Friday, April 11, 2008

சித்திரைத் திருவிழா காரணீஸ்வரம் ( கொடியேற்றம்)

முதல் நாள் காலை உற்சவம்
கொடியேற்றம்


ஐந்து நாட்களுக்கு மேற்பட்ட உற்சவங்கள் கொடியேற்றத்துடன் நடத்தப்படவேண்டுமென்பது ஆகம விதி. எனவே பெருவிழாவின் முதல் நாள் சுப் முகூர்த்த வேளையில் கொடி மரத்திற்க்கருகில் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளுகின்றனர்.



முதலில் கொடி மரத்திற்கும் பலி பீடத்திற்கும் அபிஷேகம் நடைபெறுகின்றது.அஷ்ட திக் பாலகர்கள், சப்த ரிஷிகள், புண்ணிய நதிகள் மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் பூஜை நடைபெறுகின்றது. பின்னர் கொடி மரம் மலர் மாலைளால் அலங்காரம் செய்யப்படுகின்றது.




சிவபெருமானது வாகனமும் கொடியும் ஆனது ரிஷபம். நந்தி, ஏறு, இடபம், காளை, பசு, இடை, மாடு என்றெல்லாம் அழைக்கப்படும் ஐயனின் பூத கணங்களின் முதல் தொண்டர் நந்தியென்பெருமானே ஐயனின் கொடியில் விளங்குகின்றார்.




தர்ம தேவதையே தூய வெள்ளை ரிஷபமாக ஐயனை தாங்குகின்றார் என்பது ஒரு ஐதீகம். தட மதில்கள் தனையெரித்த அந்நாளில் இடபமதாய் திருமால் ஐயனை தாங்கினார் என்பது இன்னொரு ஐதீகம்.






ஆகவே மங்கள மஞ்சள் துணியில், இடபம், சூரிய சந்திரர்கள், மணி, விளக்கு ஆகியவை வரையப்பட்ட கொடிக்கு பூஜை நடைபெற்று கோவிலை சுற்றி எடுத்து வரப்பட்டு மங்கள் நேரத்தில் ஏற்றப்படுகின்றது. கொடி மரத்தின் அடிப்பாகம் தர்ப்பையால் அலங்கரிக்கப்படுகின்றது. பின் சகல தேவர்களையும் மந்திரப்பூர்வமாக அழைத்து கொடி மரத்தில் யதாஸ்தானம் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றது. பெருவிழா முடியும் வரை அவர்கள் கொடி மரத்தில் தங்கியிருந்து பெருவிழாவை பார்த்து மகிழ்வதாக ஐதீகம்.




தில்லையில் நடன சபாபதியின் அருளினால் உயராத கொடி உயர உமாபதி சிவாச்சாரியாரால் பாடப்பட்ட கொடிக் கவியும் பாராயணம் செய்யப்படுகின்றது. பின்னர் பஞ்ச மூர்த்திகளுக்கும் கொடி மரத்திற்க்கும் தீபாரதனை நடைபெறுகின்றது. பின் பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா வந்து அலங்கார மண்டபம் திரும்புகின்றனர்.


இன்று காரணீஸ்வரத்தில் காலை 6 - 7:30 மணிக்குள் கொடியேற்றம் பின்பு அஸ்தமான கிரி சேவை.



உலாவுக்கு முன்னர் அஸ்திர தேவர் திருவீதி உலா வந்து பாதையை சுத்தம் செய்கின்றார். முதல் நாள் அஷ்டதிக் பாலகர்களும் அழைக்கப்பெற்று உலா வரும் பாதையில் யாதாஸ்தானம் கொள்ள வேண்டப்படுகின்றனர். தினமும் காலையும் மாலையும் அவர்களுக்கு பலி (உணவு) படைக்கப்படுகின்றது.

முதல் நாள் காலை கொடியேற்றத்திற்காக எழுந்தருளி அருள் பாலிக்கும் பஞ்ச மூர்த்திகள் அஸ்தமான கிரி விமானத்தில்
ஸ்ரீ விநாயகர்




இந்திரன் வழிபட்ட காரணீஸ்வரப் பெருமான்



சிவ சொர்ணாம்பிகை






வள்ளி தேவசேனா சமேத முருகர்






சண்டிகேஸ்வரர்

பெருவிழா அருட்காட்சிகள் தொடரும், வரும் நாட்களிலும் வந்து தர்சித்து விட்டு செல்லவும்

2 comments:

குமரன் (Kumaran) said...

பஞ்ச மூர்த்திகள் தரிசனம் கண்டேன். மிக்க நன்றிகள்.

S.Muruganandam said...

அன்பே சிவம். வாழ்த்துக்கள்