Monday, December 8, 2008

கார்த்திகை சோம வார விரதம் -4





கார்த்திகை மாதத்தின் முதல் வாரம் கார்த்திகை மாதத்தின் சிறப்புகளை கண்டோம்.

பின் இரண்டாம் வாரம் கார்த்திகை சோம வார விரதம் அனுஷ்டிக்கும் முறை பற்றியும்.

மூன்றாம் வாரம் சங்காபிஷேகம் பற்றி கண்டோம்.

இந்த வாரம் பல்வேறு ஆலயங்களில் கார்த்திகை சோமவாரம் எவ்வாறு கொண்டாடபப்டுகின்றது என்று பார்ப்போம்.


கார்த்திகை சோமவாரத்தன்று எம்பெருமானுக்கு மணிவளர் கண்டருக்கு, இலை புனல் வேலருக்கு, செஞ்சுடர் வண்ணருக்கு, சாந்தணி மார்வருக்கு, ஏறது ஏறியவருக்கு, சங்கொளி வண்ணருக்கு பூணொடு மார்பருக்கு எந்தெந்த சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றது என்பதை பார்ப்போம்.


கார்த்திகை சோமவாரத்தன்று சகல சிவாலயங்களிலும் சந்திரனாம் சோமனுக்கு அருள் புரிந்து தட்சன் சாபம் போக்கி பிறை சந்திரனை ஜடா முடியில் அணிந்த சந்திர சேகரராம் லிங்க மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூசனைகள் நடை பெறுகின்றன. பல் வேறு ஆலயங்களிலும் பல் வேறு வகைகளில் வழிபாடு நடை பெறுகின்றது. திரு நெல்வேலியிலே நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி தந்தருளுகின்றார்.

பைங்கண்வாள் அரவணை யவனொடு பனிமல ரோனுங் காணா

அங்கணா அருளென அவரவர் முறைமுறை யிறைஞ்ச நின்றார்

சங்க நான் மறையவர் நிறைதீர அரிவையர் ஆடல் பேணத்

திங்கள் நாள் விழமல்கு திருநெல்வே லியுறை செல்வர் தாமே.

கார்த்திகை மாதம் தீப மாதம் என்பதால் பல ஆலயங்களில் 1008, இலட்சம் என விளக்குகள் ஏற்றப்படுகின்றன. சென்னை பூந்தமல்லியிலுள்ள ஒத்தாண்டீஸ்வரர் ஆலயத்தில் மூன்றாவது வாரம் இலட்சம் தீபங்கள் ஏற்றப்படுகின்றன பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகின்றது.. சங்காபிஷேகம் இல்லாத சில ஆலயங்களில் சம்போ சங்கர உமாபதிக்கு, சாம்ப சுந்தர பசுபதிக்கு, நந்தி வாகனனருக்கு, நாக பூஷணருக்கு, சந்திர சேகரருக்கு சிறப்பு அலங்காரங்களும் சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.

பல தலங்களில் முதல் மூன்று வாரங்கள் 108 சங்காபிஷேகமும், நிறை வாரம் மட்டும் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. திருநள்ளார், சென்னை புரசை கங்காதீஸ்வரர் ஆலயம், திருமயிலை கபாலீச்சுரம், திருகுன்றக்குடி, சென்னை வேளச்சேரி தாண்டீஸ்வரர் ஆலயம், சென்னை சைதாப்பேட்டை காரணிஸ்வரர் ஆலயம் ஆகியவை இத்தகைய சில தலங்கள்.


திருமயிலையில்முதல் நான்கு வாரங்கள் 108 சங்காபிஷேகம் சங்கு பூஜை நந்தியின் முன்னே நடைபெறுகின்றது, நிறை வாரம் ஐந்தாவது வாரம் (மார்கழியில் வந்தால் கூட) முதல் நாள் இரவு (ஞாயிறு மாலை) முதல் கால பூஜை மற்றும் சங்காபிஷேகத்தன்று இரண்டாம் கால பூஜை நடைபெற்று உச்சிக் காலத்தில் கபாலீஸ்வரருக்கு 1008 சங்காபிஷேகம் சிறப்பாக நடைபெறுகின்றது நிறை வார சங்கு பூஜை நவராத்திரி மண்டபத்தில் நடைபெறுகின்றது.


திருக்கழுகுன்றத்தில் வது வாரம் உச்சிக் காலத்தில் 1008 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. 12 வருடங்களுக்கு ஒரு முறை சங்கு குளத்தில் விளையும் சங்குகள் சங்காபிஷேகத்தில் பயன் படுத்தப்படுவது இத்தலத்தின் சங்காபிஷேகத்தின் சிறப்பு


திருநள்ளாற்றிலே நிறை வாரம் 1008 சங்காபிஷேகம், மரகத லிங்க விடங்கருக்கும் அன்றைய தினம் சங்காபிஷேகம் நடைபெறுகின்றது.


சென்னை வேளச்சேரி தாண்டீஸ்வரர் ஆலயத்தில் நிறை வாரம் 1008 சங்குகளுக்கு 4 கால பூஜை நடைபெற்று, அதாவது இரண்டு நாட்கள் பூஜைகள் நடத்தப்பெற்று பின் எம்பெருமானுக்கு சங்காபிஷேகம் நடத்தப்படுகின்றது.


திருவண்ணாமலையில் சோமவாரம் நடைபெறும் சங்காபிஷேகம் அல்லாது கார்த்திகை பெரு விழாவின் மூன்றாம் நாள் உற்சவத்தன்று மாலை 1008 சிறப்பு சங்காபிஷேகம் நடைபெறுகின்றது.


காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் திருக்கோவில், ஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சுயம்வர தபஸ்வினி சமேத பார்வதீஸ்வரர் ஆகிய திருத்தலங்களில் 108 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. தஞ்சை மாவட்டத்தில் அனேகமாக அனைத்து சிவத்தலங்களிலும் சங்காபிஷேகம் நடைபெறுகின்றது.


சென்னை மகாலிங்கபுரம் அபீதகுஜாம்பாள் சமேத மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் ஏகாதச ருத்ர பாராயணம் நடைபெற்று பின் எம்பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது ஒரு வருடம் சங்கங்களை பெரிய சங்கு போலவே அமைத்திருந்தனர்.




சென்னை மாம்பலம் சக்ர விநாயகர் ஆலயத்தில் சங்குகளை சிவ லிங்க வடிவில் நேர்த்தியாக அலங்காரம் செய்து மிக சிரத்தையுடன் சங்காபிஷேகம் நடத்தப்படுகின்றது.

பிரதோஷம் தோறும் அடியேன் ஸ்ரீ ருத்ரமும், சிவஸ்தோத்திரங்களும் பாராயணம் செய்யும் சென்னை அசோக் நகர் சொர்ணாம்பிகை சமேத ஸ்வர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் மூன்றாம் வாரம் 108 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது.

சென்னை அசோக் நகர் கருமாரி திரிபுரசுந்தரி ஆலயத்தில் நிறை வாரம் சங்காபிஷேகம் நடைபெறுகின்றது.

வடபழனி சாந்தநாயகி சமேத வேங்கீஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகை சோம வாரங்களில் சங்காபிஷேகம் நடைபெறுவதில்லை ஆனால் உலக அமைதிக்காகவும் சுபிட்சத்திற்காகவும் வருடத்தில் ஒரு தடவை 1008 சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. நான்கு கால பூஜையுடன் இரண்டு நாட்கள் மிக சிறப்பாக நடைபெறுகின்றது.


முருகன் ஆலயங்களிலும் முருகருக்கு சங்காபிஷேகம் நடைபெறுகின்றது. ஆண்டவனின் சித்தத்தினால் வடபழனி திருமுருகன் தனது சங்காபிஷேகத்தையும் ஒரு தடவை காணும் பாக்கியம் கிட்டியது அவர் அருளால்.

கார்த்திகை சோம வார விரத நாட்களன்று ஸ்ரீருத்ர பாராயணம் மிகவும் விஷேசமானது குறிப்பாக ஏகாதச ருத்ர ஜபம் மிகவும் உகந்தது. . நமது தென் நாட்டில் கார்த்திகை சோமவாரத்தன்று சிவபெருமானுக்கு சிறப்பு பூசனைகள் செய்கின்றோம் ஆனால் வட நாட்டிலே சிரவண மாதம் அதாவது நமது ஆடி மாதத்தின் சோமவாரத்தன்று சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுகின்றன. பெரும்பாலோனார் நம் ஊர் காவடி போன்று ஒரு தண்டின் இரு முனைகளிலும் நீர் சொம்பு கட்டி, நடை பயணம் வந்து சிவபெருமானுக்கு சிரவண சோமவாரத்தன்று அபிஷேகம் செய்வதைக் காணலாம்.