Sunday, December 23, 2007

ஆனந்த ஆருத்ரா தரிசனம் ( திருவாதிரை நாள்)

திருசிற்றம்பலம்
அம்பலவாணரின் ஆதிரை நாள்

இனியன தனியருந்தேல் என்பது பெரியோர் வாக்கு. ஆகவே பாலும் தேனும் கன்னலும் அமுதும் ஒத்த அம்பலவாணரின் அடி பணிந்து அவர் சென்ற ஆருத்ரா தரிசனத்தின் போது தந்தருளிய அருட்காட்சியை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சியே இந்த பதிவு.

ஐந்து திருக்கோவில்களின் அற்புத காட்சிகள் இப்பதிவில் உள்ளன் நடு நடுவே சிறிய விளக்கங்கள் உள்ளன. விரிவான விளக்கங்களை வரும் பதிவுகளில் தர ஐயன் உத்தரவு.

"திருவாதிரைக் களி திருடியாதவது சாப்பிட வேண்டும்" என்ற சிறப்புக் கொண்ட களியை முதலில் எம்பெருமானுக்கு படைத்த ஆனந்த சேந்தனின் திருப்பல்லாண்டு பதிவின் நிறைவாக அளித்துள்ளேன் அதைப் பாராயணம் செய்து ஆனந்த தாண்டவ நடராஜப் பெருமானையும் அம்மை சிவகாம வல்லியையும் வணங்கி அருள்பெறுமாறு கை கூப்பி அழைக்கின்றேன்.


சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் ஆலய ஆருத்ரா தரிசன காட்சிகள்

ஆனந்த நடராஜர்

அம்மை சிவகாம சுந்தரி

அம்மையும் ஐயனும் சேர்த்தி (ஊடல் உற்சவம்)
மாணிக்க வாசகர்ஐயன் வெள்ளை சார்த்தி புறப்பாடுஅம்மை வெள்ளை சார்த்தி புறப்பாடு


பஞ்ச கிருத்திய நடனம்
தில்லையில் முதல் நாளே தேரோட்டத்தைக் காண வந்த பகதர்கள் இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் வந்து குழும ஆரம்பித்து விடுகின்றனர். மார்கழிப் பனியில் இரவு முழுவதும் அமர்ந்திருக்கும் அந்த பக்தியை எப்படி என்று விவரிப்பது புரியவில்லை. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான். பிரம்ம முகூர்த்தத்தில்அருணோதய காலத்தில் (அதி காலை சுமார் மூன்று மணி அளவில்) நடராஜப் பெருமானுக்கும் சிவகாம சுந்தரிக்கும் தேவர்கள் நடத்தும் உஷத் கால பூஜையின் மஹா அபிஷேகம் துவங்குகின்றது.
ஆருத்ரா தரிசனம் தேவர்கள் பூஜை என்பதால் அதை நடத்தும் தீட்திசர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார், திருவிழாவின் பத்து நாட்களும் அவர் மிகுந்த நியம நிஷ்டையுடன் இருக்கிறார் என்றும் ஆருத்ரா தரிசன அபிஷேகம் செய்ய வாய்ப்புக் கிட்டியவர் மிகவும் பேறு பெற்றவர் என்பதும் கேட்ட செய்தி.


தேவர்கள் நடத்தும் அபிஷேகம் என்பதால் அதன் பிரம்மாண்டத்தை தாங்கள் உணரலாம், அண்டா அண்டாவாக அபிஷேகத் திரவியங்கள் ஐயனுக்கும் அம்மைக்கும், மஞ்சள்ப் பொடி, திருமஞ்சனப் பொடி, நதியாய்ப் பாயும் பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், பழச்சாறுகள்( அனைத்து பழங்களின் சாறு) தேன் பேரீச்சம் பழ மாலையுடன் என்று பல்வித அபிஷேகம். அபிஷேகத்தின் போது ஐயனின் நிஜ ரூபத்தை முழுமையாக தரிசிக்கும் பேறு கிட்டுகின்றது. சில்ப சாஸ்திரப் பிரகாரம் நடராஜ மூர்த்தங்கள் ஷ்ட்கோண சக்கர பிரகாரத்திலோ அல்லது அம்பாளின் ஸ்ரீசக்ர பிரகாரத்திலோ வடிக்கப் படுகின்றன. தில்லை நடராஜர் ஸ்ரீசக்ர வடிவில் அமைந்துள்ளார். அறியாமையாம் முயலகனையும், ஐயனின் பூத கணங்களையும் அபிஷேக காலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். அம்மைக்கு தோழியராக மஹா லக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் இருக்கும் கோலதையும் திரிபாங்கியாக ஒயிலாக சாய்ந்து அம்மை ஐயனை நோக்கிய வண்ணம் நிற்கும் திருக்கோலத்தையும் இன்று அருமையாக தரிசனம் செய்யலாம். அடுத்து திருநீறு அபிசேகம் மலை மலையாக அபிஷேகம் ஆகின்றது எம்பெருமான் தன் பவள மேனியில் பூசும் அந்த பால் வெண்ணீறு. திருநீறு அபிஷேகம் நடைபெறும் போது அந்த சுகந்த திருநீற்றின் மணம் அந்த கோவில் முழுவதும் பரவுகின்றது என்றால் எவ்வளவு திருநீறு ஐயனுக்கு அபிஷேகம் ஆகின்றது என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள்லாம். நிறைவாக சந்தனம் அபிஷேகம் செய்யப்படுகின்றது, தூய அரைத்த சந்தனம் அபிஷேகம் செய்யப்படுகின்றது ஐயனுக்கும் அம்மைக்கும், பின் சகஸ்ரதாராவினால் பன்னீர் அபிஷேகம். அபிஷேகத்திற்க்கு பின் பல் வேறு மலரஞ்சலி சாற்றப்படுகின்றது.

இச்செய்தி நேற்றைக்கு முந்திய நாள் தினகரன் நாளிதழ் ஆன்மிக சிறப்பிதழில் படித்தது. திரு சி.குப்புஸ்வாமி தீட்சிதர் அவர்கள் எழுதியது. இவ்வாண்டின் சிறப்பு நிகழ்வான நவரத்ன சுவர்ணாபிஷேகம் நடைபெறும்.


அது என்ன நவரத்ன சுவர்ணாபிஷேகம்? ஆலயங்களில் இறைவனை பிரதிஷ்டை செய்வதற்கு முன் நவரத்னங்கள்(மாணிக்கம், பவளம், வைரம், முத்து, மரகதம், புஷ்பராகம், நீலமாமணி, கோமேதகம், வைடூரியம்,)பீடத்தின் கீழ்ப் பரப்புதல் மரபு. நாள் தோறும் ஆறுகால பூஜையின் போது பகல் இரண்டாம் காலத்தில் பூஜை ஏற்கும் சிறிய நடராஜர், இரத்தின சபாபதி எனும் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலுக்கு ’ரத்னாகாரம்’ என்னும் சிறப்புப் பெயருமுண்டு. அதாவது ரத்னங்களின் பிறப்பிடம் கடல். முன்னொரு காலத்தில் கடலரசன், தான் இழந்த சுய உருவத்தைப் மீண்டும் பெற தம்மிடம் உள்ள ரதனங்களால் இறைவனை பூஜித்து நினைத்ததை அடைந்தான் எனப் புராணங்கள் பகரும். ஐயனுக்கும் அம்மைக்கும் நடைபெறும் நவரத்ன சுவர்ணாபிஷேகத்தை கண்ணுறுபவர்கள் நவகிரக தோஷம் நீங்கி இம்மை-மறுமை ஆகிய இருபிறவிகளில் செய்த பாவங்களும் ற்றப்பட்டு தூய்மைமிகு ஆன்மாக்களாகி பேரானந்தப் பெருவாழ்வு வாழ்வது திண்ணம்.


ஐயனுக்கும் அம்மைக்கும் இவ்வாறு நவரதன சுவர்ணாபிஷேகம் செய்வதால் அவர்கள் மனம் மகிழ்ந்து அதன் மூலம் உலகம் வளம் பெற்று திகழும், உலக ஒற்றுமை ஓங்கி ஒருமைப்பாடு ஒளிரும். பயங்கரவாதம், இயற்கைப் பேரழிவுகள் போன்ற தீமைகள் அகன்று அமைதி நிலவும். மேலும், நம் தாய்த் திரு நாடாம் இந்தியாவின் பெருமை மற்றும் மதிப்பு உலக அரங்கில் மிளிரவும் ஆடலரசன் அருள் மழை பொழிவார் என்பது திண்ணம்.
இவ்வாறு அம்பல வாணருக்கும் அன்னைக்கும் மஹா அபிஷேகம் முடியும் போது சூரியன் தன் கிரணங்களைக் கொண்டு அம்மையப்பரின் அடி வருட வருவான், ஆம் காலைப் பொழுது ஆகிவிட்டிருக்கும். பின் ஆருத்ரா தரிசனத்திற்காக திரைப் போடப்படுகின்றது. நாம் திரை விலகுவதற்கு முன் வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயத்தில் எவ்வாறு ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகின்றது என்று பார்ப்போம்.
வடபழனியில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் ஆரம்பம். சுமார் மூன்று மணி நேரம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. பின் சிறப்பு அலங்காரம், அலங்காரம் முடிந்த பின் புறப்பாடு ஓதுவார் மூர்த்திகளூக்கு பரிவட்டம் கட்டப்படுகின்றது திருப்பள்ளியெழுச்சி பாடுகின்றார். பின் முதலில் வெள்ளை சார்த்தி புறப்பாடு அம்மையும் ஐயனும் முக தரிசனம் மட்டும் தந்து கோவிலை வலம் வருகின்றர், வலம் முடிந்த பின் வெள்ளை என்பது நமது ஆணவ மலம் அதை விடுத்து ஆண்தவனிடம் சரணடைந்தால் கிடைக்கும் தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்பது இந்த வெள்ளை சார்த்தி புறப்படுதலின் தாத்பரியம். பின் பஞ்ச கிருத்த நடனம் ஐந்து சுற்றுகள் வலம் வருகின்றனர் ஐயனும் அம்மையும் தாம் செய்யும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஐந்தொழில்களைக் குறிக்க. பின் ஊடல் உற்சவம், அம்மை கோபித்துக் கொண்டு கோவில் கதவை சாத்திக் கொள்ள ஐயன் அன்னையை மாணிக்க வாசகர் சமாதானம் செய்து பின் இருவரும் சேர்ந்து ஒன்றாக மண்டபத்தில் ஆருத்ரா தரிசனம் தருகின்றனர். பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் அம்மையும் ஐயனும் ஊர்வலம் வருகின்றனர். தாங்கள் மேலே பார்த்த படங்கள் இந்த உற்சவங்களின் படங்கள் தான்.

மாம்பலம் லிங்கதுர்க்கையம்மன் ஆலயம்


நடராஜர்

சிவகாமி
அடுத்த கோவிலுக்கு செல்லும் முன்... இதோ இராஜ சபைக்குள் பக்தர்கள் செல்ல தொடங்கிவிட்டனரே! முதலில் தில்லையில் ஆருத்ரா தரிசனம் கண்டு விடுவோம். லட்சார்ச்சணையும், மஹா அபிஷேகமும் முன் மண்டபத்தில் கண்டருளிய பெருமான் இப்போது மண்டபத்தின் உள்ளே எழுந்தருளி உலகுக்கே இராஜாவாக அலங்காரம் செய்து கொண்டிருக்கும் போது பஞ்ச மூர்த்திகள் நகர் வலம் வந்து தீர்த்தவாரி காண்கின்றனர். கோவில் முழுவதும் மக்கள் கூட்டம் கூடிக் கொண்டே செல்கின்றது எங்கும் சிவ சிவ என்னும் நாமம் ஒலிக்கின்றது. வெளியே இருப்பவர்கள் உள்ளே வர முடியாமல் தவித்துக் கொண்டு நிற்கின்றனர். சித் சபையில் இரகசிய பூஜையும் நடைபெறுகின்றது.


சுமார் பன்னிரண்டு மணி அளவில் எல்லாரும் காத்துக் கொண்டிருந்த தருணம் வருகின்றது ஆயிரங்கால் மண்டபத்தில் அது வரை அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும் ஆனந்தத்தினால் கண்ணீர் மல்க எழ்ந்து கை கூப்பி நிற்கின்றனர். சர்வ ஸ்வர்ண அலங்காரத்தில் நடன ராஜாவாக ஐயனும் அம்மையும் அருட்காட்சி தருகின்றனர். அவர்களின் தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் எத்தனை வித தோத்திரங்கள் உண்டோ அத்தனையும் கூறி வணங்குகின்றனர். மேளம், நாதஸ்வரம், பேரிகைகள், பிரம்ம தாளம், முழங்க அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயாக்ருக்கு சிறப்பு பூஜைகள். சோடஷ உபசாரங்கள் நடைபெறுகின்றது. என்ன பேறு பேற்றோமோ? எத்தனை கோடி யுக தவமோ மாலும், பிரம்மனும், இந்திரனும், சூரியனும், அக்னியும் மற்றும் அனைத்து தேவர்களும் வந்து வழிபடும் தங்கள் தரிசனம் கிடைத்தது என்று உருகுகின்றனர் அன்பர்கள்.


ஐயன் ஆருத்ரா தரிசனம் தர ஆயிரங்கால் மண்டபத்தை விட்டு கிளம்புகின்றார் ஆனந்த தாண்டவத்துடன். மிக அருகாமையில் இருந்து தரிசனம் செய்யலாம் ஐயனை. உடல் முழுவதும் தங்க கவசம் முகம் தவிர்த்து முழுவது நவரத்தினங்களால் ஆன நகைகள் அந்த குஞ்சித பாதத்தில் கொச்லுசு, சிலம்பு மாலை என்று சர்வாபரண பூஷித்ராக ஐயனும் அம்மையும் பகதர்களின் கூட்டத்தற்கிடையே ஊர்ந்து நகர்கின்றர். எங்கும் ஓம் நமசிவாய முழ்க்கம். எள் போட்டால் எள் கீழே விழ இடம் இல்லை அவரது தரிசனம் காண வந்த அனைவருக்கும், அன்று பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ர பாதருக்கும் தந்த ஆருத்ரா தரிசன காட்சி கொடுத்துக் கொண்டே ஆனந்த தாண்டவத்தில் கோயிலை சுற்றி வலம் வந்து கிழக்கு வாசல் வழியாக உட்பிரகாரத்தில் உள்ளே வருகின்றார் எம்பருமான். ஆருத்ரா தரிசன ஆனந்த தாண்டவம் தந்தருளி சித் சபா பிரவேசம் செய்கின்றார், நாம் எல்லோரும் உய்ய தானே வெளி வந்து எளி வந்த கருணையால் அருட்காட்சி தந்த எம்பெருமான். இன்றும் ஐயனது ஜடாமுடியை தரிசனம் செய்ய முடியும். பக்தர்கள் அனைவரும் மன நிறைவுடன் எடுத்த இந்த ஜன்மம் சாபல்யமடைந்து விட்டது என்று களியுடன்( திருவாதிரைக் களி , ஆனந்தம்) தங்கள் இல்லம் திரும்புகின்றனர். மறு படியும் அடுத்த வருடமும் தங்கள் தரிசனம் காணும் வாய்ப்பைத் தர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.


சென்னை கோடம்பாக்கம் இரயிலடி சௌந்தர விநாயக்ர் ஆலயம்


பஞ்ச மூர்த்திகள் பவனி


தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர்

பத்மஜோதி கலியுகக் கண்ணாடி என்று அழைக்கப்படும்ககன கந்தர்வ கனக விமானத்தில் ஆனந்த நடராஜர்


ககன கந்தர்வ விமானத்தின் பின்னழகு

வலது பக்க சூரிய இறக்கை

இடது பக்க சந்திர இறக்கை

மானச கந்தர்வ மாணிக்க விமானத்தில் சிவானந்த வல்லி


பின்னழகு

தங்க மயில் வாகனத்தில் முருகர்

தங்க இடப வாகனத்தில் சண்டிகேஸ்வ்ரர்

திருவாதிரை உற்சவத்தைப்பற்றி கூறும் போது சென்னை கோடம்பாக்கம் இரயிலடி, அருள்மிகு சவுந்தர வினாயகர் திருக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன கழ்ச்சியை கூறாமல் இருக்க முடியாது. பஞ்ச மூர்த்திகளும் பவனி வரும் அழகை காண்பவர்கள் அது போன்று எங்கும் கண்டதில்லை என்று ஆச்சிரியப்படும் அளவில் அருமையான பொன் முலாம் விமானத்தில் வலம் வருகின்றனர். காணக்கண் கோடி வேண்டும் என்பார்களே அது போல ஒவ்வொரு வருடமும் தவறாது சென்று தரிசிக்க அழைக்கும் அற்புத தரிசனம் அது. இத்திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் இவ்வாறு நடைபெறுகின்றது. இரவு 7 மணி அளவில் மஹாபிஷேகம். இரவு 10:30 மணி அளவில் வெள்ளை சார்த்தி புறப்பாடு. ஆருத்ரா தரிசனத்தன்று அருணோதய காலத்தில் சிவகாம சுந்தரி உடன் ஸ்ரீ நடராஜ பெருமான் திருக்கல்யாண வைபவம். காலை ஆறு மணிக்கு கோபுர வாசலில் ஆருத்ரா தரிசனம். காலை 9 மணிக்கு பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி விமானத்தில் நடராஜரும், மானச கந்தர்வ மாணிக்க விமானத்தில் அம்மனும் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. பகல் 1மணிக்கு திருஊடல் உற்சவம் என வெகு சிறப்பாக சகல உற்சவங்களுடன் வெகு சிறப்பாக நடைபெருகின்றது. சிதம்பரம் போல் பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது இத்திருக்கோவிலின் சிறப்பு.

சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் திருக்கோவில்

வினாயகர்


நடராஜப் பெருமான் ஆருத்ரா தரிசனம்


திருமயிலை கபாலீச்சுரம் ஆருத்ரா தரிசனம்

ஆனந்த தாண்டவ நடராஜர்ஐயனின் பின்னழகு

அம்மை சிவகாம சுந்தரி

ஆனந்த சேந்தன் அருளிய திருப்பல்லாண்டு


மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே. (1)
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்துவம்மின்
கொண்டுங் கொடுத்துங் குடிகுடி ஈசற்காட்செய்மின் குழாம் புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டுன் இன்றுமென் றுமுள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. (2)
நிட்டையி லாவுடல் நீத்தென் ஆண்ட நிகரிலா வண்ணங்களும்
சிட்டன்சிவனடி யாரைச்žராட்டு திறங்களுமே சிந்தித்து
அட்ட மூர்த்திகென் அக நெக ஊரும் அமிர்தினுக் ஆலனிழற்
பட்டனுக் என்னைத்தன் பாற் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (3)

சொல்லாண் டசுரு திப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிதையுஞ்சில தேவர் சிறு—ந்றி சேராமே
வில்லாண் டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப் பாகன்
பல்லாண் டென்னும் பதம்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (4)
புரந்தரன் மாலயன் பூசலிட் டோலமிட் டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பஎன் னுயிராண்ட கோவினுக் கென்செய வல்லமென்றும்
கரந்துங் கரவாத கற்பக னாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. (5)
சேவிக்க வந்தயன் இந்திரன் செய்கண்மால் எங்குந்திசை
கூவிக்கவர்ந்து நெருந்கிக் குழாங்குழாமாய் திசையன நின்று கூத்தரும்
ஆவிக்கமு தை என் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத் தப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (6)
žருந்திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றத்தார் பெறுவாருலகில்
ஊரும் உலகும் கழற உழறி உமை மண வாளனுக்காக
பாரும் விசும்பும் அரியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே. (7)
சேலும் கயலுந் தினைக்கும் கண்ணணார் இளங் கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங்கு மென்று புண்ணியர் போற்றின சமய
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (8)
பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்க் கடல்ஈந்த் பிரான்
மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னியத் தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற திருச்சிற்றம்பலமே இடமாக
பாலித்து நட்டம் பயிலவல்லா னுக்கே பல்லாண்டு கூறுதுமே. (9)
தாதையத் தாளர வீசிய சண்டிக்கிவ் அண்டந் தொடுமுடனே
பூதலத்தோரும் வணங்கப் பொற் கோவிலும் போனகமும் அருள்
சோதி மணிமுடித் தாமம் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்கு பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (10)
குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி
விழவொலி விண்ணளவுங் சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவினை யாற்கு வழிவழி யானாய் மணஞ்செய் குடிபிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (11)
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையணைத் தும்நிறைந்து
பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. (12)
எந்தை எந்தாய் சுற்ற முற்றும் எமக்கமு தாமெம்பி ரான்என்றென்று
சிந்தை செய்யும் சிவன் žர் அடியார் அடி நாய் செப்புரை
அந்தமில் ஆனந்த சேந்தன் எணைப்புகுந்தொண் டாருயிர் மேல்
பந்தம் பிரியப் பிரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. (13)திருசிற்றம்பலம்


1 comment:

மதுரையம்பதி said...

அருமையான படங்கள் மற்றும் செய்தி. நன்றி திரு. கைலாசி அவர்களே.