Sunday, April 27, 2008

சித்திரை சதய அபூர்வ நிர்மால்ய தரிசனம் - 2

உன் வாளால் வெட்டுப்பட்டாலும் நான் மாசிலாமணியே

திருமுல்லைவாயில்

தொண்டை மண்டலத்தின் மஹா சக்தி தலங்கள் மூன்றனுள் ஒன்று இத்தலம். இத்தலத்திலே எம் அம்மை கொடியுடை நாயகி, கிரியா சக்தியாக எழுந்தருளி அருள் பாலிக்கின்றாள். மற்ற சக்தி தலங்கள் திரு வொற்றியூரின் வடிவுடை நாயகி ஞான சக்தி, மேலு‘ரின் திருவுடை நாயகி இச்சா சக்தி. " எவரொருவர் பௌர்ணமி அன்று இந்த மூன்று அம்மன்களையும் தரிசிக்கின்றார்களோ அவர்களுக்கு எம் அம்மையின் பூரண கடாட்சம் கிட்டும்" என்பது ஐதீகம். இத்தலத்தின் ஒரு சிறப்பு அம்மையின் சன்னதியும் ஐயன் சன்னதியின் வலப்புறம் கிழக்கு நோக்கியே அமைந்திருப்பது.


இரட்டைப் புலவர்கள் இத்தலத்து நாயகியான கொடியிடையம்மனைக் குறித்து மன்றாடியார் எங்கள் மாசிலாமணியார்


நன்றான முல்லைக்கு நாயகர் காண் அம்மானை

நன்றான் முல்லைக்கு நாயகரே யாமாகில்

பெண் எங்கே கொண்டனர் காண் அம்மானை?

கொண்ட பெண்ணு நல்ல கொடியிடைச்சி

என்று பாடுகின்றனர்.


மாசிலாமணீஸ்வரர் கஜ பிருஷ்ட விமானம்


அம்மையின் திவ்ய சொரூபத்தை தில்லை விடங்கன் மாரிமுத்துப் பிள்ளை இயற்றிய பஞ்சரத்தினத்தில்

பொட்டிட்ட நெற்றியும் கொப்பிட்ட செவியும்

பொருப்பை ஒப்பிட்ட தனமும்

புயலிட்ட அளகமும் கயலிட்ட கண்கடை

பொழிந்திட்ட கருணை அமுதும்

நெட்டிட்ட பைங்கழையை நிகரிட்ட தோளும்

இளநிலவிட்ட புன்முறுவலும்

நீரிட்ட சடையாளர் மணமிட்ட நாளில் அவர்

நெஞ்சு இட்டமொடு கரத்தால்

தொட்டிட்டு எடுத்து அம்மி மீதிட்ட பாதமும்

கலங்கிடக் கண்டிட்டு அடியான்

துதியிட்டு உன்னைத் தெண்டலிட்டு

இறைஞ்சிட அருள் சொரிந்திட்டு உகந்து ஆள்வையோ

மட்டிட்ட சோலை வளர் முல்லை நகர்

மாசிலாமணியிடத்து உறை கரும்பே! வாழ்த்தும்

அடியவர் தம்மை ஆழ்த்து பிறவியின் வெம்மை

மாற்று கொடியிடை அம்மையே!

பசும் சோலைகள் சூழப்பெற்ற திருமுல்லை வாயில் மாநகரில் மாசிலாம­­ணிஸ்வரருடன் உறையும் கரும்பினும் இனிய என் தாயே! கொடியிடை அம்மையே! விரிசடை அண்ணல் தம்மை மணம் புரிந்த நாளில் ஆர்வத்தோடு உம் பாதத்தை இறைவன் தன் திருக்கரங்களினால் தொட்டு எடுத்து அம்மி மீது வைத்த கண்கொள்ளா காட்சியை மனக்கண்ணால் கண்டு பணிந்து உன்னை பணிகின்றேன். தாயே, அடியவர்களின் மனதினை ஆழ்த்துகின்ற பிறவியான வெம்மையை அகற்றி அருள் செய்திடு என்று வேண்டுகின்றார். இதனால் நாம் அறிவது என்னவென்றால் அம்மை தன்னை வழிபட்டவர்களுக்கு இம்மை செல்வத்தை அருளுவதோடு பிறவி துன்பத்தையும் அழித்து பேரின்ப வாழ்வை அருள்வாள் என்பதே.

மனத்தில் அறியாமை என்னும் இருளை அகற்றி ஞானம் என்ற ஒளியினை ஏற்றி இப்பிறவியாம் வாழ்வில் மருளச்செய்திடும் பாசக்கடலினையும் கடக்க செய்திடுவாள் அம்மை.


திருமுல்லைவாயில் ஐதீகம்


இத்திருக்கோவிலில் 23 கல்வெட்டுக்கள் உள்ளன. இவ்வூரை வடதிருமுல்லைவாயில் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்துப் புழற்கோட்டத்துக் கானப்பேர் நாட்டுக்குட்பட்டிருந்தது என்பதை ஜடாவமன் சுந்தர பாண்டிய மன்னனின் கல்வெட்டு தெரிவிக்கின்றது. இனி இத்திருக்கோவிலின் அமைப்பைக் காணலாம். 1-12 ஏக்கர் பரப்பளவில் தெற்கு நோக்கிய 7 நிலை இராஜ கோபுரத்துடனும், மூன்று பிரகாரங்களுடனும், நடராஜர், சோழபுரீசர், குசலபூரீசர், அம்மை கொடியுடை நாயகி ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன.ஆடல் வல்லான் சன்னதிக்கு முன் அழகிய இரச லிங்கத்திருமேனி பிரதிஷ்டை செய்யபட்டுள்ளது.

விமானம் கஜபிருஷ்ட விமானம். பிக்ஷ‘டணர், நர்த்தன கணபதி, தக்ஷ’ணாமூர்த்தி, விஷ்ணு, பிரம்மா, துர்க்கை ஆகியோர் கோஷ்டத்தில் எழுந்தருளி அருள் பாலிக்கின்றனர். தெற்கு இராஜ கோபுரத்திற்கு முன் அழகிய சிற்பங்கள் நிறைந்த 16 கால் மண்டபம் உள்ளது. தல விருட்சம் - முல்லை. தீர்த்தம் - பாலாறு , சுப்பிரமணிய தீர்த்தம் . தொண்டை மண்டலத்தின் பாடல் பெற்ற தலங்களுள் 22வது தலம் இத்தலம். சுந்தரர் தேவாரம் பெற்றது. சுந்தரர் திருவொற்றியூரிலே சங்கலியாரை மணந்த பின்பு சத்தியத்தை மீறியதால் கண்ணொளி இழந்து திருவாரூர் இறைவனை தரிசிக்க புறப்பட்டு வரும் போது இத்தலத்தையடைந்து தமது துயரத்தை போக்கியருளுமாறு திருப்பதிகம் பாடி வழிபட்ட சிறப்புடைய தலம்.

பாலாற்றின் கிளைநதியொன்று பழைய காலத்தில் இவ்வழியாக சென்றதை மேலே உள்ள பதிகப் பாடலின் மூலம் அறியலாம். இத்தலத்து முருகன் மீது அருணகிரியார் திருப்புகழ் பாடியுள்ளார். இராமலிங்க அடிகள் வழிபட்ட தலம். தினமும் காலை சந்தி, உச்சிக்காலம், மாலை ஆகிய மூன்று கால பூஜை நடைபெறுகின்றது. பிரம்மோற்சவம் வைகாசி மாதம் கடக இராசி விசாக நன்னாளில் முடியும் படி ஆண்டுப் பெருவிழா நடைபெறுகின்றது.
மாசிக் கிருத்திகையன்று தெப்போற்சவம் நடைபெறுகின்றது.
வானோர் சேர் செந்நெல் கழனி சூழ் திணி பொழில் சூழ்
செம்பொன் மாளிகை சூழ்
முருகர் சோலை சூழ் திரு முல்லை வாயிலாய்
வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன்
படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே!
என்று சுந்தரர் பாடிய, தேவர்களும், முனிவர்களும் வழிபட்டு அருள் பெற்ற கொடியுடை நாயகி உடனமர் மாசிலாமணீஸ்வரரின் நிர்மால்ய தரிசனம் ( நிஜ ஸ்வரூபம் காண) பெற கிளம்பி விட்டீர்களா?

நேற்று காலை தொடங்கி நிர்மால்ய தரிசனம். 30-05-08 அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு சென்று தரிசனம் பெறுங்கள்.
* * * *

No comments: