Saturday, June 28, 2008

பஞ்ச சபைகள் - வெள்ளியம்பலம் - மதுரை

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.







தோற்றந் துடியதனில் தோயுந் திதியமைப்பில்
சாற்றிடும் அங்கியிலே சங்காரம் -ஊற்றமா
ஊன்று மலர்ப் பதத்தில் உற்ற திரோதம் முத்தி
நான்ற மலர் பதத்தே நாடு.

என்ற படி வலக்கையில் தாங்கியுள்ள உடுக்கை படைத்தலையும், உடுக்கையிலிருந்து கிளம்பும் ஓம் ஓம் என்னும் நாதமே படைப்பிற்க்கு மூல காரணம். மற்ற வலக்கரம் சிவாய நம என்றிருப்போர்க்கு ஒரு அபாயமும் இல்லை அபய முத்திரையாக படைத்தவற்றைக் காத்தலையும், இடக்கையில் தாங்கியுள்ள அனல் அழித்தலையும், உயிர்களை இளைப்பாற்ற அழிப்பவனும் ருத்ர ரூபமான சிவனே. இருள் இல்லாமல் பகல் இல்லை அது போல அழிவு இல்லாமல் ஆக்கமும் இல்லை. இடது கீழ்க்கரம் என்னுடைய மலர்ப்பதத்தையே நாடு அதுவே உனக்கு உய்ய வழி என்று சரணாகதியை உணர்த்துகின்றது. வலது கால் ஆணவமாம் முயலகனை அழுத்தி அவ்ரவர்கள் வினைக்கு ஏற்ப மறைத்தலைக் குறிப்பிடுகின்றது. குஞ்சித பாதம் என்னும் தூக்கிய திருவடி அருளலைக் (முக்திபேறு) குறிக்கின்றது .


இவ்வாறு ஆனந்த நடமாடும் அம்பல வாணரின் பஞ்ச சபைகளுள் முதன்மையானது பொன்னம்பலம், தில்லை , அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம், பெரும்பற்றப்புலியூர், என்றும் சைவர்களுக்கு கோவில் என்றும் வழங்கப்படும் சிதம்பரம். இத்தில்லைத் தலத்தின் பெருமையை அந்த ஆயிரம் நாவுகள் கொண்ட ஆதி சேஷனாலும் கூற முடியாது. கீதா சாம்பசிவம் அம்மையார் தமது ஆன்மீக பயணம் பதிவில் தில்லை சிதம்பர இரகசியங்கள் பலவ்ற்றைப் பற்றி எழுதியுள்ளார் ஆகவே இந்த ஆனி உத்திர புண்ணிய சமயத்தில் மற்ற நான்கு சபைகளில் பிறப்பறுக்கும் பிஞ்ஞகனை தரிசனம் செய்வோம்.




வெள்ளியம்பலவா போற்றி


பஞ்ச சபைகளுள் இரண்டாவது, வெள்ளியம்பலமாம் மதுரை. மதுரையைப்பற்றி அன்பர் சிவமுருகன் ஒரு அருமையான காவியப் பதிவே படைத்துள்ளார் ஆகவே நாம் மதுரையின் சிறப்பை அதிகம் பாராது வெள்ளியம்பலத்தில் பத்து கரங்களில் ஆயுதங்கள் தாங்கி கால் மாறி ஆடிடும் கண்ணுதலானின் அழகை தரிசனம் செய்வோம்.

மதுரை இந்திரன் பொற்றாமரை குளத்தின் பொற்றாமரை மலரால் கடம்ப வன்த்தில் தாயிற் சிறந்த தயாபரன் சிவபெருமானை பூசித்த தலம். ஐராவதம் இறைவனை வழிபட்டு தன் சாபம் நீங்கப்பெற்ற தலம். கிஞ்சுக வாயவள் உமை பங்கன் தனது திருமுடியில் அணிந்துள்ள சந்திரனின் அமுத தாரைகளின்= மது( தேன் துளிகள்) சிதறியதால் மதுரையான தலம். நாகம் தனது வாயால் வாலைப் பிடித்து மதுரையினை உருவாக்கியதால் ஆலவாய்( ஆலம்- விடம்) ஆனது.சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம். பாண்டிய மன்னனாக வந்து சொக்கேசப்பெருமானே 64 திருவிளையாடல்கள் ஆடிய தலம். சம்பந்தர் கூன் பாண்டியனை நின்ற சீர் நெடுமாறனாக்கிய தலம். மங்கையர்க்கரசியும் அமைச்சர் குலச்சிறையாரும் வழிபட்ட தலம். அன்னை மீனாட்சி அங்கயற்கண்ணியாய் எவ்வாறு மீன் தன் குஞ்சுகளுககு கண்ணினாலேயே உணவூட்டி வளர்ப்பது போல நம்மை காத்து இரட்சிக அங்கயற்கண்ணியாய் எழுந்தருளி அருள் பாலிக்கும் தலம். அன்னையின் சக்தி பீடங்களில் ஒன்று. ஸ்ரீ மீனாக்ஷி அம்மன் ஸ்ரீ லலிதா பரமேஸ்வரியின் குதிரைப் படை தளபதி இராஜ மாதங்கியாய் கொண்டை முடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில் வைத்து நன் இன்னல் தீர்க்கும் தலம். இனி மருவார் குழலி பங்கன் இத்திருமதுரையில் வெள்ளியம்பலம் கொண்ட வரலாற்றைக் காண்போம்.




மலயத்துவஜ பாண்டியனுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் இருந்தது. எனவே அவர் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். யாகத்தீயிலிருந்து அன்னை ஜகத் ஜனனி, திரிபுர சுந்தரி ஒரு குழந்தையாக அவதாரம் செய்தாள். ஆனால் இயற்கைக்கு மாறாக அந்த தெய்வீகக் குழந்தைக்கு மூன்று தனங்கள் இருந்தன. மன்னனும் காஞ்சன மாலையும் கவலையுடன் தங்கள் மகளை பார்க்க ஒரு அசரீரி ஒலித்தது. மன்னா கவலைப்பட வேண்டாம் இம்மகளை ஒரு இளவரசனைப் போல வளர்த்து வரவும். தக்க சமயத்தில் இவளுக்கு உரிய மணவாளன் வரும் போது ஒரு தனம் மறையும் என்று உரைத்தது. மன்னனும் அம்மைக்கு தடாதகைப் பிராட்டி என்று திருநாமமிட்டு ஒரு இளவரசனைப் போல போர்ப்பயிற்சி முதலான அளித்து வளர்த்தனர்.

கால் மாறி ஆடிய கபாலியின் ஆடல்

செப்புத்திருமேனியும் கற்திருமேனியும்

அம்மை சிவகாம சுந்தரியும் தரிசனம்



பருவம் அடைந்தவுடன் அன்னை பாண்டிமா தேவியாக முடி சூட்டினர். அம்மையும் திக் விஜயம் செய்யப் புறப்பட்டாள். அனைத்து திசைகளிலும் சென்று தேவர்கள் அனைவரையும் வென்று இறுதியாக ஈசான திசையில் திருக்கயிலாயத்திற்கு வருகின்றாள். அனனை போருக்கு வந்ததும் உண்மையை உணராத நந்தி தேவர் அம்மையுடன் போர் செய்து தோற்று ஐயனிடம் சென்று உரைக்கின்றார். தன்னில் பாதியுடன் சண்டையிட ஐயன் தானே வாருகின்றார். ஐயனைப் பார்த்தவுடன் அம்மையின் மூன்றாவது தனம் மறைந்தது. தன் முன்னே நிற்பவர் சர்வேஸ்வரர் மற்றுமள்ள தன் நாயகன் தான் என்பதை அன்னை உணர்ந்து அடி பணிந்து நின்றாள். ஐயனும் பாண்டி நாடு செல்க யாம் வந்து உம்மை சுந்தரராக மணம் முடித்து பாண்டி நாட்டை ஆள்வோம் என்று அருளினார்.

ஆருத்ரா தரிசனத்தன்று சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி அம்பலவன்


பாரெல்லாம் வியக்க மீனாட்சி சொக்கரின் திருமணம் மதுரையில் நடந்தது , அண்ணன் திருமால் தாரை வார்த்து அங்கயற்கண் அம்மையை கன்னிகாதானம் செய்து கொடுத்தார் சுந்தரருக்கு. திருமணத்திற்க்கு பதஞ்சலி முனிவரும் வியாக்ரபாத முனிவரும் வந்திருந்தனர். அவர்கள் இருவரும் மதிய உணவு உண்ணாமல் சிதம்பரத்திற்கு புறப்பட்டனர். ஐயனின் ஆனந்தத் தாண்டவத்தை கண்ட பின் தான் உணவு உட்கொள்வோம் என்று. அதற்கென்ன இங்கேயே ஆனந்தத்தாண்டவத்தை காட்டி அருளுகின்றேன் என்று வெள்ளி அம்பலம் அமைத்து முனிவர் இருவரும் மகிழ, கூடியுள்ளோர் எல்லோரும் உய்ய சுந்தர நடமாடினார் தென் தில்லை மன்றினில் ஆடும் அம்பலவாணர்.இந்த அற்புத தாண்டவத்தை பதஞ்சலி இவ்வாறு பாடுகின்றார்.

அடியாரெம்பொருட்டு வெள்ளியம்பால்த்தாடல் போற்றி

பொடிபடிந் தடந்தோள் போற்றி

கடியவிழ் மலர் பொன் கூந்தல் கயல்விழி பாக போற்றி

நெய்தற் பரமானந்த நிருத்தனே போற்றி.


ஐயன் முதன் முதலில் இரதஜ சபையில் ஆடியது உச்சிக்காலம் என்பதால உச்சி கால பூஜை மிகவும் சிறப்பானது வெள்ளியம்லத்தில் கால் மாறி ஆடும் ஐயனுக்கு. இனி கால் மாறி ஆடிய வரலாற்றைக் காண்போம்.

இராஜ சேகர பாண்டியன் மன்னனாக இருந்த போது 64 கலைகளையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தினால் நாட்டியக் கலையையும் கற்றுக்கொண்டான்.அவ்வாறு அவன் ஆடும் போது ஒற்றைக்காலைத் தூக்கிக் கொண்டு ஆடும் ஐயனுக்கு எப்படி கால் வலிக்குமென்று நினைத்து அன்பின் மிகுதியால் ஐயா தாங்கள் கால் மாறி ஆட வேண்டும் என்று வேண்ட ஐயனும் அவ்வாறே கால் மாறி ஆடினார். பின்னர் இராஜ சேகர பாண்டியன்

என்று மிப்படியே யிந்தத் திருநடனம் யாருங் காண

நின்றருள் செய்ய வேண்டு நிருமலமாக வெள்ளி

மன்றவ வடியேன் வேண்டும் வரமிது என்று தாழ்ந்தனன்

அன்றுதொட் டின்று மெங்கோ னந்தநட நிலையின்ருன்

( திருவிளையாடற் புராணம் -கால் மாறி ஆடிய படலம்)


வரம் வேண்ட ஐயனும் அதே கோலத்தில் தரிசனம் தருகின்றார்.

வெள்ளியம்பலத்தில் செப்புத் திருமேனியும் கற் திருமேனியும் உள்ளன. வெள்ளி கவசத்தில் மின்னுகின்றார் ஐயன் மாப்பெருங்கருணையன், குவளைக் கண்ணி கூறன். மேலும் ஒரு சிறப்பு வெள்ளி அம்பல வாணருரின் அருள் தரிசன்த்தில் பத்துக் கரங்களில் ஐயன் ஆயுதங்களுடன் தரிசனம் தருகின்றார். பாண்டி மா தேவி அங்கயற்கண்ணியை மணம் முடித்த போது நான் பழம் பெருமை பெற்ற தென் பாண்டி நாட்டின் மன்னனாக அரசாளுவேன் என்று கொடுத்த வாக்கின் படி சுந்தரேசர் பாண்டிய மன்னனாக இருந்து அரசாண்டதால் திருக்கரங்களில் ஆயுதங்களுடன் தரிசனம் தருகின்றார் எங்கோன்.





எம் கோன் பாண்டியனாம் எங்கள் ஆண்டவர்




ஆடக மதுரை அரசே போற்றி



கூடல் இலங்கு குருமணி போற்றி



கண்ணார் அமுதக் கடலே போற்றி



கயிலை மலையானே போற்றி போற்றி





சிதம்பரத்தைப் போலவே மதுரையிலும் ஐந்து சபைகள் உள்ளன. ஐயன் கால் மாறி ஆடிடும் வெள்ளியம்பலம். சுவாமி சன்னதியின் முதல் பிரகாரத்தில் கனக சபை மற்றும் இரத்தின சபை, நூற்றுக்கால் மண்டபத்தில் தேவ சபை ஆயிரங்கால் மண்டபத்தில் சித்திர சபை என்று ஐந்து சபைகள் மதுரையிலும் உள்ளன.


ஆருத்ரா தரிசனத்தன்று நூற்றுக்கால் மண்டபத்தில் பஞ்சசபை நடராஜர் மற்றும் ஆறு கால் பீடத்தில் வெள்ளி அம்பல நடராஜருக்கு விசேஷ பூஜைகள். பின்னர் சிவகாம சுந்தரியுடன் நடராஜர் கரி உரித்த வாகனத்தில் மாசி வீதிகளில் வலம் வருகின்றார் மாணிக்க வாசகரும் உடன் வருகின்றார்.

அடுத்த பதிவில் தாமிர அம்பலமாம் திருநெல்வேலியின் தரிசனம் பெறுவோம்.


படங்களுக்கு நன்றி சிவமுருகன்.


தில்லை ஆனி திருமஞ்சனம் : மூன்றாம் நாள் தங்க சூரியப்பிரபை வாகனக்காட்சி. நான்காம் நாள் வெள்ளி பூத வாகனக் காட்சி.

3 comments:

jeevagv said...

//சிதம்பரத்தைப் போலவே மதுரையிலும் ஐந்து சபைகள் உள்ளன. //
வெள்ளியம்பல சபை மட்டும் இல்லாமல் ஐந்து சபைகளும் ஒருங்கே இருக்க ஏதேனும் காரணம் இருக்கும் போலும்!

S.Muruganandam said...

ஆம் பல்வேறு காரணங்களினல் இவ்வாறு தெய்வ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்படுகின்றன.

அக்கோவிலின் பல்வேறு ஐதீகங்களை ஒட்டி ஒன்றுக்கு மேற்பட்ட சன்னதிகள்/சபைகள் அமைந்தன.

பல்வேறு அருளாளர்களும் பெரியோர்களும் பிரதிஷ்டை செய்து வழிபடட தெய்வ மூர்த்தங்கள் அவர்கள் பெயரால் வழங்கப்படூகின்றன.

மேலும் ஒரே இடத்தில் வழிபடுமாறு பல்வேறு சன்னதிகள் அமைந்தன.
திருக்கோவில்கள் பல்வேறு

மன்னர்களால் விரிவு படுத்தப்பட்ட போது அவர்களின் இஷ்ட தெய்வங்களை பிரதிஷ்டை செய்தனர்.

மதுரையில் பஞ்ச சபைகள் அமைந்ததற்கான காரணங்கள் இவற்றுக்குள் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். தெரிந்த அன்பர்கள் அவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.

N.D. NATARAJA DEEKSHIDHAR said...

www.natarajadeekshidhar.blogspot.com,
அவசியம் இந்தப் பதிவைப் பாருங்கள்