Tuesday, March 4, 2008

மஹா சிவராத்திரி 2 - மூங்கிலணை காமாக்ஷியம்மன்

மூங்கிலனை காமாக்ஷியம்மன் :

தற்போது தேவதானப்பட்டி என்று வழங்கப்படும் தலம் முற்காலத்தில் வங்கிசபுரியாக திகழ்ந்தது. அதை சூலபாணி என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சிவனருளால் வச்சிர தந்தன் என்ற மகன் பிறந்தான். அவன் அரசனாக முடி சூட்டிக் கொண்டபின் மாங்குசானன் என்பவனை மந்திரியாகவும், துட்டபுத்தி என்பவனை தளபதியாகவும் கொண்டு, அவர்களின் துர்போதனையாலும் அரிய தவம் செய்து தான் பெற்ற வலிமையினாலும் தன் குடிகளை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கினான். அவனது கொடுமை தாங்காமல் மக்கள் அனைவரும் பிரம்ம தேவனிடம் சென்று முறையிட அவரும் தேவேந்திரனை அனுப்பினார். தேவேந்திரனாலும் அசுரனை வெல்ல முடியவில்லை. எனவே மக்கள் எல்லாரும் காஞ்சி சென்று அம்மையிடம் முறையிட்டார்கள். துஷ்டர்களை அழித்து தன் பக்தர்களைக் காப்பாற்ற அந்த காஞ்சி காமாட்சியானவள் அந்த கொடுங்கோலனை அழிக்க துர்க்கையை அனுப்பினாள். அசுரனின் தலை கீழே விழுந்தவுடன் அதை காலால் மிதித்து அழிக்காவிட்டால் அவன் அழிய மாட்டான் என்ற வரம் பெற்றிருந்தான் வச்சிரதந்தன். துர்க்கையானவள் அவன் தலை போரில் -வட்டுப்பட்டு விழுந்தவுடன் தன் காலால் அதை மிதித்து அழிக்க அந்தத் தலையும் சுக்கு நு‘றாக வெடித்துச் சிதற அசுரனும் அழிந்தான்.அசுரனை வதம் செய்த பாவம் தீரவும், தனது ரௌத்ரம் தணியவும் எம் அம்மை இளம் பெண் வடி வெடுத்து தலையாற்றங்கரையில் மூங்கிற் புதரில் மோன தவமியற்றனாள். தவமிருந்த அன்னைக்கு தேவதானப்பட்டி ஜமீந்தாரின் பட்டியைச் சார்ந்த ஈனாத காராம் பசு ஒன்று தினமும் சென்று பால் வழங்கிக் கொண்டிருந்தது. ஒரு நாள் அந்த பசு மட்டும் தனியே செல்வதை கவனித்த ஒரு இடையன் அதன் பின்னே சென்ற போது மூங்கிற் புதரொன்றில் அழகே உருவான ஒரு இளம் மங்கை அப்பசுவினிடம் பால் அருந்துவதைக் கண்டாண். மணியே, மணியின் ஒளியே, ஓளிரும் மணி புணைந்த அணியே, அணியும் அணிக்கு அழகான அம்மையின் கோடி சூரிய பிரகாசத்தைப் பார்த்தவுடன் அந்த இடையனின் கண்கள் குருடாகி விட்டன.அன்றிரவு ஜமீந்தாரின் கனவில் தோன்றிய திரிபுர சுந்தரியாகிய எம் அம்மை இடையனின் செயலால் தனது தவம் கலைந்து விட்டது அவனும் தனது கண்களை இழந்தான். கவலைப்படவேண்டாம், அடுத்து வரும் பெரு வெள்ளத்தில் நானே ஒரு மூங்கில் பெட்டியில் வருவேன் என்னை எடுத்து இடையன் வணங்கினால் அவனுக்கு கண் பார்வை கிடைத்து விடும். என் மோன தவம் கலையாமல் எனக்கு கோவில் எழுப்பி வணங்கி வாருங்கள் உங்களுக்கு எல்லாவித நன்மைகளையும் நான் அருளுவேன் என்று கூறி மறைந்தாள் அன்னை. அடுத்து பெய்த பெருமழையில் மஞ்சளாற்றில் எம் அன்னையின் கருணையைப் போல வெள்ளம் பெருகி ஓடி வர, அம்மை ஒரு குழந்தை வடிவில் ஒரு மூங்கிற்ப் பெட்டியில் மிதந்து வந்தாள், ஒரு மூங்கிற் புதர் அணையிட்டு நிறுத்தியதால் அன்னை மூங்கிலணை காமாக்ஷ’யம்மன் என்ற திரு நாமம் பெற்றாள்.அம்மையை கண்டவுடன் கரையில் கூடியிருந்த ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் அன்பின் மிகுதியால் தங்களை எல்லாம் வாழ்விக்க தானே வந்த அம்மைக்கு அவசரத்தில் தேங்காயை உடைக்காமலும், வாழைப் பழத்தை உரிக்காமலும் அப்படியே பூஜை செய்தனர். அம்மை தம் பகதர்களிடம் வேண்டுவது வெறும் து‘ய பக்தியைத்தானே? அந்த லோக மாதா அவர்களின் பூஜையை எற்று இடையனின் கண் பார்வையை தந்தருளினாள். அன்னையின் ஆனைப்படி யாரும் தொந்தரவு தரா வண்ணம் ஒரு கோவில் எழுப்பி அதில் மூங்கில் கூடையுடன் அம்மையை உள்ளே வைத்து கதவை சாத்தி விட்டனர். இப்போதும் கருவறையில் உள்ள அம்மையை யாரும் பார்க்க முடியாது. சந்தனத்தாலும் ஐம் பொன்னாலும் ஆன கதவிற்கே (தேங்காய்கள் உடைக்காமலும் பழங்கள் உரிக்காமலும்) பூஜைகள் நடை பெறுகின்றது. கருவறையினுள் அம்மை இன்னும் தன் தவத்தை, யாருடைய இடையூறும் இல்லாமல் இன்றும் தொடர்வதாக ஐதீகம். ஆகவே கோவிலின் அருகிலே யாரும் குடியிருப்பதும் இல்லை. பத்து நாள் திருவிழாவான மஹா சிவராத்திரி உற்சவத்தின் போது கூரை வேய்பவர்கள் தங்கள் கண்ணையும் வாயையும் கட்டிக் கொண்டு ஒரு வேள்வியைப் போலவே இதை செய்து முடிக்கிறார்கள்.அன்னையின் சன்னதியில் மூன்று பிரம்மாண்டமான நெய் விளக்குகள் சுடர் விட்டு பிரகாசித்துக் கொண்டிருக்கின்றன. . நாள் தோறும் சுமார் 20 லிட்டர் நெய் அதற்கு தேவைப்படுகின்றது. எனவே இங்கு வரும் பக்தர்கள் நெய்யைத்தான் காணிக்கையாகக்கொண்டு வருகின்றனர். இவ்வாறு காணிக்கையாக வந்த நெய் மிகப் பெரிய குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. பல வருடங்கள் ஆகியும் அந்த — நய் அப்படியே சிறிதும் குணம் குன்றாமால் மணம் கெடாமல் இருக்கின்றது. இந்த நெய்யை ஈ எறும்பு நெருங்குவதில்லை இதுவே அம்மனின் மகிமைக்கு சான்று. இந்த மஹா சிவராத்திரி நன்னாளில் நாமும் ஓளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளான அந்த ஸ்ரீ சக்ர ரூபிணியான மூங்கிலணை காமாக்ஷி அம்மனை சிவராத்திரி நன்னாளில் வழிபட்டு நன்மையடைவோமாக.* * * * * * *

No comments: