Saturday, June 28, 2008

ஆடல் காணீரோ

அம்பலத்தாடும் எம் ஐயன் ஆடல் காணீரோ
ஆனி உத்திர நன்னாளில் ஆடல் காணீரோ.

தத்துவம் ஆடச் சதாசிவந் தான் ஆட


சித்தமும் ஆடச் சிவசக்தி தான் ஆட


வைத்த சராசரமும் ஆட மறை ஆட


அத்தனும் ஆடினான் ஆனந்த கூத்தன்றே.

அம்பலத்தாடும் என் ஐயனுக்கு ஆனந்த கூத்தனுக்கு வருடத்திலே ஆறு திருமுழுக்குகள். அவை தேவர்கள் அண்டர் நாயகனுக்கு செய்யும் பூஜை என்பது ஐதீகம். அவற்றில் மூன்று நட்சத்திரங்களை அடிப்படையாகக் கொண்டவை அவையாவன உதய கால பூஜை மார்கழித் திருவாதிரை, பிரதோஷ கால பூஜை ஆனி உத்திரம், மற்றும் உச்சிக்கால பூஜை சித்திரைத் திருவோணம் ஆகும். திதிகளை அடிப்படையாக கொண்டவை மற்ற மூன்று பூஜைகளான மாசி, ஆவணி மற்றும் புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி திருமுழுக்குகள் ஆகும். இவற்றுள் மார்கழித் திருவாதிரையும், ஆனி உத்திரமும் பத்து நாள் விழாவாக சிறப்பாக தில்லையிலே ஐயன் ஆனந்த தாண்டவ மூர்த்தியாக, பஞ்ச கிருத்திய பாராயணனாக ஆடிடும் தில்லை பொன்னம்பலத்திலே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. தினமும் பஞ்ச மூர்த்திகள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி தரிசனம் தந்து அருள் பாலிக்கின்றனர். ஒன்பதாம் நாள் எளி வந்த கருணையினால் ஆனந்த நடராசரும், சிவகாமியம்மையுமே பொன்னம்பலத்தை விடுத்து வெளியே வந்து திருத்தேரோட்டம் கண்டு பின் பத்தாம் நாள் காலை அருணோதய காலத்தில் மஹா அபிஷேகம் கண்டருளி சித்சபைக்கு திரும்புகின்றனர். இந்த வருடம் ஆனி திருமஞ்சனம் 09/07/08 அன்று. ஆகவே அடுத்த பத்து நாட்களில் ஐயன் ஆடும் பஞ்ச சபைகளையும் வலம் வந்து மை கலந்த கண்ணி பங்கன் அருள் பெறுவோம் வாருங்கள்.

தென்னாடுடைய சிவனுக்கு, எந்நாட்டவர்க்கும் இறைவனுக்கு, திருக்கயிலை நாதனுக்கு முகங்கள் ஐந்து, அவர் புரியும் தொழில்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்று ஐந்து. அவருடைய திருமந்திரமும் ஓம் நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து. அவர் ஆடும் ஐந்து அவையாவன1.பொன்னம்பலம் - கனக சபை - தில்லை சிதம்பரம் - ஆனந்த தாண்டவம்- ஐயன் ஐந்தொழில் புரிவதைக் குறிக்கும்- மூவுலகையும் சிருஷ்டித்த போது ஆடிய தாண்டவம்.

2. வெள்ளியம்பலம் - ரதஜ சபை - மதுரை- சந்தியா தாண்டவம் - காத்தல் தொழிலை குறிக்கும் - பலவித தாளம் இசை வாத்தியங்களை உருவாக்க மாலையில் ஆடிய ஆட்டம்.

3.செப்பம்பலம் - தாமிர சபை - திருநெல்வேலி - முனி தாண்டவம் - படைத்தல் தொழிலைக் குறிக்கும் - பதஞ்சலி முனிவர் தாளம் இசைக்க ஆடிய ஆட்டம்.

4.சித்ரம்பலம் -சித்திர சபை - திருக்குற்றாலம் - திரிபுர தாண்டவம் - மறைத்தல் தொழிலைக் குறிக்கின்றது - திரிபுரம் எரித்த போது பூமியையும் ஆகாயத்தையும் அடக்கிய போது ஆடிய ஆட்டம்.

5.மணியம்பலம் - இரத்தின சபை - திருவாலங்காடு - ஊர்த்துவ தாண்டவம் - அருளல் தொழிலைக் குறிக்கின்றது - காளியின் செருக்கை அடக்க காலை தலைக்கு மேலே தூக்கி ஆடியது.

இவற்றுள் பொன்னம்பத்தைப்பற்றி முதலிலேயே கண்டுள்ளதால் மற்ற நான்கு அம்பலங்களைப்பற்றி இந்த ஆனி உத்திர சமயத்தில் காணலாம். ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனித் திருமஞ்சன தரிசனம் இரண்டுக்கும் உள்ள சிறு வித்தியாசம். ஆருத்ரா தரிசனம் மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் வரும் என்பதால் மாணிக்க வாசகரின் திருவெம்பாவை நாள் தோறும் அம்பலவாணர் திருமுன்பு இசைக்கப்படுகின்றது. மேலும் தரிசனம் தந்து கனக சபைக்கு எழுந்தருளும் போது ஐயன் ஆனந்த தாண்டவக் காட்சி தந்தருளுகின்றார். ஆனி திருமஞ்சன திருவிழாவின் போது மாணிக்க வாசகரின் குரு பூஜை நாளான ஆனி மாமகம் வருகின்றது. அன்றுதான் ஆண்டவன் தன் கரம் வருந்த மணிவாசகரின் திருவாசகத்தை தானே சுவாமிகள் கூற ஓலைச் சுவடியில் எழுதி "மாணிக்க வாசகர் சொல்ல அழகிய திருச்சிற்றம்ப்லமுடையார் எழுதியது" என்று கைசாத்திட்டுப் சிற்சபையின் பஞ்சாக்கரப் படியில் ஒருவருங்காணாதவாறு வைத்தனன்.


தில்லை வாழ் அந்தணர் இவ்வேட்டை மணிவாசகரிடம் காட்டி , இப்பாடல்களின் பொருளைத் தெரிவிக்க வேண்டுமென்று வேண்ட அவ்ரும் அவ்ர்களை அழைத்து சென்று தில்லைத் திருக்கூத்தனைக் சுட்டிக் காட்டி இவனே பொருல்ளெனக் காட்டி அவன் திருவடியில் இரண்டறக் கலந்தார். எனவே அன்றைய தினத்தில் ஐயனுடன் மாணிக்க வாசகரும் திருவலம் வருகின்றார்.
நாம் எல்லோரும் உய்ய அகிலமனைத்தும் தனது இயக்கத்தால் ஆட்டி வைக்கும் ஐயன் ஆடும் அழகை நேரில் கண்டு களிக்கும் பேறு பெற்ற காரைக்காலம்மையார் இவ்வாறு பாடுகின்றார்.

அடிபேரில் பாதாளம் பேரும் அடியார்


முடி பேரில் மா முகடு பேரும் தொடிகள்


மறிந்தாடும் கைபேரில் வான் திசைகள் பேரும்


அறிந்தாடும் ஆறு என் அரங்கு.

ஐயா தங்களது ஒரு அடி மாறினால் பாதாளம் மாறும், மற்றோரு அடி மாறினால் மலை முகடுகள் இடம்மாறும், திருகரங்கள் மாறினால் திசைகள் அனைத்தும் இடம் பெயரும், ஆயினுன் அளவில்லாத கருணையினால் தாங்கள் அம்பத்துல் ஆனந்தமாக ஆடி அனைத்தையும் சீராக வைத்திருக்கும் மாபெரும்கருணைதான் என்னே? என்று வியக்கிறார் இன்றும் தாளம் இசைத்துக்கொண்டு திருவாலங்காட்டில் ஐயன் திருவடி நீழலில் அமர்ந்திருக்கும் அம்மையார்.திருஅருட்பா பாடிய வள்ளலார் சுவாமிகள் ஆடையிலே அவரை மணந்த மணவாளராக அம்பலத்தரசை பொது நடத்தரசை போற்றி பாடிய பாடல்.

கோடையிலே இளைப்பாறிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல் கனிந்த கனியே

ஓடையிலே ஊருகின்ற தீஞ்சுவைத் தண்ணீரே
உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்த மண மலரே

மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளை சுகமே சுகத்திலுறும் பயனே

ஆடையிலே எனை மணந்த மணவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசே என் அலங்கணிந்தருளே.கோடைக்காலத்தில் குளிர் நிழல் வழங்கும் வள்ளல், உண்ணத் தெவிட்டாத கனி, தீஞ்சுவைத் தண்ணீர், மணம் வீசும் மலர், மலரிலிருந்து வீசும் தென்றல் அந்த அம்பல வாணர்.

ஆனி திருமஞ்சன பெருவிழா: சிவகாம சுந்தரி சமேத ஸ்ரீ ஆன்ந்த நடராஜ சுவாமி ஆனித்திருமஞ்சன மஹோற்சவம் இன்று நலமலி தில்லையில் இன்று தொடங்குகின்றது. விக்னேஸ்வர பூஜை, ஐயனிடம் அனுமதி பெறுதல், மண் சேகரித்தல், முளைப்பாலிகை இடுதல் ஆகிய வைபவங்கள் முடிந்து இன்று காலை கொடியேற்றம், உமாபதி சிவம் தில்லை நடராசர் அருளால் பாடி கொடி உயர்ந்த கொடிக்கவி பாடி கொடியேற்றி விழா தொடக்கம். இரவு பஞ்ச மூர்த்திகள் பவனி. விநாயகர் மூஷிகம், சோமாஸ்கந்தர் வெள்ளி மஞ்சம், சிவானந்த வல்லி, அன்னம், முருகர் மயில் , சண்டிகேஸ்வரர்-ரிஷப வாகன சேவை. இரண்டாம் நாள் இரவு சோமாஸ்கந்தர் வெள்ளி சந்திரப் பிறை சேவை.

இந்த புண்ணிய ஆனித்திருமஞ்சன நாட்களில், இனி வரும் பதிவுகளில் பஞ்ச சபைகளின் தரிசனம் பெறுவோம்.

7 comments:

ஜீவா (Jeeva Venkataraman) said...

//ஆடையிலே எனை மணந்த மணவாளா//
இதன் பொருளை சற்றே விளக்கவும், ஐயா.

Kailashi said...

வாருங்கள் ஜீவா ஐயா.

//ஆடையிலே எனை மணந்த மணவாளா
இதன் பொருளை சற்றே விளக்கவும்//

ஜீவாத்மா ஆன நமக்கும், பரமாத்வாவான எம்பெருமானுக்கும் ஒன்பது விதமான சம்பந்தம் உண்டு.

அவனை குழந்தையாக பாவித்து வாத்சல்யத்துடன் பாடியவ்ர்கள் பெரியாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர்.

அவனை நாயகனாக கொண்டு தன்னை நாயகியாகக் கொண்டு பாடினார் ஆண்டாள் நாச்சியார்.

ஆனால் அதிகமான அன்பர்கள் பாடியது இறைவனை நாயகனாகவும் தம்மை நாயகியாகவும் பாவித்தே.

தேவாரம் பாடிய திருஞான சம்பந்தர், அப்பர் இவ்வாறு பல பாசுரங்களில் தம்மை நாயகியாக பாவித்தும், இறைவனை நாய்கனாக பாவித்தும் பதிகம் பாடியுள்ளனர் ( இதை ஆங்கிலத்தில் Bridal mysticism) என்று கூறுவார்கள்.

ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் தம்மை பரகாலநாயகியாகவும், வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபர் தம்மை பராங்குச நாயகியாகவும் பாவித்து பாசுரங்கள் பாடியுள்ளனர்.

அதைப் போலவே வள்ளலார் சுவாமிகளும் அம்பத்தில் கூத்தாடும் நடராஜப் பெருமானை தனது நாயகனாக பாவித்து பாடிய திருஅருட்பா இது.

எல்லோரும் அறிய என்னை மணந்து கொண்ட பெருமானே ( மணவாளா)என் கணவனே என்று பொது நடத்தரசை போற்றுகின்றார் வள்ளலார் சுவாமிகள்.

இந்த உலகில் பரமாதமா ஆன இறைவன் ஒருவனே ஆண் ( நாயகன்) மற்ற ஜீவாத்மாக்கள் அனைத்தும் பெண்களே.

Muruganarul said...

எல்லோரையும் சொன்னீர்கள் மாணிக்க வாசகரை மறந்து விட்டீர்களா?

Kailashi said...

பின்னூட்டம் என்பதால் அனைவரையும் எழுதுவது என்பது இயலாத காரியம் அல்லவா?

ஆயினும் தாங்கள் கேட்டதால் கூறுகின்றேன்.

பாவை பாடிய வாயால் கோவை பாடு என்று எம்பெருமானே கேட்டு திருக்கோவையார் பாடியவர் மாணிக்கவாசகர்.

திருவாசகத்தில் அவர் ஒரு பெண் சிறு பிள்ளையாயிருந்து மணம் ஆகும் வரையிலான அனைத்து நிலைகளிலும் உள்ள பெண்ணாக தன்னை பாவித்து பாவை விளையாடல்களாக
திருவெம்பாவை, திருஅம்மானை, திருபொற்சுண்ணம், திருக்கோத்தும்பி, திருத்தெள்ளேணம், திருச்சாழல், திருப்பூவல்லி, திருவுந்தியார், திருத்தோள்நோக்கம், திருபொன்னூஞ்சல், அன்னை பத்து, குயில் பத்து என்று பல்வேறு பதிகங்களை நாயகன் நாயகி பாவத்தில் பாடியுள்ளார்.

ஜீவா (Jeeva Venkataraman) said...

அதாவது, ஆடையை இந்தப் பிறவிக்கும், மணவாளனாக இறையையும் உருவகப் படுத்துகின்றன,
அல்லவா!, நன்றி.

Kailashi said...

ஆடை என்பதற்கு இப்பிறவி என்பது பொருத்தமாகத்தான் படுகிறது.

ஆயினும் இறைவனுடன் நமது சம்பந்தம் ஏழேழு பிறவிக்கும் நிலைத்திருப்பது.

எதற்கும் மற்ற அன்பர்களுடன் விசாரித்து அதன் தத்துவார்த்தத்தை உங்களுக்கு எழுதுகின்றேன்.

Kailashi said...

ஜீவா ஐயா, சிறிது கால தாமதம் ஆகிவிட்டது அதற்காக மன்னிக்கவும்.

ஆடையிலே எனை மணந்த மணவாளா என்பதற்கான விளக்கம் - சிறு பருவத்திலேயே என்னை ஆட்கொண்ட நாயக்னே என்பதாகும். ஆடுகையில் என்பது ஆடையில் என்று நின்றது. இது கவிஞர் பத்மதேவன் எழுதிய தினமும் ஒரு திருவருட்பா என்ற நூலில் கொடுத்துள்ள விளக்கம்.

சிறு பிள்ளையாக இருந்த போதே வள்ளலார் சுவாமிகளை சிதம்பரம் கொண்டு சென்ற போது அவ்ரைப் பார்த்து சுவாமிகள் சிரித்த வரலாறு இங்கு நினைவு கூறத்தக்கது.