Thursday, December 20, 2007

ஆருத்ரா தரிசனம் - 6

திருச்சிற்றம்பலம்
கால் மாறி ஆடிய பெருமான்
வெள்ளியம்பலம் - மதுரை
தில்லையில் ஆருத்ரா தரிசனம் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்று பார்த்தோம் இனி மற்ற சிவஸ்தலங்களில் இத்திருவிழா எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்று பார்ப்போமா?முத்து விதானம் பொற் கவரி முறையாலே
பத்தர் களோடு பாவையர் சூழப் பலி பின்னே
வித்தக்க் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்
தியாகராஜப் பெருமான் - திருவான்மியூர்


என்று அப்பர் பெருமான் பாடிய வண்ணம் திருவாதிரை நாளன்று திருவாரூரிலே இருந்தாடும் அழகராக, தியாகராஜப் பெருமானாக, அம்மையுடனும் ஸ்கந்தனுடனும் எழுந்தருளியுள்ள எம்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ர பாதருக்கும் தமது திருப்பாதத்தை காட்டியருளியதால், திருவாதிரை நாளன்று நாமும் தியாகராஜரின், மாலும் அயனும் காண இயலாத அந்த திருப்பாத தரிசனத்தை கண்டு களிக்கலாம். ஆதிசேஷன் மேல் வைத்த நிலையில் தொங்கவிடபட்ட அந்த வீரக்கழலணிந்த அந்த ஐயனின் திருப்பாதத்தையும், மேல் கொலுசும், சிலம்பும் அந்த அம்மையின் திருப்பாதத்தையும் முழுதும் வைரத்தால் போர்த்தப் பெற்ற ஸ்கந்தரையும் அன்று நாம் காணலாம். திருவாரூரிலே தியாகராஜப்பெருமான் ஆருத்ரா தரிசனத்தன்று வலது பாத தரிசனமும், பங்குனி உத்திரத்தன்று இடது பாத தரிசனமும் தந்து அருளுகின்றனார். மற்ற நாட்களில் நாம் எம்பருமானது வீரக்கழல் அந்த அந்த இணையார் திருவடி தரிசனம் காண முடியாது முக தரிசனம் மட்டுமே கிடைக்கும்.

திருவாதிரையன்று மட்டுமே கிடைக்கும் மற்றுமொரு திவ்ய தரிசனம் உத்திர கோச மங்கையிலே மரகத நடராஜரின் நிஜ தரிசனம். வருடம் முழுவதும் சந்தனத்தால் போர்த்த்ப்பட்டு காட்சியளிக்கும் எம்பெருமான் இன்று மட்டும் சந்தன காப்பு அகற்றப்பட்டு அபிஷேகம் கண்டருளுகிறார். நாமும் அவரை சந்தனக் காப்பு இல்லாமல் மரகத மேனியராக கண்டு ஆனந்தம் அடையலாம்.

திருமயிலையில் ஆருத்ரா தரிசனம்

ஊர்திரை வேலை யுலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வெல்வலார் கொற்றங்கொல் சேரிதனில்
கார்தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்!

என்று திருமயிலையிலே சாம்பலாகிய பெண்ணை உயிர்பித்த போது ஞான சம்பந்தர் பாடிய மயிலையிலே கொண்டாடப்படும் பல்வேறு சீர்மிகு திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று.

நடராஜபெருமான் எழுந்தருளியுள்ள எல்லா தலங்களிலும் அவருக்கு இன்று அபிஷேகம் மற்றும் திருவீதி உலா நடைபெறுகின்றது. கொங்கு நாட்டுத்தலங்கள் சிலவற்றில் இன்று நடராஜர், சிவகாம சுந்தரி திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
கோவை பேருரிலே இன்று எம்பெருமானின் பின்னே பின்னி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜடா முடியையும் நாம் கண்டு ஆனந்தம் பெறலாம். கங்கையும், இளம்பிறையும், பொன்போல் மிளிரும் கொன்றையும் சடாமுடியிலே அந்த எம்பெருமான் உருவமாக எழுந்தருளியுள்ள தலங்கள் அனைத்திலும் அவருடைய திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.குறிப்பாக சப்த விடங்க ஸ்தலமான திருநள்ளாற்றிலே அருணோதய காலத்தில் ஒரே சமயம் நடராஜப் பெருமானுக்கும், தியாகராஜப் பெருமானுக்கும் அபிஷேகம் நடப்பதை நாம் கண்டு ஆனந்தம் அடையலாம்.தொண்டை மண்டலத்தின் தியாகராஜ ஸ்தலமான தர புகழ் திருவொற்றியூரிலே , தத்தமி தாள மொடு மாணிக்க தியாகர் பதினெட்டு வகை நடனக் காட்சி தந்தருளுகிறார்.
இனி மற்ற பஞ்ச சபைகளில் திருவாதிரைத் திருவிழா எவ்வாறு நடைபெறுகின்றது என்று பார்க்கலாமா? தாமிர அம்பலமாம் திருநெல்வேலியில் 10 நாள் உற்சவம் தரிசனத்தன்று பெரிய சபாபதி, மற்றும் சந்தன சபாபதி சன்னதியிலும் தாம்பிர சபா நடனம் நடைபெறுகின்றது.சித்ர அம்பலமாம் திருக்குற்றாலத்திலும் 10 நாள் உற்சவம், தரிசனத்தன்று, குற்றால நாதர் சன்னதியிலிருந்து நடராஜப் பெருமான் சித்ர சபைக்கு எழுந்தருளி தாண்டவ தீபாரதனை கண்டருளுகிறார்.திருநல்லம்(கோனேரி ராஜபுரம்) சுயம்பு நடராஜர்-சிவகாமி


சுயம்புவாக தோன்றி மிகப்பெரிய திருவுருவமாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்திலும் இத்திருவிழா பத்து நாள் மாணிக்கவாசகர் விழாவாக கொண்டாடப்படுகின்றது.பாவை பாடிய வாயால் கோவை பாடு என்று எம்பெருமானலேயே திருக்கோவையார் பாடிய மாக்க வாசகருக்கு 10 நாள் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந்துறையிலே, இங்கு தில்லையம்பலத்தில் உள்ள ஆடல் வல்லானான இறைவனே தான் எழுதிய திருவாசகத்திற்கும், திருக்கோவையாருக்கும் பொருள் என்று அவருடன் ஒன்றற கலந்த மாணிக்க வாசகர் 10 நாட்களும் பல் வேறு வாகனங்களில் அருட்காட்சி தருகிறார். மேலும் வீரவ நல்லூர், சங்கரன் கோவில் ஆகிய தலங்களிலும் 10 நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
சிறு வயதில் எங்கள் ஊர் உடுமலைப்பேட்டையில் அருள்மிகு பிரசண்ட வினாயகர் கோவிலில் முதலில் அடியேன் கண்ட ஆருத்ரா தரிசனம் இக்கோவிலில் தான். காலை 8 ம அளவில் ஆனந்த நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் சபையை விட்டு முன் மண்டபத்திற்கு எழுந்தருளுவர். பின் அவர்களுக்கு மஹா அபிஷேகம், பின் அலங்காரத்திற்குப் பின் திருக்கல்யாணம், பகல் 1 மணி அளவில் ஐயன் ஊர்வலம் புறப்படுகின்றார். உச்சி வெயில் நேரத்தில் அம்மையும் ஐயனும் வெளி வரும் அழகைக் காண காத்துக் கிடப்போம், பின் ஊர்வலம் வரும் சுவாமியுடன் நாங்களும் செல்லுவோம், அங்கங்கே மண்டகப்படி நடக்கும், நீர் மோர், சுண்டல், பொங்கல் என்று பிரசாதங்களை பெற்றுக்கொண்டு மாலை 5 மணி அளவில் சுவாமியுடன் கோவிலுக்கு திரும்புவோம்.


2 comments:

கீதா சாம்பசிவம் said...

ஆருத்ரா தரிசனப் பதிவுகளுக்கு அழைப்புக் கொடுத்திருந்தும், நான் பத்து நாட்களாய் ஊரில் இல்லாததால் வர முடியவில்லை, ஒவ்வொன்றாய்ப் படிக்கிறேன். ரொம்பவே அருமையான படங்களும், காணக் கிடைக்காத காட்சியும், ஐயன், அம்மையின் ஊடல் தத்துவமும் அருமையாக இருக்கிறது. மீண்டும் வருகிறேன்.

Kailashi said...

நன்றி. மீண்டும் வாருங்கள்.