்பது அந்த ஆண்டவன் திருவுள்ளம். தாங்கள் செய்த அற்புத பணிக்கு இதோ பரிசு பொக்கிஷத்திலிருந்து எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தாங்கள் வடித்த முதல் சிலையையும் தாங்களே எடுத்து செல்லுங்கள்.

இவ்வாறு நம் ஆர்த்த பிறவி துயர் கெட கூத்தாடும் நடராஜப் பெருமானுக்காக வடிக்கப்பெற்ற இரண்டாவது சிலை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதல் சிலை என்னவாயிற்று என்று அறிய ஆவலாக உள்ளதே. நமது இந்தப் பதிவின் கரு அதுதானே அடுத்து அதைக் காண்போம்.

முதலில் செய்த சிலையை மன்னன் இறைவனின் கட்டளைப்படி சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிட்டான். அவனது கனவில் தோன்றிய சிவன், "இந்தச் சிலையை சுமந்துகொண்டு தெற்கு நோக்கிச் செல்,'' எனக்கூறி மறைந்தார். அவரும் அச்சிலையை அவர் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு தென் தமிழ் நாட்டுக்கு சென்றார்.





தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் ராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலியிலுள்ள காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். . ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க அம்மையப்பரை தரிசிக்க முடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, "இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகிலுள்ள குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு,'' என கூறி மறைந்தார்.






இவ்வாறு இறைவன் ஆணையிட்ட அதே சமயம் , சோழ நாட்டு சிற்பியும் முதலில் வடித்த நடராஜரின் விக்ரத்தை சுமந்து கொண்டு இறைவனின் விருப்பப்படி தென் திசை நோக்கி வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை மிகவும் கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. எனவே அவர் சிலையை அந்த செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார்.


செப்பறையின் தாமிர அம்பலம்

ராமபாண்டியன் அதிர்ச்சி யடைந்து சிலையை தேடிச்சென்றார். வேணுவனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது மேலும் நல்ல அறிகுறிகளும் தென்பட்டன. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். ஐயன் கனவில் கூறியபடி அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன. ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் தனி சன்னதி அமைத்தார். அவர் கட்டிய கோயில் வெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன்பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோயிலைக் கட்டினார். தில்லையில் உள்ளது போலவே இங்கும் நடராஜருக்கு சபை அமைந்துள்ளது ஆனால் இங்கு செப்புத்தகடு வேயப்பட்டுள்ளது. செப்பறை என்றாலும் தாமிர சபை என்றுதானே பொருள். இவ்வாறு இறைவனின் திருவுள்ளப்படி முதல் விக்ரகம் செப்பறையில் வந்து அமர்ந்தது. இனி இக்கோவிலைப் பற்றி காண்போமா?

இத்தலத்தில் இறைவன் காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பராய் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். மூலவரான "வேண்ட வளர்ந்தநாதர்' சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே "நெல்லையப்பர்' எனப்படுகிறார். இந்த லிங்கத்தின் மத்தியில் அம்பிகையின் உருவம் தெரிகிறது. இதை அபிஷேகத்தின் போது காணலாம். நடராஜத் தலம் என்பதால் ஆருத்ரா தரிசனமும், ஆனித் திருமஞ்சனமும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆனி மாதத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் பிரம்மோற்சவம் நடக்கும்போது இங்கும் அதே விழா நடக்கும். இத்தலத்தின் நடராஜப் பெருமானுக்கு "அழகிய கூத்தர்" என்னும் திருநாமம். திருமால், அக்னி, அகத்தியர் மற்றும் பாண்டிய மன்னனுக்கு திருநடனக் காட்சி தந்ததாக ஐதீகம்.


செப்பறைக் கோவில் உள் தோற்றம்


இந்த செப்பறை ஆலயம் இயற்கை எழில் மிக்க கிராமம் ஆகும். திருநெல்வேலி மதுரை சாலையில் தாழையூத்தில் இருந்து பிரியும் சாலையில் சென்றால் செப்பறை நடராஜரை தரிசனம் செய்யலாம். இக்கோவில் திருநெல்வேலியிலிருந்து சுமார் 10 கி, மீ தூரத்தில் இராஜவல்லிபுரம் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இனி மற்ற தலங்களில் இதே போல நடராஜ மூர்த்தங்கள் அமைந்தன என்று காணலாமா?


மன்னன் ராமபாண்டியனின் எல்லைக்குள் வீரபாண்டியன் என்னும் சிற்றரசன் இருந்தான். செப்பறையில் இருந்த நடராஜர் சிலையை அவன் கண்டான். ஐயனின் அழகில் மயங்கிய வீரபாண்டியன், அதேபோல தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இம்மூர்த்தத்தில் ஒன்றை கட்டாரிமங்கலத்தில் உள்ள கோயிலிலும், மற்றொன்றை தென் காளத்தி என்று அழைக்கப்படும் கரிசூழ்ந்தமங்கலம் கோயிலிலும் பிரதிஷ்டை செய்ய எண்ணீனான்.

சிலை செய்யும் பணி முடிந்தது. சிலைகளும் சிதம்பரம் நடராஜர் போலவே அற்புதமாகவும் அழகாகவும் கலை அம்சத்துடனும் அமைந்தது. சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான் அதே சமயம் இதே போல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஸ்தபதியை கொன்றுவிடும்படி காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்பதியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான். ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளை துண்டித்தான். இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன.



இதன் பிறகு ஸ்தபதிக்கு மரக்கை பொருத்தப்பட்டது. கலையார்வம் மிக்க ஸ்தபதி, மரக்கைகளின் உதவியுடன், முன்னை விட அழகாக மற்றொரு சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். அவ்வாறு கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை கருவேலங்குளம் சௌந்தர பாண்டீஸ்வரர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுவே தென்பாண்டி நாட்டில் நடராஜர் அமர்ந்த வரலாறு ஆகும்.

ஐந்து ஆனந்த தாண்டவ மூர்த்திகளிலும் தாங்கள் ஒரு ஒற்றுமையைக் காணலாம். திருவாசி உருண்டையாக இல்லாமல் நீள் வட்டமாக உள்ளது. அதாவது மூர்த்தம் ஸ்ரீசக்ர வடிவமாக ஒடுங்கி அமைந்துள்ளது. வட்டவடிவமாக திருவாசி இருந்தால் அறு கோண சக்கர வடிவாக ஐயன் அகலமாக இருப்பார். ஐயனுடைய ஜடாமுடியையும் கவனியுங்கள். முன் பக்கம் இல்லாமல் பின் பக்கம் தாழ்ந்த சடையாகவே உள்ளது.

திருவாதிரையன்று நான்கு நடராஜர்களையும் தரிசனம் செய்ய விரும்புவர்கள் திருநெல்வேலிக்கு சற்று முன்புள்ள தாழையூத்து என்ற ஊரில் இருந்து ராஜவல்லிபுரம் செல்லும் பிரிவில் சென்று, செப்பறையை அடையலாம். அங்கு உலகின் முதல் நடராஜரை தரிசித்து விட்டு, அங்கிருந்து திருநெல்வேலி பைபாஸ் ரோடு வழியாக பத்தமடை செல்ல வேண்டும். பத்தமடையிலிருந்து கரிசூழ்ந்தமங்கலம் பிரிவில் திரும்பி 3 கி,மீ., தூரத்திலுள்ள கரிசூழ்ந்தமங்கலம் சென்று, கனகசபாபதியை தரிசிக்க வேண்டும். இங்கிருந்து பத்தமடை வழியாக நாகர்கோவில் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., சென்றால் கருவேலங்குளத்தை அடையலாம். இங்கே, கன்னத்தில் கிள்ளப்பட்ட நடராஜரை தரிசித்து விட்டு, களக்காடு, நான்குநேரி, மூலக்கரைப்பட்டி வழியாக கட்டாரிமங்கலத்தை 40 கி.மீ., கடந்து அடையலாம். இந்த நான்கு தலங்களையும் திருநெல்வேலயில் இருந்து காரில் சென்று வந்தால் 4 மணி நேரத்தில் தரிசனம் முடித்து விடலாம்.திருவாதிரை அன்று இந்தக் கோயில்கள் நாள் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். பஸ்களிலும் சென்று வரலாம்.

*******


அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு 2010 நல்வாழ்த்துக்கள்.


இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு அன்று ஆருத்ரா தரிசனம் வருகின்றது. ஒரு புது வருடத்தை தொடங்க இதை விட ஒரு அருமையான வாய்ப்பு கிட்டுமா? முடிந்தவர்கள் தில்லையில் சென்று சிற்றம்பலவாணரின் மஹா அபிஷேகத்தையும் திருவாதிரை தரிசனத்தையும் அல்லது திருவாரூர் சென்று தியாகராஜப்பெருமானின் வலது பாத தரிசனத்தையும் அல்லது உத்திரகோச மங்கை சென்று மரகத நடராஜர் தரிசனத்தையும் அல்லது பஞ்ச சபைகளின் மற்ற சபைகளில் பஞ்ச கிருத்திய பாராயணரின் நடனத்தையும், திருவொற்றியூரிலே செண்பக தியாகரின் பதினெட்டு வகை நடனத்தையோ கண்டு அருள் பெறுமாறு வேண்டுகின்றேன்.

திருசிற்றம்பலம்

Saturday, December 26, 2009

மேலைச் சிதம்பரம் தரிசனம்

காலத்தில் அழியாத கனக சபை கொண்ட பேரூர்
அழகிய கலை நுட்பங்கள் கொண்ட அற்புத சிற்பங்கள் கொண்ட காலத்தால் அழியாத கனக சபையில் ஆனந்த தாண்டவ நடராசர் சிவகாமியம்மையுடன் தாண்டவம் முடியும் கோலத்தில் அருள் பாலிக்கும் மேலைச் சிதம்பரத் தலம். காஞ்சி மா நதி என்னும் நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்த தேவார வைப்புத்தலம். சுந்தரர், அப்பர், அருணகிரிநாதர் பாடிய தலம். கச்சியப்ப சிவாச்சாரியார் தலபுராணம் பாடிய தலம். பிறவாப்புளி, இறவாப்பனை, எலும்பை கல்லாக்கும் ஆறு முதலியன விளங்கும் முக்தி தலம். வாகனமான நாய் இல்லாமல் பைரவர் ஞான பைரவராக அருள் பாலிக்கும் தலம். காமதேனு வழிபட்ட தலம், அதன் கன்று பட்டியின் குழம்புத் தழும்புடன் தேவ தேவன் மஹா தேவன் இன்றும் திருக்காட்சி தரும் தலம். விஷ்ணுவாகிய பட்டிமுனியும், பிரம்மாவாகிய கோமுனியும் வழிபட்ட தலம். நாற்று நடவு விழா நடக்கும் தலம். இவ்வளவு பெருமைகளும் கொண்ட நடராஜ தலத்தை இந்த ஆருத்ரா தரிசன காலத்தில் வலம் வரலாமா அன்பர்களே?
பாலக்காட்டு கணவாய் வழியாக மலய மாருதம் தவழ்ந்து குளிர்வித்துக் கொண்டிருக்கும் கொங்கு மண்டலத்தின் தலை நகரான கோவை மாநகரின் அருகில் அமைந்த தலம். கோவை மாநகரிலிருந்து சுமார் 10 கி,மீ தூரத்தில் சிறுவாணி செல்லும் வழியில் அமைந்துள்ளது இவ்வளவு சிறப்புகள் பெற்ற இத்தலம். வெள்ளியங்கிரி என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஐந்து மலைகள் அரணாக சூழ இயற்கை சூழலில் எழிலால அமைந்துள்ளது பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம். ஆதி காலத்தில் நாரதர் தக்ஷிண கைலாயமான இத்தலத்தில் உமா மஹேஸ்வரரை வெள்ளியங்கிரியில் வழிபட்டு இங்கு சிவலிங்கத்தை ஸ்தாபிதம் செய்து வழிபட்டார். ஒரு சமயம் பிரம்ம தேவர் படைப்புத்தொழில் செய்யும் போது சோர்வுற்று கண்ணயர்ந்து விட்டாராம். இதை அறிந்த மஹா விஷ்ணு காமதேனுவை அழைத்து “ நீ சிவபெருமானை நோக்கி தவமிருந்து அவருடைய அருள் பெற்று பிரம்மாவினுடைய படைப்புத் தொழிலை மேற்கொள்வாயாக” என்று கட்டளையிட, காமதேனுவும் இமயமலையில் அருந்தவம் இருந்தும் சிவன் அருள் சித்திக்காததால் நாரதர் ஆலோசனைப்படி தக்ஷிண கைலாயமான பேரூரில் வந்து தவம் செய்து வரும் போது ஒரு நாள் அதன் கன்றான பட்டியின் கால் குளம்பு பெருமானின் மேனியில் சிக்கிக் கொள்ள அதை தன் கொம்பினால் விடுவித்தது, இறைவன் தோன்றி இருவருக்கும் அருளினான். பட்டி வழிபட்டதால் தான் பட்டீஸ்வரர் என்று அழைக்கப்படுவேன் என்று வரம் அருளினார். மேலும் முக்தி தலம் என்பதால் இங்கு உனக்கு சிருஷ்டி இரகசியத்தை அருள முடியாது நீ திருக்கருகாவூர் சென்று தவம் செய் என்று அருளினார். காமதேனு மட்டும் அல்ல, வியாசர், விஸ்வாமித்திரர், யமன் ஆகியோர்கள் இப்பெருமானை வழிபட்டுள்ளார்.
இன்றும் ஐயனின் திருமேனியில் பட்டியின் குளம்பு காய தழும்பையும், காமதேனுவின் கொம்பின் நுனித்தழும்பையும் தரிசிக்கலாம். பெருமான் பட்டீசர், பட்டி நாதர், கோட்டீசர் என்று அழைக்கப்படுகின்றார். இன்றும் கருவறையில் லிங்கமூர்த்திக்கு பின்புறம் காமதேனுவை தரிசிக்கலாம். எனவே இத்தலம் காமதேனுபுரம் என்றும் பட்டீஸ்வரம் என்றும் தேனுபுரம் என்றும் அழைக்கப்படுகின்றது. "தழும்புடைய நம்பனை நாத்தழும்பேற ஓம்பினால் ஓடுமே நம் வினை." என்றபடி இத்தலத்தில் ஐயனை தரிசிக்க இனி பிறவி என்பது கிடையாது. நான்கு யுகங்களிலும் வெவ்வேறு பெயர்களில் இத்தலம் விளங்கியுள்ளது.
பச்சை நாயகி உடனுறை பட்டீஸ்வரர்
மரகதாம்பாள் என்னும் பச்சை நாயகி உடனுறை பட்டீஸ்வர சுவாமி அருள்பாலிக்கும் இத்தலம் ஒரு முக்தித் தலம் ஆகும். அதற்கு ஐந்து சான்றுகள் உள்ளன. அவையாவன முதலாவது பிறவாப்புளி, இது பூப்பூக்கும் காய் காய்க்கும் பழம் பழுக்கும் ஆனால் விதை மட்டும் முளைக்காது. இராஜ கோபுரத்தின் எதிரிலே உள்ளது இப்பிறவாப்புளி. இரண்டாவது இறவாப்பனை, பெரிய கோவிலின் வடக்கே உள்ள காஞ்சிமா (நொய்யல்) ஆற்றின் தென் கரையிலுள்ள பிரம்மன் பூஜித்த வடகயிலாயம் என்னும் சிறு கோவிலின் வெளி முகப்பில் உள்ளது இந்த இறவாப்பனை, எத்தனை யுகங்களாகவோ இம்மரம் அங்கேயே உள்ளது. பேரூரில் ஆன்மாக்களுக்கு அழியாத நிலையான வாழ்வைத் தந்தருளுபவர் இறைவன். அழியாத்தன்மைக்கு சான்றாக இவ்விறவாப்பனை உள்ளது.
அறவாணர்கள் போற்றிடும் பேரூர் அழியாமெகக்கோர் இடமாகி உறவாம் அதனால் எமைப்போல உலவாததனுக்கு ஒரு சான்றாங்கு இறவாப்பனை ஒன்றுள்ளது.
இப்பனை மரத்தின் மேல் பட்டையை கஷாயம் வைத்துக் குடித்தால் தசை சம்பந்தமான நோய்கள் விலகும். மூன்றாவது இத்தலத்தின் சாணத்தில் புழுக்கள் உற்பத்தி ஆவதில்லை. நான்காவது நொய்யல் ஆற்றில் கரைக்கப்பட்ட எலும்புகள் வெண் கற்களாக மாறுகின்றன. எனவே இப்பகுதி மக்கள் தங்கள் இறந்த உறவினர்களின் அஸ்தியை இக்காஞ்சிமா நதியில் கொண்டு வந்து கரைக்கின்றனர். ஐந்தாவது இத்தலத்தில் இறப்பவர்கள் வலது காது எப்போதும் மேலே இருக்கும்படி வைப்பர், ஏனென்றால் சிவபெருமான் ஓம் என்னும் ஐந்தெழுத்தை ஓதி தன்னடியில் சேர்த்துக் கொள்வார் என்பதால். எனவே இத்தலத்தில் பட்டீஸ்வரரை தரிசிப்பவர்களுக்கு மறு பிறவியில்லை. ஆதி சங்கரர் தன் தாய் முக்தி அடைய இத்தலத்தில் பிரார்த்தனை செய்துள்ளார்.
இத்தலத்தைப் பாடிய சுந்தரருக்காக ஐயன் ஒரு திருவிளையாடளை நடத்தினார் அது என்ன தெரியுமா? ஐயனுன் அம்மையும் சேற்றில் இறங்கி நாற்று நட்ட லீலைதான் அது. ஒரு சமயம் சுந்தரர் பரவையாருடன் ஐயனை தரிசித்து பொருள் பெற பேரூர் வந்தார். எம்பிரான் தோழர் அல்லவா சுந்தரர், பெருமான் அவருடன் சிறிது விளையாட விழைந்தார். சர்வமும் தானே என்று சுந்தரருக்கு உணர்த்த தான் விவசாயியாக பள்ளனாகவும், அம்மை பச்சை நாயகி பள்ளியாகவும், மற்ற சிவகணங்களாகவும் நாற்று நட சென்றனர். அப்போது ஐயன் நந்தியிடம் நானும் அம்மையும் வயல் வெளிக்கு செல்கின்றோம், சுந்தரன் வந்தால் எனக்கு தெரியாது என்று சொல்லி விடு என்று சொல்லிவிட்டு சென்றார். திருக்கோவிலுக்கு வந்த சுந்தரர் ஐயனைக் காணாது திகைத்து நந்தியிடம் வினவ, நந்தியும் ஐயனின் ஆணையை மீறமுடியால் தெரியாது என்று கூறியது ஆனால் சுந்தரர் வண்தொண்டர் அல்லவா எனவே குறிப்பால் வயலைச் சுட்டியது. வயல் பக்கம் சென்ற சுந்தரர் வயலில் சாதாரண மக்கள் போல சேற்றில் இறங்கி நெல் நாற்று நட்டுக்கொண்டிருந்த ஐயனையும் அம்மையும் வீழ்ந்து வணங்கி, "ஐயனே எமக்காக தாங்கள் இவ்வாறு துன்பப்படவேண்டுமா? என்று அழுக, கருணாமூர்த்தியான எம்பெருமானும் சுந்தரனே யாம் உம்முடன் விளையாடவே இவ்வாறு செய்தோம் என்று கோவிலுக்கு சுந்தரருடன் திருக்கோவிலுக்கு திரும்பி வந்து அவருக்கு ஆனந்த தாண்டவக் காட்சியும் தந்தருளினார். பின்னர் சேரமான் பெருமாளிடம் சென்று பொருள் பெறவும் அருள் புரிந்தார். இந்த நாற்று நடவு விழா ஆனி மாதம் இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றது. ஆனி மாதத்தில் கிருத்திகை தொடங்கி பூராட நட்சரத்தில் நாற்று நடவும், உத்தரத்தில் திருமஞ்சனமும் கோலாகலமாய் நடைபெறுகின்றது. இனி இவ்வளவு சிறப்புகள் கொண்ட இத்தலத்தை வலம் வருவோமா?
இத்தலமே ஒரு கலைப் பொக்கிஷம், சிற்பங்கள், ஓவியங்கள் நிறைந்து காட்சியளிக்கின்றது கிழக்கு ஐந்து நிலை இராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது, கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்று இறைவனின் ஸ்தூல ரூபமாக விளங்கும் கோபுரத்தை வணங்கி உள்ளே சென்றால் தூண்கள் நிறைந்த மண்டபம், இம்மண்டபத்தின் கூரையில் பேரூர் புராணத்தின் கதைகளையும், அறுபத்து நாயன்மார்களின் கதைகளையும் விளக்கும் அருமையான ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இம்மண்டபத்தின் இறுதியில் கொடிகம்பம் மற்றும் நந்தியம்பெருமான்.
மஹா மண்டபத்தின் கூரையில் 63 நாயன்மார்களின் சரிதம்
முதலில் கரிகால் சோழன் கருவறையை கட்டியுள்ளான், பின் 9ம் நூற்றாண்டில் சுந்தரர் இத்தலத்தைப் பாடியுள்ளார். 11-13ம் நூற்றாண்டுகளில் கொங்கு சோழர்கள் அர்த்த மண்டபம் மற்றும் மஹா மண்டத்தை கட்டியுள்ளனர். பின்னர் 14-17 நூற்றாண்டுகளில் ஹொய்சால, விஜயநகர மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர் “ஆரூரார் பேரூரார்” என்றும் “பேரூர் பிரம்மபுரம் பேராவூர்” என்றும் அப்பர் பெருமான் தமது ஷேத்திரக்கோவையில் இரண்டு இடங்களில் பாடிப்பரவிய இத்தலத்தில் அவர்களின் பல்வேறு கல்வெட்டுகள் நிறைந்துள்ளன.
மஹா மண்டபத்தில் நுழைந்தால் சிருங்க தீர்த்தத்தை காணலாம். ஐயனின் அபிஷேகத்திற்காக காமதேனு தன் கொம்பினால் (சிருங்கம்-கொம்பு) உருவாக்கிய இத்தீர்த்த தண்ணீரே பயன்படுத்தப் படுகின்றது. கருவறையில் காமதேனுக்கும் பட்டிக்கும் அருளிய பரமன் லிங்க ரூபத்தில் கிழக்கு திருமுக மண்டலத்துடன் அருட்காட்சி தருகின்றார். ஒரு கன்றுக்கும் அருளிய ஐயனின் எளிமையை என்னவென்று சொல்லுவது. அவரை ஐந்தெழுத்து நாமத்தால் மனதார வணங்கி முதல் பிரகாரம் வலம் வந்தால் 63 நாயன்மார்களை தரிசனம் செய்கின்றோம், சக்தியின்றி சிவமில்லை என்பதன் அடிப்படையில், சிவன்கோயில்களில் மூலஸ்தானத்திற்குள்ளேயே ஒரு அம்பிகை இருப்பாள். இவளை வெளியிலிருந்து தரிசிக்க முடியாது. ‘சிவனின் மனதிற்குள் இருப்பவள்’ என்ற பொருளில் இவளை “மனோன்மணி” என்று அழைப்பர். இந்தக் கோயிலை பொறுத்தவரை இவளை நம்மால் தரிசிக்க முடியும். பிரகாரத்தில் மனோன்மணி அம்மைக்கு ஒரு சன்னதி இருக்கிறது. மேலும் சூரிய சந்திரர், சகஸ்ரலிங்கம், நாய் வாகனம் இல்லாத ஞான பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். கோஷ்டத்தில் துர்க்கை, தக்ஷிணாமூர்த்தி அருள் பாலிக்கின்றனர். விஜய தசமியன்று தக்ஷிணாமூர்த்தி சன்னதியில் குழந்தைகளுக்கு நாக்கில் எழுத்தாணியால் எழுதி அக்ஷராப்பியாசம் செய்வது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது. இரண்டாம் பிரகாரமாம் வெளிப்பிரகாரத்தில் இருந்து ஐயனின் விமானத்தை அற்புதமாக தரிசனம் செய்யலாம். அஷ்டதிக்கு பாலகர்கள் சுதை வடிவத்தில் எட்டு திசைகளிலும் அருள் பாலிக்கின்றனர். வெளிப்பிரகாரத்தில் தென்மேற்கு மூலையில் நிருதி விநாயகர், மேற்குப் பகுதியில் சொர்க்க வாசல் மேற்கு நோக்கிய வாயிலைக் கொண்ட மண்டபத்துடன் விளங்குகின்றது.இச்சுற்றில் ஐயன் சன்னதிக்கு பின்புறம் சோமாஸ்கந்த ரூபத்தில் காசி விஸ்வநாதர், அருணகிரி நாதர் பாடிய வள்ளி தெய்வாணை சமேத முருகர், விசாலாட்சி மேற்கு முகமாக (பழனி முருகன் போல) அருள் பாலிக்கின்றனர். முருகர் சன்னதிக்கு அருகில் உள்ள வில்வ மரத்தடியில் கோரக்க சித்தர் அருவ வடிவில் உள்ளார். வடகிழக்கு மூலையில் யாகசாலை அமைந்துள்ளது.
இச்சுற்றில்தான் அம்மை மரகதவல்லி என்னும் பச்சைநாயகி தனிக்கோவிலில் அருட்காட்சி தருகின்றாள். அம்மையும் கிழக்கு நோக்கிய திருமுக மண்டலத்துடன் எழிலாக அபய வரத ஹஸ்தங்களுடனும் அங்குசம், பாசம் ஏந்தி அருள் பாலிக்கின்றாள். விவசாயியாகச் சென்ற சிவனுடன் வயலில் வேலை செய்ததால், இத்தல அம்பிகைக்கு பச்சைநாயகி என்று பெயர் என்பார்கள். நல்ல மகசூல் பெறவும், பயிர்கள் குறையின்றி செழிப்பாக வளரவும் இங்கு விதை நெல், தானியத்துடன் பூஜிக்கிறார்கள். அம்மன் விமானம் ஒரு கலசத்துடனும், நந்தி வாகனத்துடனும் உக்ரமில்லாத வடிவாக ஈஸ்வரி ரூபமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஒரு தனி சிறப்பு. அம்மனின் கருவறையின் முன்மண்டபத்தில் வலப்புறம் துர்க்கை சன்னதியும். இடப்புறம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப் பெருமாளும் அருள் பாலிக்கின்றனர். அம்மனின் தூண்கள் நிறைந்த இம்மஹாமண்டபத்தில் அஷ்டலக்ஷ்மி மற்றும் தசாவதார ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இப்பிரகாரத்தில் ஈட்டி மரத்தாலான ஆஞ்சனேயர் சன்னதியும் உள்ளது.
காலத்தால் அழியாக் கனக சபை
இனி இத்தலத்தின் சிறப்புமிக்க கனக சபையை தரிசிக்க செல்வோமா? சுந்தரர் சிதம்பரத்தில் நடராஜப்பெருமானை தரிசனம் செய்யும் போது
பாரூரும் அரவல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைங்கண் ஏற்றன் ஊரூரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான் ஆரூரன் தம்பிரான் ஆருரன் மீகொங்கில் அணிகாஞ் சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்சிற் றம்பலத்தே பெற்றா மன்றே.
என்று பேரூர் பெருமானை நினைத்துப் பாட அங்குள்ளவர்கள் பேரூர் அவ்வளவு சிறப்பானதா? என்று வினவ சுந்தரரும் ஆம் சென்று பாருங்கள் என்று கூற அவர்களும் வந்து ஆடல் வல்லானை கனக சபையில் தரிசனம் செய்து பின் சிதம்பரத்தில் உள்ளது சிற்றம்பலம் இங்குள்ளது அழகிய சிற்றம்பலம் என்று கூறிய பெருமையுள்ளது இக்கனகசபை. 17ம் நூற்றாண்டில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கருடைய சகோதரர் அழகாத்திரி நாயக்கன் நடராஜப்பெருமானின் காலத்தால் அழியாத கனக சபையைக் கட்டினான். வெளியே இருந்து பார்க்கும் போது இச்சபை ஒரு கலச விமானத்துடன் எழிலாக விளங்குவதை காணலாம். மொத்தம் 36 தத்துவங்களை குறிக்கும் வகையில் 36 தூண்களுடன் எழிலாக விளங்குகின்றது கனகசபை. ஒவ்வொரு தூணின் மேல் முகத்தில் ஒரு முக சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தூணின் மேல் உள்ள சிங்கத்தின் கம்பீரமும் அருமை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு முக பாவத்தை காட்டுகின்றது. கண், பல், வாய், நெற்றியில் உள்ள குறி, வடிவம் எல்லாம் ஒன்று போல இல்லை, இது சிற்பியின் கை வண்ணத்திற்கு ஒரு எடுத்துக் காட்டு. கனக சபையின் ஒவ்வொரு ஜன்னலிலும் ஒவ்வொரு ஜாலி வேலைப்பாடு நம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.
கனக சபையில் மூன்று பஞ்சாட்சரப் படிகள் உள்ளன, மஹா மண்டபத்தில் இருந்து கனக சபைக்கு செல்ல உதவும் முதல் பஞ்சாட்சரப் படிகளை தாண்டினால் கூரையில் கல் சங்கிலி, சுழல் தாமரை போன்ற அற்புதங்கள், இருபக்க தூண்களிலும் அற்புதமான சிற்பங்கள். அவைகளாவன நிருத்த கணபதி, மூஞ்சூறு வாகனத்தில் நடனமாடிய நிலையில் முதல்வன் கணேசன் தாண்டவ கோலத்தில் அருட்காட்சி தருகின்றார், மூஞ்சூறுவின் காதின் மேல் வலக்கால், மூஞ்சூறு வாகனத்தின் நகங்கள் அப்படியே தத்ரூபம். அடுத்து வீறு மயில் வாகனத்தில் ஆறுமுகன் இளையவன் ஸ்கந்தன். மயிலின் ஒய்யாரமும், மார்புப் பதக்கமும் அருமை. கனல் உமிழும் கண்களுடன் அக்னி வீரபத்திரர். தக்ஷன் செய்த முறையற்ற யாகத்தை அழிக்க 16 வீரபத்திரர்கள் தோன்றினர். அவர்களுள் இவர் ஒருவர், கண்களும் , மீசையும் ஜடாமுடியில் சிலந்தியின் அழகையும் என்னவென்று சொல்ல வார்த்தைகள் தான் இல்லை. தட்சன் யாகம் அழித்த அகோர வீரபத்திரரும் உள்ளார் அவர் கையில் உள்ள வாள், வீசும் வேல் அப்படியே அற்புதம். யானையை விரித்து போர்த்துக் கொண்ட கிருத்திவாஸன், யானையின் கால்கள் , ஐயனின் திருவடியில் உள்ள யானையின் தலை, ஐயனின் கைகளில் உள்ள ஆயுதங்கள் அனைத்தும் அப்படியோர் அற்புதம். தாருகாவனத்து முனி பத்தினிகளின் கற்பு நிலையை சோதிக்க திகம்பரராய், பிக்ஷாடண கோலம் தாங்கிய பிஞ்ஞகன், குண்டோதரனுடன், நகு வெண்டலை மானுக்கு புல்லுறுத்தும் அற்புதம், அதை வாங்க இரண்டு கால்களுடன் அது தாவி வரும் பாங்கு, முனி மகளிர் நிறையழிந்த நிலைமையும் அற்புதம். நடனத்தில் தனக்கு நிகர் எவருமில்லை என்ற அகந்தையுடன் ஆடல் புரிந்த ஆலங்காட்டிக் காளிக்கு எதிரே அவள் கர்வம் அடங்க தாளொன்றால் பாதாளம் நீள் வலது காலால் தலைக்கு மேல் உள்ள பூவை எடுக்கும் பதினாறு கர ஊர்த்துவ தாண்டவர் வடிவழகை எப்படி வர்ணனை செய்ய, 108 நடனக்கோலங்களுள் இதுவும் ஒன்று. ஐந்து தலை பிரம்மனும், உடுக்கை கொட்டியபபடி விஷ்ணுவும், காரைக்காலம்மையார் அடிக்கீழும், குழந்தையாக முயலகனும் அருமையோ அருமை. ஆலங்காட்டு காளியை பக்கவாட்டில் இருந்து பார்த்தால் கோபம் தெரியும் அதே ஊர்த்தவதாண்டவரிடமிருந்து பார்த்தால் கண்களில் தோற்று விட்டோமே என்ற நாணம் தெரியும் இவ்வாறு செதுக்கிய சிற்பியின் திறமையை வியக்காமல் இருக்க முடியாது. அம்மையிம் ஜ்வாலா மகுடம், கால்களின் கோலம், ஆபரணங்கள், ஆடை அற்புதம் அற்புதம். ஒவ்வொரு சிற்பமும் 6 அடி உயரம், 3 அடி அகலம் , ஒரே கல்லில் செதுக்கப்பட்டிருக்கின்றன. இந்த அருமையான சிற்பங்களை செதுக்கியவர் செம்மனாச்சாரி என்ற சிற்பி, அவர் மறைந்து விட்டார் ஆனால் அவரின் உயிரோவிய சிற்பங்கள் அப்படியே உள்ளன. கம்பி வலையிட்டு பாதுகாத்து வைத்துள்ளனர் அற்புத சிற்பங்களை.
சிற்பங்களை அடுத்து இரண்டாவது பஞ்சாட்சரப்படி இதன் அருகே யாளியின் வாயும், யானையின் தும்பிக்கையும் இணைவது போன்ற சிலை. அதைத் தாண்டினால் குதிரை வீரன் சிலை ஒரு பக்கத்தில் முழுதாகவும் ஒரு பக்கம் உடைந்தும் காணப்படுகின்றது. மூன்றாவது பஞ்சாட்சரப்படியில் பட்டி முனி, கோ முனி அம்மையப்பரை சேவிக்கும் நிலையில். பிரம்மனும் விஷ்ணுவுமான இவர்களுக்கு இத்தலத்தில் நடராஜப் பெருமான் ஆனந்த தாண்டவக் கோலக் காட்சி தந்து அருள் பாலித்திருக்கின்றார். மூன்றாவது பஞ்சாட்சரப்படியை தாண்டினால் ஆனந்தத் தாண்டவ நடராஜரையும், அம்மை சிவானந்த வல்லியையும் தரிசனம் செய்யலாம்.
சிவகாமி அம்பாளுடன் ஆனந்த தாண்டவ நடராஜர்
சபையில் ஆனந்த கூத்தர் ஆனந்த தாண்டவம் ஆடி, ஆட்டத்தை நிறுத்தும் கோலத்தில் சிவகாமியம்மையுடன் ஆனந்த தரிசனம் தருகின்றார். ஐயனின் முகத்தில் உள்ள குறும் சிரிப்பு, கதுப்பு கன்னங்கள், சடை பின்புறம் தாழ்சடையாக (சிதம்பரம் போலவே) மொத்தம் பதினாறு சடைகளுள் பதினைந்து கீழ் நோக்கி தொங்குகின்றன, ஒன்று கட்டப்பட்டுள்ளது, குஞ்சித பாதமும் நிலத்தை நோக்கி தாழ்ந்துள்ளது, இடக்கரத்தில் ஊழித்தீ, வீசுகரம், வலக்கரத்தில் உடுக்கை, அபய கரம், முயலகன் மேல் ஊன்றிய பாதத்தில் வார்க்கப்பட்ட நிலையில் சலங்கை உள்ளது. தோளில் துண்டும், இடையில் புலியதளாடையும் அணிந்துள்ளார். ஐயனின் வீசும் கரத்தின்( நீட்டிய) நீர் குஞ்சித பாதத்தின் மேல்( தூக்கிய) பாதத்தின் மேல் விழும் விழும்படியான அற்புதமான அமைப்பில் அருள் பாலிக்கின்றார் கூத்த பிரான். பிரம்மா, விஷ்ணு, அதி உக்ர காளி சுந்தரர் நந்தி ஆகியோருக்கு ஆனந்த கூத்தர் இத்தலத்தில் ஆனந்த தாண்டவத்தை காட்டி அருளியுள்ளார். பர சமய இருள் அழிய ஞான சம்பந்த பெருமானுக்கு தன் முலைப்பால் சுரந்தளித்த மாப்பெரும் கருணை கொண்ட சிவகாமியம்மை வலக்கரத்தில் நீலோற்பவ மலர் ஏந்தி, இடக்கரம் டோலஹஸ்தமாக அருள் பாலிக்கின்றாள்.
இத்தலத்தில் கூத்தப்பிரானை சுற்றி வந்து வழிபட முடியும், அடியேன் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஐயனின் தாழ் சடையை தரிசனம் செய்திருக்கிறேன் நேரிலும் தரிசிக்கலாம் என்று நினைத்து வலம் வந்தேன், ஆனால் தரிசனம் கிட்டவில்லை, அபிடேக காலங்களில் மட்டும்தான் தரிசிக்க முடியும் என்று எண்ணுகிறேன். ஐயனை வலம் வரும் போது ஜன்னல் வழியாக துர்க்கையம்மனை நேராக தரிசனம் செய்ய முடிகின்றது. நடராஜரின் மண்டபத்தின் நான்கு தூண்களும் நான்கு வேதங்கள் என்பது ஐதீகம். அவை சிறிது வளைந்து ஐயனை பணியும் நிலையில் உள்ளன.
பொதுவாக நடராஜத் தலங்களில் வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் நடைபெறும், இத்தலத்தில் மொத்தம் பத்து தடவை நடைபெறுகின்றது. தீபாவளி, ஆருத்ரா தரிசனத்திற்கு அடுத்த நான்காம் நாள், பங்குனி உத்திரம் அதை அடுத்த இரண்டாம் நாள் ஆகிய நாட்களே அந்த அதிகப்படியான நாட்கள், பங்குனி உத்திரத்தன்று நடன சேவை தந்தருளுகின்றார். ஆருத்ரா தரிசனமும் மிக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது மேலைச் சிதம்பரமாம் பேரூரில். காப்புக் கட்டுதலுடன் ஆருத்ரா தரிசன விழா தொடங்குகின்றது. அடுத்த ஒன்பது நாட்கள் காலையும் மாலையும் திருவெம்பாவை விழா நடைபெறுகின்றது. மாணிக்க வாசகர் திருவீதிஉலா வருகின்றார். ஒன்பதாம் நாள் இரவு பச்சை நாயகி அம்மன் கிளி வாகனத்தில் எழுந்தருளி திருவீதிவுலா வந்து அருள் பாலிக்கின்றார். அம்மனுக்கு நொய்யலாற்றங்கரையில் நிறை நாழி பூஜை நடைபெற்று பெண்மணிகளுக்கு மங்கல நாண் கயிறு வழங்கப்பட்டது. இரவு அம்மனும் ஐயனும் அன்னூசல் ஆடி அருளி மாணிக்கவாசகருக்கு அனுக்ரகம் செய்து கயிலாயப் பதவி வழங்கும் விழா நடைபெறுகின்றது.ஆருத்ரா தரிசனத்தன்று காலை 4.00 மணியளவில் ஆனந்த தாண்டவருக்கும் சிவானந்த வல்லிக்கும் அற்புத மஹாபிஷேகம் நடைபெறுகின்றது. பஞ்ச கவ்யம், சந்தனம், மாவுப்பொடி, திருமஞ்சனப்பொடி, பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கருப்பஞ்சாறு, பழச்சாறுகள்,தேன், பன்னீர் என பல்வேறு திரவியங்கள் நதியாக அபிஷேகமாகின்றது அம்மையப்பருக்கு. தொடர்ந்து விலை உயர்ந்த நகைகள் மலர்களால் அலங்காரம் நடந்து வேத கோஷம், தேவார திருவாசகம் முழங்க மஹா தீபாராதனை நடைபெறுகின்றது. பின்னர் ஐயன் வெள்ளி சப்பரத்திலும், அம்மை தங்க சப்பரத்திலும் வெளிப்பிரகாரமும், பட்டி சுற்றும் மேடையை மூன்று முறையும், இரத வீதி வலம் வந்து அருள் பாலிக்கின்றனர். சொர்க்க வாசல் பூஜை, இராஜ கோபுர வாசல் பூஜை கண்டருளி, கனக சபையின் முன் மண்டபத்தில் ஆருத்ரா தரிசனம் தந்தருளுகின்றனர்.
கிராமங்களில் விழா கொண்டாடும்போது மக்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் தெளித்து மகிழ்வர். இதைப்போலவே இக்கோயிலில் மார்கழி திருவாதிரை விழாவின்போது சுவாமி மீதுமஞ்சள் நீர் தெளித்து, பின் அதையே பக்தர்கள் மீது தெளிக்கின்றனர்.இந்த மஞ்சள்நீருக்கு, “திருப்பொற்சுண்ணம்’ என்று பெயர். இதற்காக பிரத்யேகமாக உள்ள உரலில்மஞ்சளை பொடியாக்குகின்றனர்
இனி இத்தலத்தின் சிறப்பு நாட்களை காண்போமா? தினமும் ஐந்து காலப் பூஜை நடைபெறுகின்றது. ஆனியில் நாற்று நடவு உற்சவம், கார்த்திகை சோமவாரங்களில் காலை சங்காபிஷேகம் , மாலை அன்னாபிஷேகம், பங்குனியில் பத்து நாள் பெருவிழா, ஏழாம் நாள் திருத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பங்குனி உத்திரத்தன்று நடராஜர் உற்சவம்.
திருக்கோவிலுக்கு வெளியே கொங்கு மண்டலத்திற்க்கே உரித்தான தீப ஸ்தம்பம். காஞ்சிமா நதி என்னும் நொய்யல் நதியில் அமைந்துள்ள சோழன் படித்துறை அங்கு செல்லும் வழியில் உள்ள அருள்மிகு பட்டி விநாயகர் திருக்கோயில், பட்டி விநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். அரசம்பலவாணர் திருக்கோயில் மற்றம் அருள்மிகு பட்டீசவரர் கோயிலுக்கு அதன் இருமருங்கும் அமைந்துள்ள வடகயிலாயம், தென் கயிலாயம், திருக்கோயில் ஆகியவை எழிலுடன் அமைந்துள்ளன இத்தலத்தில். தலபுராணம், பேரூர் புராணம் கச்சியப்ப சிவாச்சாரியர் இயற்றியுள்ளார். மேலும் ஏயர்க்கோன் கலிக்காமர் சரிதத்தில் பெரிய புராணத்திலும், மும்மணிக் கோவையிலும் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.
என்னங்க எப்படி இருந்ததுங்க மேலைச் சிதம்பரம், கலைப்பொக்கிஷமாக திகழும் முக்திதலம் செல்ல இப்போதே கிளம்பிவிட்டீர்களா?

Friday, December 25, 2009

திருநல்லம் சுயம்பு நடராஜர் தரிசனம்

திருநல்லம் என்னும் கோனேரிராஜபுரம்



மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தின் மதி நிறைந்த நன்னாளில் ஆனந்தத் தாண்டவம் புரியும் ஐந்தொழில் புரியும் அம்பலவாணரின் ஆருத்ரா தரிசனம் கிடைக்கும் இந்த வருடம் ஆங்கில புத்தாண்டு அன்று ஆருத்ரா தரிசனம் வருகின்றது. ஒரு புது வருடத்தை தொடங்க இதை விட ஒரு அருமையான வாய்ப்பு கிட்டுமா? முடிந்தவர்கள் தில்லையில் சென்று சிற்றம்பலவாணரின் மஹா அபிஷேகத்தையும் திருவாதிரை தரிசனத்தையும் அல்லது திருவாரூர் சென்று தியாகராஜப்பெருமானின் வலது பாத தரிசனத்தையும் அல்லது உத்திரகோச மங்கை சென்று மரகத நடராஜர் தரிசனத்தையும் அல்லது பஞ்ச சபைகளின் மற்ற சபைகளில் பஞ்ச கிருத்திய பாராயணரின் நடனத்தையும், திருவொற்றியூரிலே செண்பக தியாகரின் பதினெட்டு வகை நடனத்தையோ கண்டு அருள் பெறுமாறு வேண்டுகின்றேன்.

ஆருத்ரா தரிசனத்தை ஒட்டி முதலில் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலத்தைப் பற்றி சில பதிவுகளை கண்டீர்கள். சென்ற வருடம் மற்ற பஞ்ச சபைகளை பற்றிக் கண்டீர்கள் இவ்வருடம் இன்னும் சில நடராஜத் தலங்களை தரிசனம் செய்யலாம் அவற்றுள் முதலில் நாம் தரிசனம் செய்யப்போகும் தலம். கோனேரிராஜபுரம் என்று அழைக்கப்படும் திருநல்லம் என்னும் பாடல் பெற்ற தலம். இத்தலத்தில் ஆனந்த கூத்தர் சுயம்பு உலோக மூர்த்தியாக நாம் எல்லோரும் உய்ய கோயில் கொண்ட வரலாற்றையும் இத்தலத்தின் மற்ற சிறப்பிக்களையும் இந்த ஆருத்ரா தரிசன காலத்தில் காணலாம் வாருங்கள் அன்பர்களே.

சுயம்பு நடராஜர், ஞான கூப கிணறு என
இத்தலத்தின் சிறப்புகளை காட்டும்
அற்புத கூரை ஓவியம்

அந்தி மதியோடும் அரவச்சடைதாழ


உந்தி யனலேந்தி முதுகாட்டெரியாடி


சிந்தித் தெழவல்லார் தீராவினை தீர்க்கும்

நந்தி நமையாள்வான் நல்லம் நகரானே - திருஞான சம்பந்தர்

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப்பழம் பொருளாய் பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனாய் எங்கும் நீக்கமற விலங்கும் சிவப்பரம்பொருள், உலக மக்கள் உய்ந்து சிறக்க கோவில் கொண்ட அருட்தலங்கள் நமது தமிழ் நாட்டில் பல உள்ளன. இவற்றுள் தேவாரப் பாடல் பெற்ற ஐயன், கருணைக்கரங்கள் விரித்தும்,அருள்விழிப்பார்வையில் அஞ்ஞான இருள் அகற்றியும் திருவிளையாடல் பல நிகழ்த்தி அற்புதம் காட்டியும் அருளை அமுதாய் பெருக்கியும் ஆட்கொண்டருளும் திருக்கோவில்கள் பலவற்றுள் காலப்பெருமையும் சாலப்பெருமையும் நிறைந்ததாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்தைப் பற்றி அறிந்து கொள்வோமா?

காவிரியின் தென் கரையில் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள் 34வது தலம் இத்தலம். மிகப் பெரிய சுயம்பு நடராஜப்பெருமானின் திருமேனி அமைந்துள்ள தலம். 3 நிலை ராஜ கோபுரத்துடன் இரண்டு பிரகாரங்களுடன் கூடிய இத்தலத்தில் எம் ஐயன் உமாமஹேஸ்வரராக மேற்கு நோக்கி எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இவர் பூமாதேவியால் பூசிக்கப்பெற்றவர். எனவே இவர் பூமிநாதர் என்றும் திருநாமம் பெற்றுள்ளர்.வீடு கட்டுவதில் சிக்கல், நிலப்பிரச்னை உள்ளவர்கள் இங்கு வழிபாடு செய்து பலனடைகிறார்கள். மேலும் நந்திகேஸ்வரர், சனத்குமாரர், கன்னுவர் ஆகியோர்களும் இவரை வழிபட்டு நலம் பெற்றுள்ளனர். நந்தி வழிபட்ட தலமானதால் பிரதோஷ காலத்தில் ஐயனை வணங்க ஒன்றுக்கு பல மடங்காக பலன் கிட்டும்.

இத்திருக்கோவில் சிவஞான செல்வரான கண்டராதித்த சோழனின் துனைவியும் சிவசேகரன் இராஜராஜ சோழனின் பாட்டி செம்பியன் மாதேவி அவர்களால் கற்றளியாக திருப்பணிச் செய்யப்பட்டது. இத்தலத்தில் அம்மை மங்கள நாயகி , தேக சுந்தரி என்னும் அங்கவளை நாயகி சன்னதி கிழக்கு நோக்கியும், ஐயன் சன்னதி மேற்கு நோக்கியும் ஒன்றையொன்று எதிர்நோக்கியவாறு கல்யாணக் கோலத்தில் அமைந்துள்ளன. ஐயனும் அம்மையும் மாலை மாற்றும் விதமாக அமைந்துள்ளதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு திருமணப்பேற்றை அருளுகின்றார் நல்லம் நகரார்.


வைகாசி பிரம்மோற்சவத்தின் போது
மாப்பிள்ளை சுவாமி அருள் பாலிக்கும் அழகு

திருமணஞ்சேரி, திருவீழிமிழலை போலவே இத்தலத்திலும் எம் ஐயன் மாப்பள்ளை சுவாமியாக (உற்சவ மூர்த்தி) எழுந்தருளியுள்ளார். அழகிய ரிஷபத்தின் மேல் ஒயிலாக சாய்ந்து கொண்டு எழிலார் தேவி பார்வதியுடன் ஐயனின் கோலம் காணக் கண்கோடி வேண்டும், எத்தனை நாட்கள் வேண்டுமென்றாலும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அப்படி ஒரு அழகு. திருமால் தாரை வார்த்து தரும் கோலத்தில் உடன் எழுந்தருளியுள்ளார்.

இங்குள்ள கல்வெட்டுக்கள் இராசராசன், இராசேந்திரன், முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன், முதலாம் குலோத்துங்கன் காலத்தியவை. கல்வெட்டில் இறைவன் 'திருநல்லம் உடையார் ' என்று குறிக்கப்படுகிறார்.வேங்கிபுரம் முதலிப்பிள்ளை என்பவன் நன்கொடையால் கோயில் கட்டப்பட்டதாகவும், 'நக்கன் நல்லத் தடிகள்' என்பவனால் சண்டேசுவரர் உற்சவத் திருமேனி செய்து தரப்பட்டது என்றும், குந்தவை பல நன்கொடைகளைக் கோயிலுக்குத் தந்துள்ளாள் என்றும் பல செய்திகள் கல்வெட்டு வாயிலாக தெரிய வருகின்றன.

இத்தலத்தின் தீர்த்தம் சக்தி தீர்த்தம். தல மரம் அரச மரம் மற்றும் வில்வம். காவிரியின் தென் கரையில் உள்ள பாடல் பெற்ற தலங்களில் 34வது தலம். அப்பர் மற்றும் சம்பந்தரால் பாடல் பெற்ற தலம். சம்பந்த பெருமானின் ஒரு பதிகம் இதோ:


கல்லா நிழன்மேய கறைசேர் கண்டாவென்

றெல்லா மொழியாலு மிமையோர் தொழுதேத்த

வில்லா லரண்மூன்ரூம் வெந்து விழசெய்தா

நல்லா னமையாள்வா நல்ல நகரானே!

அருட்பிரகாச வள்ளலார் காவிரி தென்கரை திருத்தலங்களை தரிசித்து வருகையில் திருநல்லத்திற்கும் எழுந்தருளி வழிபட்டதற்க்கு சான்று திருஅருட்பாவில் உள்ளது.


எட்டு அடி உயர சுயம்பு நடராஜர் சிவகாமியம்மையுடன்

தமிழகத்திலேயே பெரிய நடராஜர் சிலை இத்தலத்தில்தான் உள்ளது, ஐம்பொன் சிலை என்றாலும் சுயம்புவாக தோன்றிய சிலை. இத்தலத்தில் ஆடவல்லான் சுயம்புவாக தோன்றிய மிகவும் சுவையான வரலற்றைக் காண்போமா? கண்டராதித்த சோழன் திருத்தேவி , மாதேவடிகள் செம்பியன் மாதேவி தன் கணவர் நினைவாக இத்திருக்கோவிலை கற்றளியாக கட்டுவித்து திருமுழுக்குக்கான நாளையும் குறித்து விட்டார். அனைத்து தெய்வத்திரு மேனிகளும் தயாராகி விட்டன. ஆனால் நடராச பெருமானின் திருமேனி மட்டும் எவ்வளவு முயன்றும் சிற்பியினால் வடிக்க முடியவில்லை. எவ்வளவு முறை வார்த்தாலும் ஏதோ ஒரு குறை வந்து கொண்டே இருந்தது. ஆண்டவன் அத்திருத்தலத்தில் நடத்த இருத்தும் திருவிலையாடலை அறியாத சிற்பி ஒன்றும் புரியாமல் சிற்பி இறைவனை நோக்கி இறைஞ்சினார். என்பெருமானே இது என்ன சோதனை? ஏன் இவ்வாறு நடக்கின்றது? உன்னுடைய திருவுருவம் மட்டும் ஏன் அமையமாட்டேன் என்கிறது எப்படியாவது அரச தண்டனையிலிருந்து என்னைக் காப்பாற்று என்று.

தன்னுடைய அன்பனின் வேண்டுதலை ஏற்று இறைவன் இறைவியுடன் திருநல்லம் எழுந்தருளினார். எவ்வாறு எழுந்தருளினார்?, எம்பெருமான் திருவிலையாடல் நாயகன் அல்லவா அத்துடன் தன் அன்பர்கள் தன் கருணைக்கு பாத்திரமானவர்களா என்று சோதனை செய்யும் நாதன் அல்லவா. எனவே அவர் புலையனாக கையில் நான்கு வேதங்களையும் நாய்களாகப் பிடித்துக் கொண்டு அம்மை தலையில் கள் குடத்தை சுமந்தவாறு, ஸ்கந்தனை சிறு குழந்தையாக இடுப்பிலே ஏந்தி அஹ்ரகாரத்திலே, திருமாலும் நான் முகனும் காண ஒண்ணா மலர்ப் பாதம் நோக நடந்து வந்து வீடு வீடாக சென்று தண்ணீர் கேட்டார். கீழ் சாதிக்காரனென்று அறியாமையினால் அவர்கள் தண்ணீர் மறுக்க கோவிலில் கவலையுடன் அமர்ந்திருந்த சிற்பியிடம் வந்து தண்ணீர் கேட்க அவரும் கோப மிகுதியால் காய்ச்சி வைத்திருக்கின்ற ஐம்பொன் குழம்பு தான் உள்ளது நீ குடித்துக் கொள் என்றார். இறைவனும் அவ்வாறே அந்த குழம்பை குடித்து சுயம்புவாக அமர்ந்து விட்டார். நடந்த திருவிளையாடலை உணர்ந்த சிற்பி தண்டனிட்டு வணங்கினார். என்னே எம்பெருமானின் கருணை நம்மையெல்லாம் உய்விக்க தானே வந்து நமக்காக திருக்கோவில் கொண்டார்.

காலையில் எம்பெருமானின் திருமேனியைப் பார்த்த அரசி எவ்வாறு இரவுக்குள் இவ்வளவு அழகான திருமேனியை வடித்தாய் ? என்று வினவ , சிற்பியும் எம்பெருமானே தானே இறங்கி வந்து இங்கே அமர்ந்தார் என்று கூற நம்பாத மன்னனும் மற்றையோரும் சிற்பியை எள்ளி நகையாட, சிற்பி கண்ணீர் மல்கி இறைவனை வேண்ட, இறைவன் அசரீரிப்படி மன்னன் உளியால் காலில் வெட்ட குருதி பீரிட்டு வழிந்தோட , தன் தவறை உணர்ந்த மன்னனும் , அக்ரஹாரத்தாரும் எம்பெருமானின் லீலையை உணர்ந்து தண்டனிட்டு வணங்கி மன்னிப்பு பெற்றனர். இவர் சுயம்பு மூர்த்தம் என்பதற்கான ஆதாரம் கையில் உள்ள மச்சமும் கை விரல்களில் உள்ள ரேகைகளூம், அக்குளில் உள்ள தேமலும் மற்றும் அரசன் உளியால் ஏற்படுத்திய காயத்தின் தழும்பும் ஆகும். நடராசப் பெருமான் இங்கே எட்டடி உயரத்தில் சிவகாம சுந்தரியுடன் உலகிலே வேறு எங்குமே காணக் கிடைக்காத அற்புத கலைநயத்துடன் அருட் காட்சி தருகின்றார். அவரது அழகை கண்டார் விண்டிலர். பெருமானுக்கு வருடத்திலே ஆறு அபிஷேகமும் ஆருத்ரா தரிசன பிரம்மோற்சவமும் சிறப்பாக நடைபெறுகின்றது.

ஆருத்ரா தரிசன உற்சவம் பத்து நாள் உற்சவமாக இத்தலத்தில் நடைபெறுகின்றது.பத்து நாட்களும் தினமும் மாலை திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகின்றது. ஆருத்ரா தரிசனத்தன்று அதிகாலை ஆனந்த தாண்டவ மூர்த்திக்கும் சிவகாமியம்மைக்கும் அற்புத மஹா திருமஞ்சனம், சந்தனாபிஷேகம் மற்றும் தீபாரதனை உதய காலத்தில் ஆரூத்ரா தரிசனம் தந்தருளுகின்றார் ஐயன். பகல் 10 மணியளவில் மஹா தீபாராதனை மற்றும் திருவெம்பாவை பாடல் காட்சி. 11 மணியளவில் உற்சவமூர்த்தி மணடப தீபாரதணை என சிறப்பாக நடைபெறுகின்றது. இத்தலத்தில் ஆனந்த தாண்டவ நடராஜர் திருவீதி வலம் வருவது இல்லை.



தமக்கு நல்லது தம்முயிர் போயினால்

இமைக்கும் பொதும் இராதிக் குரம்பைதான்

உமைக்கும் நல்லவன்தான் உறையும்பதி

நமக்கு நல்லது நல்லம் அடைவதே.

புரூவரஸ் என்ற மன்னன் இங்கு தனி சன்னதியில் எழுந்தருளியுள்ள வைத்திய நாத பெருமானை வழிபட்டு தனக்கு வந்த குட்ட நோய் தீர்ந்து தன் நன்றியறிதலுக்காக இப்பெருமானுடைய விமானத்தை பொன் வேய்ந்ததோடு வைகாசி விசாகத்தன்று உற்சவம் நடத்த ஏற்பாடு செய்தான் என்பது வரலாறு. இவ்வாறு இத்தலத்தில் வருடத்தில் இரண்டு பெரு விழாக்கள் நடைபெறுகின்றன. வைத்தியநாதரை வழிபட எல்லா நோய்களும் விலகும் குறிப்பாக குட்ட நோய் குணமாகும்.


அங்கவளை நாயகி சிம்ம வாகன சேவை

நந்தி இல்லாத இத்தலத்தில் ஜபம் செய்தால் ஒன்றுக்கு பதின் மடங்காக ஜப பலன் பெறுவர் என்று கூறப்படுகின்றது. ஒரு கிளிக்கு ஆத்ம ஞானம் அளித்த ஞான கூபம் என்ற கிணறு இன்றும் காணக் கிடைக்கிறது. படிப்பில் மந்தமாக உள்ளவர்கள், ஞாபக சக்தி வேண்டுபவர்கள் இக்கிணற்று நீரை பருகினால் சிறந்த பலன் கிட்டும்.

திரிபுரத்தை எரித்த "திரிபுரசம்ஹாரமூர்த்தி' இத்தலத்தில் தனியாக அருள்பாலிக்கிறார். இவரை தேய்பிறை அஷ்டமியில் வழிபட்டால் எமபயம், எதிரிகளின் தொந்தரவு விலகும் என்பது ஐதீகம் இத்தல விநாயகர் அரசமர விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.. துர்கை மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறாள்.

திருமுருகன் தேவியர்களுடன் பவனி வரும் காட்சி


எமதர்மன் திருக்கடையூரில் ஏற்பட்ட பயத்தை போக்க இந்த துர்கையை வழிபாடு செய்துள்ளான். ஒரே மூலஸ்தானத்தில் 6 விநாயகர் அமர்ந்து விநாயகர் சபையாக அருள்பாலிக்கிறார்கள். இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டதுவாரபால விமானம் எனப்படும் அஷ்டதிக் பாலகர்கள் இங்கு வழிபாடு செய்ததன் நினைவாக கோயில் விமானத்தின் மேல் அஷ்டதிக் பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள். 16 சித்தர்கள் இங்கு வழிபாடு செய்துள்ளனர். மூன்று சண்டிகேஸ்வரர் உள்ளனர்.


பெருமாள் தாரை வார்த்து கொடுக்க சிவபார்வதி திருமணக்காட்சியை அகத்தியர் இங்கு தரிசனம் செய்துள்ளார். இங்குள்ள சனிபகவான் மேற்கு பார்த்த நிலையில் உள்ளார். நளனும் அவனது மனைவி தமயந்தியும் திருநள்ளாறு செல்லும் முன் இத்தலத்தில் வழிபாடு செய்து அனுக்கிரகம் பெற்றுள்ளனர். எனவே மற்ற தலங்களில் கருப்பு ஆடை அணிந்திருக்கும் சனி, இங்கு மட்டும் வெள்ளை ஆடை அணிந்து அனுக்கிரக மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு வெள்ளை எள்ளால் ஆன எண்ணையில் தீபம் போட வேண்டும்.சனி தோஷத்தில் பாதிக்கபட்டவர்கள் நலம் தரும் இச்சனி பகவானை வழிபடுவது சிறப்பு.

இத்தலத்திலுள்ள திருக்குளத்தில் நீராடி இறைவனை வழிபட்டு அரசை வலம் வருவோர் மக்கட் பேறு முதலிய எல்லா நலங்களும் பெறுவர். அதிசயமாக 11 இதழ் கொண்ட வில்வ மரம் இத்தலத்தில் உள்ளது இந்த வில்வம் காசி வில்வம் என்று அழைக்கப்படுகின்றது.

தெற்கு பிரகார சுவற்றில் பிக்ஷாடணர், அர்த்த நாரீஸ்வரர், துர்க்கை சிற்பங்களும், பின் பக்க சுவற்றில் பிரம்மா விஷ்ணுவுடன் லிங்கோத்பவர் சிற்பங்களும். வடக்கு சுவற்றில் ஆட வல்லான், ஆலமர் கடவுள், செம்பியன் மாதேவி, கண்டராதித்தர் சிவலிங்கத்தை வழிபடும் புடைப்பு சிற்பங்கள் அழகாக செதுக்கப் பட்டுள்ளன.

கோவில் மேற்கூரையில் வரையப்பட்டுள்ள வைகாசி விசாகத்தின் போது நடைபெறும் திருவிழாவின் சில ஓவியங்களை இப்பதிவில் இடம்பெற்றுள்ளன.

பொக்கம் பேசிப் பொழுது கழியாதே

துக்கம் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ

தக்கன் வேள்வி தகர்த்த தழல் வண்ணன்

நக்கன் சேர் நல்லம் நண்ணுதல் நன்மையே

என்ற திருநாவுக்கரசரின் பதிக்கத்தின் படி நாமும் திருநல்லம் சென்று அங்கவள நாயகி உடனுறை உமா மஹேஸ்வரறையும் , சிவகாம சுந்தரி உடனுறை நடராசப் பெருமானையும் வழிபட்டு நன்மையடைவோமாக.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேருந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும், வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது ஐயன் அற்புத கலை அழகுடன் அருள் பாலிக்கும் கோனேரிராஜபுரம்.


* * *