Thursday, December 27, 2007

ஆருத்ரா தரிசனம் - 12



" குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே" என்றபடி எம்பெருமானுக்கு மிகவும் சிறப்பாக ஆருத்ரா தரிசனம் நடைபெறும் ஒரு கோவில். நெரிசல் மிகுந்த சென்னையில் ஒரு சிறு கோவில்தான் என்றாலும் விழாக்கள் சிறப்பாக நதைபெறுவது என்னை ஈர்த்தது. இந்த ஆருத்ரா தரிசன தொடரின் நிறைவாக இந்த சென்னை கோடம்பாக்கம் சவுந்தர விநாயகர் திருக்கோவிலின் விமானங்களைப் பற்றி கூறுகின்றேன்.

பஞ்ச மூர்த்திகளும் பவனி வரும் அழகை காண்பவர்கள் அது போன்று எங்கும் கண்டதில்லை என்று ஆச்சிரியப்படும் அளவில் அருமையான பொன் முலாம் விமானத்தில் வலம் வருகின்றனர். காணக்கண் கோடி வேண்டும் என்பார்களே அது போல ஒவ்வொரு வருடமும் தவறாது சென்று தரிசிக்க அழைக்கும் அற்புத தரிசனம் அது. இத்திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் இவ்வாறு நடைபெறுகின்றது. இரவு 7 மணி அளவில் மஹாபிஷேகம். இரவு 10:30 மணி அளவில் வெள்ளை சார்த்தி புறப்பாடு. ஆருத்ரா தரிசனத்தன்று அருணோதய காலத்தில் சிவகாம சுந்தரி உடன் ஸ்ரீ நடராஜ பெருமான் திருக்கல்யாண வைபவம். காலை ஆறு மணிக்கு கோபுர வாசலில் ஆருத்ரா தரிசனம். காலை 9 மணிக்கு பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி விமானத்தில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. பகல் 1 மணிக்கு திருஊடல் உற்சவம் என சகல உற்சவங்களுடன் வெகு சிறப்பாக நடைபெருகின்றது. சிதம்பரம் போல் பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது இத்திருக்கோவிலின் சிறப்பு.


விநாயகர் தங்க மூஷிக வாகனத்தில் புறப்பாடு

விநாயகப் பெருமான் தங்க மூஷிக வாகன்த்தில் காலை மடித்து தொங்கவிட்டு, கையில் அங்குசம் ஏந்தி முன் செல்கின்றார். இருபக்கமும் கந்தர்விகள் யாழ் கூட்டுகின்றனர்.



பத்மஜோதி கலியுகக் கண்ணாடி என்று அழைக்கப்படும்

ககன கந்தர்வ கனக விமானம்:


இனி பத்மஜோதி கலியுகக் கண்ணாடி என்று அழைக்கப்படும் நடராஜப்பெருமான் தரிசனம் தந்தருளும் ககன கந்தர்வ கனக விமானத்தின் அழகை முதலில் காண்போம். திருத்தேர் போன்ற அமைப்பு, அருணன் சாரதியாக இருந்து இரதத்தை செலுத்த ஐம்பூதங்களே ஐந்து குதிரைகளாக தேரை இழுக்கின்றன. சூரியனும் சந்திரன் மற்றும் அக்னியை மூன்று கண்களாகக் கொண்ட ஐயனுக்கு சூரிய சந்திரர்களே இறக்கைகள், ஐயனுக்கு நான்கு கோண விமானம். பன்னிரண்டு தூண்கள். நான்கு திசைகளிலும் துவார பாலகர்கள். நான்கு பக்கமும் விசிறி வீசுபவர்கள் ரம்பா, ஊர்வசி, மேனகை , திலோத்தமை என்னும் தேவ கன்னியர்கள். மேல் புரத்தில் கவரி வீசுபவர்கள் மற்றும் மாலை தாங்கி நிற்பவர்கள் தேவதைகள். ஐயனுக்கு பேரியாழ் தேவி, சகோட யாழ் தேவி, மகர யாழ் தேவி, மற்றும் செங்கோட்டி யாழ் தேவி நால்வரும் இசை கூட்டுகின்றனர். ஆனந்த நடராஜப்பெருமான் பத்ம பீடத்தில் ஆனந்தத் தாண்டவ தரிசனம் தந்தருளுகின்றார். ஐயனின் திருவாசியில் அன்னப் பறவைகள் அழகு கூட்டுகின்றன. விமானம் முழுவதும் அழகான மர சிற்பங்கள். முன் பக்கத்தில் தில்லைக்காளி, மஹா விஷ்ணு, பிரம்மா எம்பெருமானை வணங்கி நிற்க நாரதரும் தும்புருவும் ஐயன் புகழ் பாடுகின்றனர். விமானத்தில் மூன்று கலசங்கள், நான்கு பக்கமும் எக்காளம் ஊதும் கந்தவர்கள், வணங்கி அமர்ந்திருப்பது அதிகார நந்திகள், விமானத்தைத் தாங்கி நிற்பது நான்கு பக்கமும் யாழிகள். முன் பக்கத்து விமானத்தில் ஆதி சங்கரரும், தாயுமானவரும் அருட்காட்சி தருகின்றனர்.

வலது பக்க சூரிய இறக்கை


இனி வலப்பக்கத்தில் அகத்தியர் மற்றும் திருவள்ளுவர். வல, பின், இடபக்கங்களில் மூன்று வரிசையில் சிற்பங்கள். மேல் வரிசையில் சிறிய காமதேனு, அம்மை ஐயன் கண்ணை மூடும் சிற்பம், மற்றும் கம்பா நதிக்கரையில் சிவ பூஜை செய்யும் காட்சி. நடு வரிசையில் நின்ற கோலத்தில் தவ žலர்களான இராமகிருஷ்ண பரமஹம்ஸர், வள்ளலார் சுவாமிகள் மற்றும் குதிரை வாகனாரூட குபேரன். கீழ் வரிசையில் பத்ம பீடத்தில் சித்த புருஷர்கள் குதம்பை சித்தர், சட்டை முனி, திருமூலர், காலங்கி, கொங்கணர். ஜடாமுடியும், தாடியும், அணிந்துள்ள ருத்ராக்ஷமாலைகளும் அத்தனையும் அப்படியே தத்ரூபம்.சூரிய இறக்கை அப்படியே ஜடாயுவின் இறக்கை எனலாம்




,

ககன கந்தர்வ விமானத்தின் பின்னழகு



அடுத்து பின் பக்கம் விமானத்தில் வியாசர், வால்மீகீ. முதல் வரிசையில் மார்க்கண்டனுக்காக காலனை சம்ஹாரம் செய்யும் சிற்பம், தத்தாத்ரேயர், சிம்ம வாகனத்தில் அஷ்ட புஜங்களுடன் மஹ’ஷாசுரமர்த்தனி சிற்பங்கள். ஐயனின் திருவாசியின் அழகே அழகு. இரண்டாவது வரிசையில் சமயக்குரவர் நாலவர் மற்றும் மூன்று கால்களுடன் கோல் உன்றிய பிருங்கி முனி. கீழ் வரிசையில் சித்தர்கள் மச்சமுனி, கோரக்கர், கருவூரர், பாம்பாட்டி சித்தர், புலிப்பாணி சித்தர் மற்றும் போகர்.



இடது பக்க சந்திர இறக்கை



இனி இடப்ப்புறம் மேல் வரிசையில் காமதேனு, கண்ணப்பர் கண்ணை அப்பும் சிற்பம், மாணிக்கவாசகருக்கு குருந்த மரத்தடியில் குருவாக சிவபெருமான் உபதேசம் செய்யும் சிற்பம். நடு வரிசையில் காரைக்காலம்மையார், ஏனாதி நாயனார், நித்யானந்தர், கரும்பு தாங்கிய பட்டினத்தார். கீழ் வரிசையில் மற்ற ஆறு சித்தர்கள் அகத்திய முனி. கமல முனி, நந்தி தேவர், தன்வந்திரி முதலியோர்.


இவ்வாறு ஆதிசேஷன், அஷ்ட திக் கஜங்கள், அஷ்ட பாலகர்கள் விமானத்தை தாங்க, யாழ் தேவிகள், நாரதர், தும்புரு இசை கூட்ட, தேவதைகள் சாமரம் விசிறி வீச, கோபுரத்தில் அதிகார நந்திகள் சேவைக்காக காத்திருக்க , நான்கு பக்கமும் துவார பாலகர்கள் காவல் காக்க, யோகிகள், முனிவர்கள் ஓங்காரம் ஓத , சித்தர்கள் சிவாய நம சிந்தித்திருக்க, நால்வரும் தேவார திருவாசகம் பாட , காரைகாலம்மையார் ஐயன் அடிக்கீழ் இருந்து தாளம் போட, மணிகள் கல கல என்று ஒலிக்க ஆனந்த தாண்டவமாடி எம்பெருமான் வரும் அழகை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இந்த விமானத்தை உருவாக்கியது அந்த மயனாகத்தான் இருக்க வேண்டும். தங்க நிறத்தில் காலை இளம் வெயிலில் மின்ன வரும் விமானத்தில் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன், சகல அகிலத்திற்கும் ராஜாவாக , நடராஜாவாக பவனி வரும் அழகை, தரிசனம் செய்வோர் பேறு பெற்றோர் என்பதில் ஐயமில்லை. ஆதி அந்தம் இல்லாத அந்த அருட்பெருஞ்சோதிதான் அகில பிரம்மாண்டத்தையும் ஆக்கியும், காத்தும், அழித்தும், மறைத்தும், அருளியும் ஐந்தொழில் புரிகின்றார் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றது இந்த ககன கந்தர்வ கனக விமானம்

60 வருடங்களுக்கும் மேலாக வெகு சிறப்பாக இந்த ஆருத்ரா தரிசன காட்சி அற்புதமாக நடந்து வருகின்றது. அடியேன் ஐந்து வருடங்களுக்கு முன் ஒரு ஆருத்ரா தரிசனத்தன்று காலையில் அலுவலகம் சென்று கொண்டிருந்த போது கோடம்பாக்கம் மேம்பாலத்தில் பேருந்தில் இருந்து வெளியே தங்க மயில் வாகனத்தில் வள்ளி தேவ சேனா சமேத முருகர் வலம் வரும் கோலத்தை மட்டும் காணும் பாக்கியம் கிடைத்தது, ஐயனின் அலங்காரம் அப்படியே மனதை ஈர்த்தது, எனவே அடுத்த வருடம் காத்திருந்து ஆருத்ரா தரிசனத்திற்கு இரண்டு நாள் முன்னம் அந்த பகுதியில் சென்று தேடினேன் அப்போது கண்ணில் பட்டது ஐயனின் பவனியை அறிவிக்கும் அறிவிப்பு, அந்த வருடம் முதல் ஒரு வருடம் கூட எத்தனை கோவில்கள் சென்றாலும் ஒரு வருடம் கூட அந்த ககன கந்தர்வ விமான தரிசனத்தை மறப்பதில்லை.

மானச கந்தர்வ மாணிக்க விமானம்





பின்னழகு



ஐயனுக்கு நான்கு கோண விமானம் ஆனால் அம்மைக்கோ எண்கோண விமானம். கோபுரத்தில் அம்மைக்கும் மூன்று கலசங்கள் ஒன்று நடுவிலும் மற்ற இரண்டும் தனியாக, கோபுரத்தில் கிளிகள் கொஞ்சுகின்றன. வளைவுகளிலே அழகிய சிற்பம் , நடுவில் பூவேலைப்பாடு. கோபுரத்தை யாழிகள் தாங்க கந்தர்விகளும், கின்னரிகளும், கையில் கிளியுடன் முத்து மாலை ஏந்தி விமானத்திற்கு அழகு சேர்க்கின்றனர். பிரம்ம சக்தி, சிவ சக்தி, பராசக்தி, நாகம், வராகி, மகேஸ்வரி, விஷ்ணு சக்தி, வீர சக்தி என்னும் தன் எட்டு ரூபங்கள் விமானத்தை சுற்றி அருட்காட்சி தர, இறக்கையை விரித்த கந்தர்விகள் முன்புறமும் பின்புறமும் வீணை இசை மீட்ட எழிலாக பவனி வருகின்றாள் அன்னை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி. விமானத்தை சிம்மங்கள் மற்றும் நாகங்கள் தாங்குகின்றன. பீடத்தில் பூ வேலைப்பாடுகள் அற்புதம். ஐயனின் விமானம் ஒரு வித அழகு என்றால் அம்மனின் விமானத்தின் அழகு மற்றொரு விதம். ஒவ்வொரு வருடமும் அம்மனுக்கு செய்யப்படும் அலங்காரமும் ஒவ்வொரு வகை. ஒரு தடவை நின்ற கோலம் .மறு வருடம் அமர்ந்த கோலம், அதற்கடுத்த வருடம் யோகக் கோலம் என்று காணக் கண் கோடி வேண்டும்.

தங்க மயில் வாகனத்தில் வள்ளி தேவசேனா சமேத முருகர்



வள்ளி தேவ சேனா சமேத முருகர், தங்க மயில் வாகனத்தில் பவனி வருகிறார், குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் குடி கொண்டிருக்கிறானல்லவா? எனவே முருகரது தங்க மயில் ஒரு குன்றின் மேல் நிற்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. குன்றில் அனைத்து பறவைகள் மற்றும் மிருகங்களைக் காணலாம். எம்பெருமானுக்குரிய கைலாய வாகனத்தில் இது போல்தான் மிருகங்களும் பறவைகளும் காட்டப்பட்டிருக்கும், ஆனால் இங்கு குன்றிலேயே அனைத்து ஜ“வராசிகளும் காட்டப்பட்டுள்ளன. மயிலின் காலின் கீழ உள்ளது ஐந்து தலை நாகம். அலகில் இருப்பது மூன்று தலை நாகம். பீடத்திலும், திருவாசியிலும் அழகிய பூ வேலைப்பாடுகள். முருகரும் நான்கு புறமும் கந்தர்விகள் யாழ் மீட்ட பவனி வருகின்றார். வினாயகப்பெருமானுக்கு தங்க மூஞ்சூறு வாகனம், மூஞ்சூறுவின் மேல் இடப்பட்டுள்ள போர்வையின் அமைப்பு மிகவும் சிறப்பு. இவருக்கும் பீடத்தில் மற்றும் திருவாசியில் பூ வேலைப்பாடுகள், நான்கு புறமும் கந்தர்விகள் இசை கூட்டுகின்றனர்.
தங்க இடப வாகனத்தில் சண்டிகேஸ்வரர்


சண்டிகேஸ்வரருக்கு தங்க சிறிய ரிஷப வாகனம். ரிஷபத்தின் அலங்காரங்கள் அனைத்தும் அற்புதம். வருடாவருடம் வினாயக, முருக, சண்டிகேஸ்வரர் அலங்காரமும் அம்மனின் கோலத்தை ஒட்டி செயப்படுகின்றது. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்றபடி அவன் அருளால் அவன் பவனி வரும் அந்த அற்புத அழகை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாததை எடுத்தியம்ப முயற்சி செய்துள்ளேன், தாங்களும் சென்று அந்த அழகை கண்டு களிக்குமாறு வேண்டுகிறேன்.
இத்துடன் ஆருத்ரா தரிசன தொடர் நிறைவு.இந்த தொடரில் வந்து தர்சனம் பெற்ற அனைவருக்கும் நன்றி. நடராஜப் பெருமானின் பல திருக்கோவில்களைப் பற்றி எழுத உத்தேசிக்கின்றேன் இது போலவே வந்து தரிசனம் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Wednesday, December 26, 2007

ஆருத்ரா தரிசனம் - 11

திரு ஊடல் உற்சவம்

அம்மையும் ஐயனும் (ஊடல் உற்சவம்)





கணவனிடம் மனைவி எவ்வாறு சிறு கோபம் (ஊடல்) கொள்கின்றாள் என்பதை தாங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.

என்ன சார்!

தினமும் சேலைக்கும், நகைக்கும் இது வழக்கம் தானே என்கின்றீர்களா?

நாம் இப்பதிவில் காணப் போவது இறைவனிடம் இறைவி கொள்ளும் ஊடல். பல்வேறு ஆலயங்களில் ஆருத்ரா தரிசனத்தின் போது இந்த திரு ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது. வடபழனி, கோடம்பாக்கம், காளிகாம்பாள் ஆல்யம் ஆகியவற்றில் இந்த உற்சவம் நடைபெறுகின்றது. இவுற்சவத்தின் தாத்பரியம் என்ன என்று பார்ப்போம்.

கோவில் இராஜகோபுர வாயில் வழியாக ஐயன் வெளியே சென்று விட அம்மை கோவிலின் உள்ளேயே இருக்க கோவில் கதவு சார்த்தப்படுகின்றது. ஓதுவார் மூர்த்திகள் அம்மைக்கும் ஐயனுக்கும் நடைபெறும் உரையாடலை இவ்வாறு ஓதுகின்றார்.

அம்பாள் : தூர நில்லும் எந்தன் சுவாமி ! ஏன் இந்த தாமதம்?

ஐயன்: நாரிமயே! திருவாலங்காட்டில் நான் அந்த பத்ர காளி முன் நாட்டியம் ஆடி வந்தேன் மானே! தேனே!

அம்பாள்: மாதவரே! மன்னவரே! கங்கைதனை தலைக் கொண்டவரே! உமதிருகண்ணும் சிவந்ததென்னே சொல்லும் சுவாமி?

ஐயன்: நாயகியே! நான்முகியே! எந்தன் நல்ல இடம் கொண்டவளே! தத்தையார் கந்தப்பொடி கண்ணில் விழ சிவப்பாச்சே மானே!

அம்பாள்: மான் மழு கொண்டவரே! மதியினை அணிந்தவரே! மன்னவரே நின் புஜத்தில் மஞ்சளின் நிறம், சுவாமி உமக்கு மஞ்சளின் நிறமேது?

ஐயன்: சந்தனத்தில் கலாப கஸ்தூரி கலந்து தெளித்ததால் மஞ்சளாச்சே மானே! தேனே!

அம்பாள்: பொன்னார் மேனியரே! புலித்தோலை அணிந்தவரே! மெய்குறி காங்குது, மேல் மூச்சு வாங்குது இந்த விசித்திரம் என்ன சொல்லும் சுவாமி?

ஐயன்: பஸ்மாசுரனை எதிர்த்து போர் புரிந்த போது பட்டன இக்குறிகள் மானே! தேனே!

அம்பாள்: நடந்து வந்த காரணம் என்ன சொல்லும் சுவாமி?

ஐயன்: வெண்கவரி மான் மீதிருந்து தவறி விழுந்ததனால் நானே நடந்து வந்தேன் மானே! தேனே!

அம்பாள்: எந்தன் மனம் நோகுதய்யா! சஞ்சலம் தோன்றுதைய்யா! உமக்கு இதழ் குறி வந்தது ஏன் சுவாமி?

ஐயன்: தாருகாவனத்து தத்தையார் பச்சைக்கிளி முத்தமிட ஆனதடி என் மானே! தேனே!

அம்பாள்: என் உடல் பாதி கொண்டவரே நீரும் நானும் சேர்ந்த மனமல்லவே! நாம் சேர்ந்திருப்போம் நானே வாரேன் சுவாமி.

பின் கோவில் கதவுகள் திறக்கப்படுகின்றன அம்மை வந்து ஐயனுடன் சேர்ந்து காட்சி தர கற்பூரம் காட்டப்படுகின்றது. பின் கோவிலின் உள்ளே சென்று ஆருத்ரா தரிசன தீபாரதானை. பின் திருவீதி உலா.

வெளிப்பார்வைக்கு இந்த ஊடல் உற்சவம் கணவன் மனைவி உரையாடல் போல தோன்றினாலும் உண்மையில் இதனுள்ளூம் ஒரு பெரிய தத்துவார்த்தம் அடங்கி உள்ளது.

பிரம்மோற்சவ காலங்களில் இந்த ஊடல் உற்சவம் பந்தம் பரி விழாவாகவும் நடைபெறுகின்றது. முடிவில் அம்மையை சாந்தப்படுத்த ஐயன் பந்தம் பரி பதினெட்டு வகை நடனக் காட்சியும் தந்தருளுகின்றார்.

ஆசைகளில் இருந்து ஜீவாத்மா விலகி பரமாத்மாவுடன் இனையும் போது பரமானந்தம் என்னும் தத்துவமே இங்கே உணர்த்தப்படுகின்றது. இங்கே அம்பாள் ஜீவாதமா, ஐயன் பரமாத்மா. பசுவை விட்டு சென்ற கன்று திரும்பி வந்து தாயை அடைந்தவுடன் அடையும் பேரானந்த நிலை போல ஜ“வாத்மாவும், பரமாத்மாவும் இனையும் போது கிடைக்கும் நிலையே சமாதி.
காம, குரோத, லோப, மோஷ, மத, மச்சர, டம்ப, தாப, அசுயை என்னும் பத்து பந்தங்களையும் பறி என்றால் கொள்ளை கொடுக்க வேண்டும். அவ்வாறு பத்து பந்தங்களையும் பறி கொடுத்தால் மோட்சம் என்பதை உணர்த்துவதே இந்த உற்சவம். ( பந்தம்- ஆசை, பறி- கொள்ளை). எல்லா சிவாலயங்களில் பிரம்மோற்சவத்தின் போது பந்தம் பறி உற்சவம் என்றும், விஷ்ணு ஆலயங்களில் தேவ தேவி சம்வாதம் என்றும் இந்த ஊடல் உற்சவம் நடைபெறுகின்றது.

Tuesday, December 25, 2007

ஆருத்ரா தரிசனம் -10

சீவனில் ’சீ’ யில் உள்ள கொம்பென்னும் ஆணவ மலம் நீங்கும் போது அந்த சீவனே சிவன் ஆகின்றான் என்பதை உணர்த்தும் பொருட்டே ஆருத்ரா தரிசனத்தின் போது பல்வேறு திருக்கோவில்களில் வெள்ளை சார்த்தி புறப்பாடு உற்சவம் நடைபெறுகின்றது.


ஐயன் வெள்ளை சார்த்தி புறப்பாடு



அம்மை வெள்ளை சார்த்தி புறப்பாடு



மானிடர்களாகிய நம்மை மாயையினால் மூடியுள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களே வெள்ளைப் போர்வை அது மூடியிருக்கும் போது நமக்கு இறை தரிசனம் கிட்டாது. என்று அவற்றை நாம் போர்வையைக் களைவது போல் களைந்து பூரண சரணாகதி அடைகின்றோமோ அன்று தான் நமக்கு ஆருத்ரா தரிசனம் கிட்டும், அதுவே பரமானந்த நிலை, சச்சிதானந்த நிலை என்பதை உணர்த்துவதே வெள்ளை சார்த்தி புறப்படும் உற்சவம்.

தில்லையில் ஐயனும் அம்மையும் எட்டாம் நாளன்றும், வட பழனியில் காலையிலும், காரைக்காலில் இரவில் முழு வெள்ளை மலர் அலங்காரத்திலும், வைணவ தலங்களில் பிரம்மோற்சவத்தின் போது போர்வை களைதல் என்று ஏழு போர்வைகள் போர்த்தி பெருமாள் எழுந்தருளி பின் அவற்றைக் களைந்து பின் தரிசனம் தருவதும் இதே ’பூரண சரணாகதி’ தத்துவத்தையே உணர்த்துகின்றது.

பஞ்ச கிருத்திய நடனம்: நாம் எல்லோரும் உய்ய அம்பத்துள் ஆடும் ஆடல் வல்லான் தனது நடனத்தால் இந்த பிரம்மாண்டத்தையே இயக்கத்தில் வைத்துள்ளான். எனவேதான் அன்பர்கள்

ஆட்டுவித்தால் யாரொருவர் யாரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் யாரொருவர் அடங்காதாரே
என்று பாடிப் பரவினர்.

பஞ்ச கிருத்திய நடனம்


ஐயனின் வலக்கரத்திலுள்ள உடுக்கை படைத்தல் தொழிலையும், அபய கரம் காத்தல் தொழிலையும், இடக்கரத்தில் உள்ள அக்னி அழித்தல் தொழிலையும், முயலகனின் மேல் ஊன்றிய பாதம் திரேதம் எனப்படும் மறைத்தல் தொழிலையும் , தூக்கிய குஞ்சிதபாதம் முக்திக்கு காரணமாகி அருளல் தொழிலை குறிக்கின்றது.

தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பு
சாற்றிடும் அங்கையிலே சங்காரம்-
ஊற்றமாய் ஊன்று மலர்பதத்தே உற்ற திரோதன் முத்தி
நான்ற மலர் பதத்தே நாடு

என்றபடி ஐயனின் ஐந்தொழில்களான ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளலை குறித்து ஐந்து தடவை கோயிலைச் சுற்றி வலம் வருகின்றார் எம்பெருமான். முதல் சுற்றின் போது வேதம் (ஸ்ரீ ருத்ர) கோஷத்துடனும், இரண்டாவது சுற்றின் போது எம்பெருமான் தானே தன் திருக்கரங்களினால் எழுதிய திருவாசக பாராயணத்துடனும், மூன்றாவது சுற்றின் போது மூவர் பெருமக்களின் தேவார இன்னிசையோடும், நான்காவது சுற்றின் போது நாதஸ்வர மல்லாரி இசையோடும், ஐந்தாவது சுற்றின் போது ஆன எல்லாவிதமான உபசாரங்களுடன் ஆனந்த தாண்டவத்துடனும வலம் வந்து அருளிகின்றார்.

எல்லாம் அவ்ன் செயலே நடப்பதெல்லாம் அவனாலே என்பதை உணர்த்தும் இன்னொரு உற்சவம் இது. இனி நாளை ஆருத்ரா தரிசனத்தின் போது நடைபெறும் ஊடல் உற்சவத்தைப் பற்றிப் பார்ப்போம்.

Sunday, December 23, 2007

ஆனந்த ஆருத்ரா தரிசனம் ( திருவாதிரை நாள்)

திருசிற்றம்பலம்
அம்பலவாணரின் ஆதிரை நாள்

இனியன தனியருந்தேல் என்பது பெரியோர் வாக்கு. ஆகவே பாலும் தேனும் கன்னலும் அமுதும் ஒத்த அம்பலவாணரின் அடி பணிந்து அவர் சென்ற ஆருத்ரா தரிசனத்தின் போது தந்தருளிய அருட்காட்சியை அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு சிறு முயற்சியே இந்த பதிவு.





ஐந்து திருக்கோவில்களின் அற்புத காட்சிகள் இப்பதிவில் உள்ளன் நடு நடுவே சிறிய விளக்கங்கள் உள்ளன. விரிவான விளக்கங்களை வரும் பதிவுகளில் தர ஐயன் உத்தரவு.





"திருவாதிரைக் களி திருடியாதவது சாப்பிட வேண்டும்" என்ற சிறப்புக் கொண்ட களியை முதலில் எம்பெருமானுக்கு படைத்த ஆனந்த சேந்தனின் திருப்பல்லாண்டு பதிவின் நிறைவாக அளித்துள்ளேன் அதைப் பாராயணம் செய்து ஆனந்த தாண்டவ நடராஜப் பெருமானையும் அம்மை சிவகாம வல்லியையும் வணங்கி அருள்பெறுமாறு கை கூப்பி அழைக்கின்றேன்.






சென்னை வடபழனி வேங்கீஸ்வரர் ஆலய ஆருத்ரா தரிசன காட்சிகள்

ஆனந்த நடராஜர்

அம்மை சிவகாம சுந்தரி

அம்மையும் ஐயனும் சேர்த்தி (ஊடல் உற்சவம்)




மாணிக்க வாசகர்



ஐயன் வெள்ளை சார்த்தி புறப்பாடு



அம்மை வெள்ளை சார்த்தி புறப்பாடு


பஞ்ச கிருத்திய நடனம்




தில்லையில் முதல் நாளே தேரோட்டத்தைக் காண வந்த பகதர்கள் இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் வந்து குழும ஆரம்பித்து விடுகின்றனர். மார்கழிப் பனியில் இரவு முழுவதும் அமர்ந்திருக்கும் அந்த பக்தியை எப்படி என்று விவரிப்பது புரியவில்லை. மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளோடு இணைந்து திருவாதிரை வருவதால் விண்ணிலிருந்து சந்திரன் தன்னை தலையில் அணிந்து சாப விமோசனம் அளித்த சிவபெருமானின் அன்பர்களை தன் பதினாறு அமுத கலைகளால் தழுவுகின்றான். பிரம்ம முகூர்த்தத்தில்அருணோதய காலத்தில் (அதி காலை சுமார் மூன்று மணி அளவில்) நடராஜப் பெருமானுக்கும் சிவகாம சுந்தரிக்கும் தேவர்கள் நடத்தும் உஷத் கால பூஜையின் மஹா அபிஷேகம் துவங்குகின்றது.




ஆருத்ரா தரிசனம் தேவர்கள் பூஜை என்பதால் அதை நடத்தும் தீட்திசர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார், திருவிழாவின் பத்து நாட்களும் அவர் மிகுந்த நியம நிஷ்டையுடன் இருக்கிறார் என்றும் ஆருத்ரா தரிசன அபிஷேகம் செய்ய வாய்ப்புக் கிட்டியவர் மிகவும் பேறு பெற்றவர் என்பதும் கேட்ட செய்தி.


தேவர்கள் நடத்தும் அபிஷேகம் என்பதால் அதன் பிரம்மாண்டத்தை தாங்கள் உணரலாம், அண்டா அண்டாவாக அபிஷேகத் திரவியங்கள் ஐயனுக்கும் அம்மைக்கும், மஞ்சள்ப் பொடி, திருமஞ்சனப் பொடி, நதியாய்ப் பாயும் பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், பழச்சாறுகள்( அனைத்து பழங்களின் சாறு) தேன் பேரீச்சம் பழ மாலையுடன் என்று பல்வித அபிஷேகம். அபிஷேகத்தின் போது ஐயனின் நிஜ ரூபத்தை முழுமையாக தரிசிக்கும் பேறு கிட்டுகின்றது. சில்ப சாஸ்திரப் பிரகாரம் நடராஜ மூர்த்தங்கள் ஷ்ட்கோண சக்கர பிரகாரத்திலோ அல்லது அம்பாளின் ஸ்ரீசக்ர பிரகாரத்திலோ வடிக்கப் படுகின்றன. தில்லை நடராஜர் ஸ்ரீசக்ர வடிவில் அமைந்துள்ளார். அறியாமையாம் முயலகனையும், ஐயனின் பூத கணங்களையும் அபிஷேக காலத்தில் மட்டுமே தரிசிக்க முடியும். அம்மைக்கு தோழியராக மஹா லக்ஷ்மியும், மஹா சரஸ்வதியும் இருக்கும் கோலதையும் திரிபாங்கியாக ஒயிலாக சாய்ந்து அம்மை ஐயனை நோக்கிய வண்ணம் நிற்கும் திருக்கோலத்தையும் இன்று அருமையாக தரிசனம் செய்யலாம். அடுத்து திருநீறு அபிசேகம் மலை மலையாக அபிஷேகம் ஆகின்றது எம்பெருமான் தன் பவள மேனியில் பூசும் அந்த பால் வெண்ணீறு. திருநீறு அபிஷேகம் நடைபெறும் போது அந்த சுகந்த திருநீற்றின் மணம் அந்த கோவில் முழுவதும் பரவுகின்றது என்றால் எவ்வளவு திருநீறு ஐயனுக்கு அபிஷேகம் ஆகின்றது என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள்லாம். நிறைவாக சந்தனம் அபிஷேகம் செய்யப்படுகின்றது, தூய அரைத்த சந்தனம் அபிஷேகம் செய்யப்படுகின்றது ஐயனுக்கும் அம்மைக்கும், பின் சகஸ்ரதாராவினால் பன்னீர் அபிஷேகம். அபிஷேகத்திற்க்கு பின் பல் வேறு மலரஞ்சலி சாற்றப்படுகின்றது.





இச்செய்தி நேற்றைக்கு முந்திய நாள் தினகரன் நாளிதழ் ஆன்மிக சிறப்பிதழில் படித்தது. திரு சி.குப்புஸ்வாமி தீட்சிதர் அவர்கள் எழுதியது. இவ்வாண்டின் சிறப்பு நிகழ்வான நவரத்ன சுவர்ணாபிஷேகம் நடைபெறும்.


அது என்ன நவரத்ன சுவர்ணாபிஷேகம்? ஆலயங்களில் இறைவனை பிரதிஷ்டை செய்வதற்கு முன் நவரத்னங்கள்(மாணிக்கம், பவளம், வைரம், முத்து, மரகதம், புஷ்பராகம், நீலமாமணி, கோமேதகம், வைடூரியம்,)பீடத்தின் கீழ்ப் பரப்புதல் மரபு. நாள் தோறும் ஆறுகால பூஜையின் போது பகல் இரண்டாம் காலத்தில் பூஜை ஏற்கும் சிறிய நடராஜர், இரத்தின சபாபதி எனும் பெயர் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.




கடலுக்கு ’ரத்னாகாரம்’ என்னும் சிறப்புப் பெயருமுண்டு. அதாவது ரத்னங்களின் பிறப்பிடம் கடல். முன்னொரு காலத்தில் கடலரசன், தான் இழந்த சுய உருவத்தைப் மீண்டும் பெற தம்மிடம் உள்ள ரதனங்களால் இறைவனை பூஜித்து நினைத்ததை அடைந்தான் எனப் புராணங்கள் பகரும். ஐயனுக்கும் அம்மைக்கும் நடைபெறும் நவரத்ன சுவர்ணாபிஷேகத்தை கண்ணுறுபவர்கள் நவகிரக தோஷம் நீங்கி இம்மை-மறுமை ஆகிய இருபிறவிகளில் செய்த பாவங்களும் ற்றப்பட்டு தூய்மைமிகு ஆன்மாக்களாகி பேரானந்தப் பெருவாழ்வு வாழ்வது திண்ணம்.


ஐயனுக்கும் அம்மைக்கும் இவ்வாறு நவரதன சுவர்ணாபிஷேகம் செய்வதால் அவர்கள் மனம் மகிழ்ந்து அதன் மூலம் உலகம் வளம் பெற்று திகழும், உலக ஒற்றுமை ஓங்கி ஒருமைப்பாடு ஒளிரும். பயங்கரவாதம், இயற்கைப் பேரழிவுகள் போன்ற தீமைகள் அகன்று அமைதி நிலவும். மேலும், நம் தாய்த் திரு நாடாம் இந்தியாவின் பெருமை மற்றும் மதிப்பு உலக அரங்கில் மிளிரவும் ஆடலரசன் அருள் மழை பொழிவார் என்பது திண்ணம்.




இவ்வாறு அம்பல வாணருக்கும் அன்னைக்கும் மஹா அபிஷேகம் முடியும் போது சூரியன் தன் கிரணங்களைக் கொண்டு அம்மையப்பரின் அடி வருட வருவான், ஆம் காலைப் பொழுது ஆகிவிட்டிருக்கும். பின் ஆருத்ரா தரிசனத்திற்காக திரைப் போடப்படுகின்றது. நாம் திரை விலகுவதற்கு முன் வடபழனி வேங்கீஸ்வரர் ஆலயத்தில் எவ்வாறு ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுகின்றது என்று பார்ப்போம்.




வடபழனியில் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு நடராஜருக்கும், சிவகாம சுந்தரிக்கும் மஹா அபிஷேகம் ஆரம்பம். சுமார் மூன்று மணி நேரம் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது. பின் சிறப்பு அலங்காரம், அலங்காரம் முடிந்த பின் புறப்பாடு ஓதுவார் மூர்த்திகளூக்கு பரிவட்டம் கட்டப்படுகின்றது திருப்பள்ளியெழுச்சி பாடுகின்றார். பின் முதலில் வெள்ளை சார்த்தி புறப்பாடு அம்மையும் ஐயனும் முக தரிசனம் மட்டும் தந்து கோவிலை வலம் வருகின்றர், வலம் முடிந்த பின் வெள்ளை என்பது நமது ஆணவ மலம் அதை விடுத்து ஆண்தவனிடம் சரணடைந்தால் கிடைக்கும் தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்பது இந்த வெள்ளை சார்த்தி புறப்படுதலின் தாத்பரியம். பின் பஞ்ச கிருத்த நடனம் ஐந்து சுற்றுகள் வலம் வருகின்றனர் ஐயனும் அம்மையும் தாம் செய்யும் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஐந்தொழில்களைக் குறிக்க. பின் ஊடல் உற்சவம், அம்மை கோபித்துக் கொண்டு கோவில் கதவை சாத்திக் கொள்ள ஐயன் அன்னையை மாணிக்க வாசகர் சமாதானம் செய்து பின் இருவரும் சேர்ந்து ஒன்றாக மண்டபத்தில் ஆருத்ரா தரிசனம் தருகின்றனர். பூஜைகள் நடைபெறுகின்றன. பின்னர் அம்மையும் ஐயனும் ஊர்வலம் வருகின்றனர். தாங்கள் மேலே பார்த்த படங்கள் இந்த உற்சவங்களின் படங்கள் தான்.





மாம்பலம் லிங்கதுர்க்கையம்மன் ஆலயம்


நடராஜர்

சிவகாமி




அடுத்த கோவிலுக்கு செல்லும் முன்... இதோ இராஜ சபைக்குள் பக்தர்கள் செல்ல தொடங்கிவிட்டனரே! முதலில் தில்லையில் ஆருத்ரா தரிசனம் கண்டு விடுவோம். லட்சார்ச்சணையும், மஹா அபிஷேகமும் முன் மண்டபத்தில் கண்டருளிய பெருமான் இப்போது மண்டபத்தின் உள்ளே எழுந்தருளி உலகுக்கே இராஜாவாக அலங்காரம் செய்து கொண்டிருக்கும் போது பஞ்ச மூர்த்திகள் நகர் வலம் வந்து தீர்த்தவாரி காண்கின்றனர். கோவில் முழுவதும் மக்கள் கூட்டம் கூடிக் கொண்டே செல்கின்றது எங்கும் சிவ சிவ என்னும் நாமம் ஒலிக்கின்றது. வெளியே இருப்பவர்கள் உள்ளே வர முடியாமல் தவித்துக் கொண்டு நிற்கின்றனர். சித் சபையில் இரகசிய பூஜையும் நடைபெறுகின்றது.


சுமார் பன்னிரண்டு மணி அளவில் எல்லாரும் காத்துக் கொண்டிருந்த தருணம் வருகின்றது ஆயிரங்கால் மண்டபத்தில் அது வரை அமைதியாக அமர்ந்திருந்தவர்கள் எல்லாரும் ஆனந்தத்தினால் கண்ணீர் மல்க எழ்ந்து கை கூப்பி நிற்கின்றனர். சர்வ ஸ்வர்ண அலங்காரத்தில் நடன ராஜாவாக ஐயனும் அம்மையும் அருட்காட்சி தருகின்றனர். அவர்களின் தரிசனம் கண்ட மகிழ்ச்சியில் எத்தனை வித தோத்திரங்கள் உண்டோ அத்தனையும் கூறி வணங்குகின்றனர். மேளம், நாதஸ்வரம், பேரிகைகள், பிரம்ம தாளம், முழங்க அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயாக்ருக்கு சிறப்பு பூஜைகள். சோடஷ உபசாரங்கள் நடைபெறுகின்றது. என்ன பேறு பேற்றோமோ? எத்தனை கோடி யுக தவமோ மாலும், பிரம்மனும், இந்திரனும், சூரியனும், அக்னியும் மற்றும் அனைத்து தேவர்களும் வந்து வழிபடும் தங்கள் தரிசனம் கிடைத்தது என்று உருகுகின்றனர் அன்பர்கள்.


ஐயன் ஆருத்ரா தரிசனம் தர ஆயிரங்கால் மண்டபத்தை விட்டு கிளம்புகின்றார் ஆனந்த தாண்டவத்துடன். மிக அருகாமையில் இருந்து தரிசனம் செய்யலாம் ஐயனை. உடல் முழுவதும் தங்க கவசம் முகம் தவிர்த்து முழுவது நவரத்தினங்களால் ஆன நகைகள் அந்த குஞ்சித பாதத்தில் கொச்லுசு, சிலம்பு மாலை என்று சர்வாபரண பூஷித்ராக ஐயனும் அம்மையும் பகதர்களின் கூட்டத்தற்கிடையே ஊர்ந்து நகர்கின்றர். எங்கும் ஓம் நமசிவாய முழ்க்கம். எள் போட்டால் எள் கீழே விழ இடம் இல்லை அவரது தரிசனம் காண வந்த அனைவருக்கும், அன்று பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ர பாதருக்கும் தந்த ஆருத்ரா தரிசன காட்சி கொடுத்துக் கொண்டே ஆனந்த தாண்டவத்தில் கோயிலை சுற்றி வலம் வந்து கிழக்கு வாசல் வழியாக உட்பிரகாரத்தில் உள்ளே வருகின்றார் எம்பருமான். ஆருத்ரா தரிசன ஆனந்த தாண்டவம் தந்தருளி சித் சபா பிரவேசம் செய்கின்றார், நாம் எல்லோரும் உய்ய தானே வெளி வந்து எளி வந்த கருணையால் அருட்காட்சி தந்த எம்பெருமான். இன்றும் ஐயனது ஜடாமுடியை தரிசனம் செய்ய முடியும். பக்தர்கள் அனைவரும் மன நிறைவுடன் எடுத்த இந்த ஜன்மம் சாபல்யமடைந்து விட்டது என்று களியுடன்( திருவாதிரைக் களி , ஆனந்தம்) தங்கள் இல்லம் திரும்புகின்றனர். மறு படியும் அடுத்த வருடமும் தங்கள் தரிசனம் காணும் வாய்ப்பைத் தர வேண்டும் என்ற பிரார்த்தனையுடன்.






சென்னை கோடம்பாக்கம் இரயிலடி சௌந்தர விநாயக்ர் ஆலயம்


பஞ்ச மூர்த்திகள் பவனி


தங்க மூஷிக வாகனத்தில் விநாயகர்

பத்மஜோதி கலியுகக் கண்ணாடி என்று அழைக்கப்படும்



ககன கந்தர்வ கனக விமானத்தில் ஆனந்த நடராஜர்










ககன கந்தர்வ விமானத்தின் பின்னழகு

வலது பக்க சூரிய இறக்கை

இடது பக்க சந்திர இறக்கை

மானச கந்தர்வ மாணிக்க விமானத்தில் சிவானந்த வல்லி


பின்னழகு

தங்க மயில் வாகனத்தில் முருகர்

தங்க இடப வாகனத்தில் சண்டிகேஸ்வ்ரர்





திருவாதிரை உற்சவத்தைப்பற்றி கூறும் போது சென்னை கோடம்பாக்கம் இரயிலடி, அருள்மிகு சவுந்தர வினாயகர் திருக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசன கழ்ச்சியை கூறாமல் இருக்க முடியாது. பஞ்ச மூர்த்திகளும் பவனி வரும் அழகை காண்பவர்கள் அது போன்று எங்கும் கண்டதில்லை என்று ஆச்சிரியப்படும் அளவில் அருமையான பொன் முலாம் விமானத்தில் வலம் வருகின்றனர். காணக்கண் கோடி வேண்டும் என்பார்களே அது போல ஒவ்வொரு வருடமும் தவறாது சென்று தரிசிக்க அழைக்கும் அற்புத தரிசனம் அது. இத்திருக்கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் இவ்வாறு நடைபெறுகின்றது. இரவு 7 மணி அளவில் மஹாபிஷேகம். இரவு 10:30 மணி அளவில் வெள்ளை சார்த்தி புறப்பாடு. ஆருத்ரா தரிசனத்தன்று அருணோதய காலத்தில் சிவகாம சுந்தரி உடன் ஸ்ரீ நடராஜ பெருமான் திருக்கல்யாண வைபவம். காலை ஆறு மணிக்கு கோபுர வாசலில் ஆருத்ரா தரிசனம். காலை 9 மணிக்கு பத்ம ஜோதி கலியுகக் கண்ணாடி விமானத்தில் நடராஜரும், மானச கந்தர்வ மாணிக்க விமானத்தில் அம்மனும் எழுந்தருளி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு. பகல் 1மணிக்கு திருஊடல் உற்சவம் என வெகு சிறப்பாக சகல உற்சவங்களுடன் வெகு சிறப்பாக நடைபெருகின்றது. சிதம்பரம் போல் பஞ்ச மூர்த்திகளும் வலம் வருவது இத்திருக்கோவிலின் சிறப்பு.





சென்னை சைதாப்பேட்டை காரணீஸ்வரர் திருக்கோவில்

வினாயகர்


நடராஜப் பெருமான் ஆருத்ரா தரிசனம்






திருமயிலை கபாலீச்சுரம் ஆருத்ரா தரிசனம்

ஆனந்த தாண்டவ நடராஜர்



ஐயனின் பின்னழகு

அம்மை சிவகாம சுந்தரி

ஆனந்த சேந்தன் அருளிய திருப்பல்லாண்டு


மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே. (1)




மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்துவம்மின்
கொண்டுங் கொடுத்துங் குடிகுடி ஈசற்காட்செய்மின் குழாம் புகுந்து
அண்டங் கடந்த பொருள்அள வில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டுன் இன்றுமென் றுமுள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே. (2)




நிட்டையி லாவுடல் நீத்தென் ஆண்ட நிகரிலா வண்ணங்களும்
சிட்டன்சிவனடி யாரைச்žராட்டு திறங்களுமே சிந்தித்து
அட்ட மூர்த்திகென் அக நெக ஊரும் அமிர்தினுக் ஆலனிழற்
பட்டனுக் என்னைத்தன் பாற் படுத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (3)

சொல்லாண் டசுரு திப்பொருள் சோதித்த தூய்மனத் தொண்டருள்ளீர்
சில்லாண் டிற்சிதையுஞ்சில தேவர் சிறு—ந்றி சேராமே
வில்லாண் டகன கத்திரள் மேரு விடங்கன் விடைப் பாகன்
பல்லாண் டென்னும் பதம்கடந் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (4)




புரந்தரன் மாலயன் பூசலிட் டோலமிட் டின்னம் புகலரிதாய்
இரந்திரந் தழைப்பஎன் னுயிராண்ட கோவினுக் கென்செய வல்லமென்றும்
கரந்துங் கரவாத கற்பக னாகிக் கரையில் கருணைக்கடல்
பரந்தும் நிரந்தும் வரம்பிலாப் பாங்கற்கே பல்லாண்டு கூறுதுமே. (5)




சேவிக்க வந்தயன் இந்திரன் செய்கண்மால் எங்குந்திசை
கூவிக்கவர்ந்து நெருந்கிக் குழாங்குழாமாய் திசையன நின்று கூத்தரும்
ஆவிக்கமு தை என் ஆர்வத் தனத்தினை அப்பனை ஒப்பமரர்
பாவிக்கும் பாவகத் தப்புறத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (6)




žருந்திருவும் பொலியச் சிவலோக நாயகன் சேவடிக்கீழ்
ஆரும் பெறாத அறிவு பெற்றேன் பெற்றத்தார் பெறுவாருலகில்
ஊரும் உலகும் கழற உழறி உமை மண வாளனுக்காக
பாரும் விசும்பும் அரியும் பரிசு நாம் பல்லாண்டு கூறுதுமே. (7)




சேலும் கயலுந் தினைக்கும் கண்ணணார் இளங் கொங்கையிற் செங்குங்குமம்
போலும் பொடியணி மார்பிலங்கு மென்று புண்ணியர் போற்றின சமய
மாலும் அயனும் அறியா நெறி தந்து வந்தென் மனத்தகத்தே
பாலும் அமுதும் ஒத்துநின் றானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (8)




பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்க் கடல்ஈந்த் பிரான்
மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னியத் தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற திருச்சிற்றம்பலமே இடமாக
பாலித்து நட்டம் பயிலவல்லா னுக்கே பல்லாண்டு கூறுதுமே. (9)




தாதையத் தாளர வீசிய சண்டிக்கிவ் அண்டந் தொடுமுடனே
பூதலத்தோரும் வணங்கப் பொற் கோவிலும் போனகமும் அருள்
சோதி மணிமுடித் தாமம் நாமமும் தொண்டர்க்கு நாயகமும்
பாதகத் துக்கு பரிசு வைத்தானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (10)




குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம் பெருகி
விழவொலி விண்ணளவுங் சென்று விம்மி மிகுதிரு வாரூரின்
மழவினை யாற்கு வழிவழி யானாய் மணஞ்செய் குடிபிறந்த
பழவடி யாரொடுங் கூடிஎம் மானுக்கே பல்லாண்டு கூறுதுமே. (11)




ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையணைத் தும்நிறைந்து
பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே. (12)




எந்தை எந்தாய் சுற்ற முற்றும் எமக்கமு தாமெம்பி ரான்என்றென்று
சிந்தை செய்யும் சிவன் žர் அடியார் அடி நாய் செப்புரை
அந்தமில் ஆனந்த சேந்தன் எணைப்புகுந்தொண் டாருயிர் மேல்
பந்தம் பிரியப் பிரிந்தவனே என்று பல்லாண்டு கூறுதுமே. (13)



திருசிற்றம்பலம்


Saturday, December 22, 2007

ஆருத்ரா தரிசனம் - 8

திருத்தேரோட்டம்
(திருப்பல்லாண்டு பெற்ற வரலாறு)





"தானே வந்தெம்மை தலையளித்து ஆட்கொண்டருளும் வான் வார் கழல் பாடி ஆடேலோ ரெம்பாவாய்" என்று திருவெம்பாவையில் மாணிக்க வாசக சுவாமிகள் பாடுகின்றார். அதாவது நம்முடைய குற்றங்களை எல்லாம் மன்னித்து, நமது விணைகளை தானே வந்து மாற்றி நமக்கு நல்கதி அருளும் தலைவனாம் ஆனந்த நடராஜப் பெருமான் சித்சபை விடுத்து ஆனந்த தாண்டவத்துடன் திருத்தேருக்கு எழுந்தருளி, பஞ்ச மூர்த்திகளுடன் திருத்தேரோட்டம் கண்டருளும் நாள் இந்த ஒன்பதாம் திருநாள்.


ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாராயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரனும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையணைத் தும்நிறைந்து
பாரார் தொல் புகல் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.


என்று ஆனந்த சேந்தன் பாடிப் பரவியபடி, திருமால், பிரம்மம், இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம் வந்து எம்பெருமான் ஆதிரைத் தேரோட்டத்தை காணும் அழகை இன்று காண்போம்.

கோயிலின் உள்ளே சென்று வழிபட முடியாதவர்களுக்காக தானே வெளியே வந்து தேரார் வீதியில் திருத்தேரில் வந்து அருட்காட்சி அளிக்கின்றார் நடராஜப் பெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் இன்று.

தில்லையிலே எல்லாம் நடராஜர் தான் அரசனும் அவரே, (சபா) நாயகரும் அவரே, மூலவரும் அவரே, உற்சவரும் அவரே, அந்த அருட்பெருஞ்ஜோதி எளி வந்த கருணையினால் தானே திருக்கோவிலுக்கு வெளியே வந்து அவரது அருட்காட்சியை தந்தருளுகின்றார் என்பது இத்தலத்தின் சிறப்பு. வருடத்தில் இரண்டு நாட்கள் இந்த அற்புதம் நடக்கின்றது. திருவாதிரை மற்றும் ஆனித் திருமஞ்சனத் திருவிழாவின் ஒன்பதாம் நாள்.

அதிகாலை சித்சபையிலிருந்து புறப்பட்டு ஆனந்த தாண்டவத்துடன் திருத்தேருக்கு சிவானந்த வல்லியுடன் எழுந்தருளுகின்றார் கிழக்கு வாசல் வழியாக. பஞ்ச மூர்த்திகளின் திருத்தேரோட்டம் இன்றைய நாள். முதலில் சிறிய தேரில் முழுமுதற் கடவுள் விநாயகர் , அடுத்து பிரம்மாண்ட தேரில் அண்டர் நாயகன், அம்பலக் கூத்தன், ஆனந்த நடராஜர், அவருக்கு பின்னே சிவகாம சுந்தரி அம்பாள், தாயைத் தொடர்ந்து தனயன் முருகன் தன் தேவிமார்களுடன் நிறைவாக தொண்டன் சண்டிகேஸ்வரர் என்று ஐந்து ரதங்களும் ஆடி அசைந்து மக்கள் வெள்ளத்தில் அலைகடலில் படகு வருவது போல வரும் அழகை வர்ணிக்க பதஞ்சலியாக வந்து அவதரித்த ஆயிரம் நாவு கொண்ட அந்த ஆதி சேஷனுக்கே முடியாது, இந்த மானிடப் பதரால் அதை எவ்வாறு விவரிக்க இயலும்.

கிழக்கு மாடவீதி, பின் தெற்கு மாடவீதி, மேற்கு மாடவீதியில் தொடர்கிறது எம்பெருமான் மேற்கு மாடவீதியை அடையும் போது மதியம் ஒரு மணி ஆகிவிடுகின்றது. தேரோட்டம் நடைபெறும் போது ஐயனின் திருமுன்பு லக்ஷக்கணக்கில் கூட்டம் என்பதால் நாம் ஐந்து தேர்களையும் ஒன்றாக தரிசிக்க முடியாது. ஆகவே ஐயனை முதலில் தரிசித்து விட்டு அங்கேயே நின்று விட வேண்டும். ஐயனின் தேருக்கு பின்னால் சென்றால் கிடைக்கும் ஒரு அற்புத தரிசனம் ஆம் ஐயனின் ஜடாமுடி, வருடத்தில் நான்கு நாட்கள் மட்டுமே நாம் ஐயனின் ஜடாமுடி தரிசனம் பெற முடியும் எனென்றால் ஐயனின் பின்னே இருப்பதால். பின் அம்மையை, ஆத்தாளை, எங்கள் சிவகாம வல்லியை, அண்டமெல்லாம் பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளை, புவியடங்கக் காத்தாளை, அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கை சேர்த்தாளை முக்கண்ணியை தரிசித்து, பின் அம்மன் தேர் நம்மைக் கடந்த பின் வள்ளி நாயகி, தெய்வயாணை நாயகி சமேத முருகரை தரிசித்து, அவர் தேரும் கடந்து சென்ற பின் தன் சிவபூஜைக்கு இடையூறு செய்ய வந்த தந்தையில் காலையே மழுவால் வெட்டிய சண்டேசுரரையும் தரிசித்து அவர் தேரும் நம்மை கடந்து சிறிது தூரம் சென்ற பிறகு ஐந்து தேர்களையும் நாம் அருமையாக ஒரே சமயத்தில் தரிசனம் செய்யலாம்.




நாம் அனைவரும் உய்ய வெளியே வந்த எம்பெருமான் மேற்கு மாட வீதியின் முடிவில் சிறிது நேரம் தங்குகிறார். அப்போது எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் நாம் அவர் காலடியில் நின்று அவர் தரிசனம் பெறலாம். அன்பர்கள்தான் எப்படி எப்படி எல்லாம் வணங்குகின்றனர். சிவ புராணம் இசைப்போர் ஒரு பக்கம், ஓம் நமசிவாய என்று அழற்றுவோர் ஒரு பக்கம், ஸ்ரீ ருத்ரம் ஜபிப்போர் ஒரு பக்கம், தேவார திருவாசகங்களி உள்ளுருகப் பாடி உருகுவோர் ஒரு பக்கம், பல்லாண்டிசைப்போர் ஒரு பக்கம், அன்பு மிகுதியால் கீழே விழுந்து நெடுந்சாண்கிடையாக வணங்குவோர் ஒரு பக்கம், ஐயனை முழுவதுமாக தரிசித்த மகிழ்ச்சியில் கண்ணில் நீர் வழிய கை கூப்பி மரம் போல் நிற்பவர் ஒரு பக்கம், எத்தனை கோடி யுக தவமோ உன் அருட் தரிசனம் இந்தப் பிறவியில் கிட்டியது என்று மயங்கி நிற்போர் ஒரு புறம் என்று அனைவருக்குக் அருள் பாலித்த எம்பெருமான் மாலை நான்கு மணியளவில் பின் கிளம்பி தேரடி வந்து சேருகின்றார்.

இவ்வாறு நடந்த மார்கழித்திருவாதிரை தேரோட்டத்தின் போது தனக்கு களி அமுது செய்த சேந்தன் மூலம் ஐயன் திருப்பல்லாண்டு பெற்ற வரலாற்றைக் காண்போமா? ( நேற்று தொடங்கிய வரலாற்றின் தொடர்ச்சி).


இச்சமயத்தில் மார்கழி திங்கள் மதி நிறைந்த நன்னாளிள் ஆடல் வல்லானின் 'ஆருத்ரா தரிசன திருவிழா' வந்தது. ஒன்பதாம் நாள் தன் பக்தர்களுக்கு அருளும் பொருட்டு சபையிலிருந்து எம் ஐயன் வெளியே திருத்தேருக்கு எழுந்தருளி அவரது தேரோட்டம் துவங்கியது. சிறிது தூரம் ஓடிய தேர் பிறகு நின்று விட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் தேர் அசைந்து கொடுக்கவில்லை. அண்ட சராசரங்கள் அனைத்தையும் ஆட்டுவிக்க ஆனந்த கூத்தாடும் அவன் நினைக்காத போது தேர் எவ்வாறு நகரும். அனைவரும் ' ஆனந்த நடராஜப் பெருமானே, அருள் வள்ளலே, எளியோருக்கு இரங்கும் அருள் மலையே, கருனைக்கடலே இது என்ன சோதனை, ஏன் எவ்வாறு நடக்கின்றது? எங்களுடைய பிழையை பொறுத்து அருளுமய்யா என்று வேண்டி நின்றனர். அப்போது அசரிரீ ஒலித்தது, " சேந்தா எனக்கு திருப்பல்லாண்டு பாடு " என இறைவனின் ஆணைப்படியே ஆனந்த சேந்தனும்


மன்னுக தில்லை வளர்க நம் பக்தர்கள் வஞ்சகர்கள் போய் அகலப்
பொன்னின் செய் மண்டபத்துள்ளே புகுந்து புவனியெல்லாம் விளங்க
அன்ன நடைமட வாளுமை கோன்அடி யோமுக் கருள்புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்கு பல்லாண்டு கூறுதுமே


என்று தொடங்கி திருப்பல்லாண்டைப்பாடி முடிக்கின்றார். பின் தேரும் ஓடத் தொடங்கியது. இதுவே நாம் ஆதிரை நாளன்று சபா நாயகருக்கு களி படைக்கப்படுவதற்கான காரணம் ஆகும். எனவே ஐயன் நம்மிடம் எதிர்பார்ப்பது தூய பக்தியைத்தான் மற்றவை எல்லாம் ஒன்றுமேயில்லை. ஆகவே தான் மாணிக்க வாசக சுவாமிகளும்

சாதி ,குலம், பிறப்பு என்று கவலைப் பத்து தடுமாறும், பொருத்தமில்லாத நாயேனையும் மன்னித்து ஆட்கொண்ட வள்ளலை குலாவு தில்லை கண்டேன் என்று திருவாசகம் பாடுகின்றார்.

பின் திருத்தேரிலிருந்து இறங்கி ஆனந்த தாண்டவத்துடன் ஐயன் இராஜ சபை என்னும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன் மண்டபத்தில் வந்து திருவோலக்கம் தந்து அருளுகின்றார். அவருக்கு ஒரு கால லக்ஷார்ச்சனையும் நடைபெறுகின்றது.
நாளை ஆருத்ரா தரிசனம் ஐயனின் அருமையைக் காண வாருங்கள்.

ஆருத்ரா தரிசனம் - 7

திருசிற்றம்பலம்


ஆருத்ரா தரிசனம் சிவபெருமானுக்குரிய அஷ்ட மஹா விரதங்களுள் ஒன்று என்பதை முதலில் பார்த்தோம். இவ்விரதத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது முதலிய தகவல்களை இந்த இடுகையில் காண்போம்.

திருவாதிரை விரதத்தை அனுஷ்டிக்கும் முறை:

ஆருத்ரா என்றழைக்கப்படும் திருவாதிரை தினத்தன்று தான் நடராஜப்பெருமான் முன்னால் வடகயிலையில் மாமுனி பதஞ்சலிக்கும் வியாக்ரபாதருக்கும் தனது ஆனந்த தாண்டவ திருக்கோலத்தை தில்லையில் காட்டியதாக ஐதீகம். தனுர் மாதத்தில் அந்த ருத்ரன் அதிதேவைதையான திருவாதிரை நட்சத்திரமும் (முழுமதியும்) இனைந்து வரும் நாளில் இந்த திருவாதிரை விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்று ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. உமா மஹேஸ்வர விரதத்தில் கூறியது போல் அனேகமாக திருவாதிரையும் பௌர்ணமியும் மார்கழியில் இனைந்தே வரும் சில வருடங்கள் மாறி வருவதும் உண்டு, ஆயினும் இவ்விரதம் திருவாதிரை அன்றுதான் கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஸ்கந்த புராணத்தில் கூறியுள்ளபடி தனுர்மாத திருவாதிரை அன்று காலை எழுந்து ஆனந்தக் கூத்தாடும் அம்பல வாணரையும் அம்மை சிவானந்த வல்லியையும் ஆத்மார்த்தமாக வணங்கி உடல் சுத்தி செய்து, திருநீறந்து பஞ்சாக்ஷர மந்திரம் ஓதிக் கொண்டு சிவாலயம் சென்று எம்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்வித்து, அமுது படைத்து, நெய் விளக்கேற்றி வழிபட்டு, நாள் முழுவதும் உண்ணா நோன்பிருந்து அந்த எம்பெருமானையே னைத்துக் கொண்டிருந்து, பொன்னம்பலா, சித் சபேசா, ஆனந்த தாண்டவ நடராஜா, ஆடல்வல்லா, சபாநாதா, கூத்தப்பிரானே, சிற்றம்பலா, ஆனந்த கூத்தா, ஆடிய பாதா , அம்பலவாணா, சிதம்பர தேசிகா, நடன சிகாம என்று பல் வேறு நாமங்களால் போற்றி வணங்கி மறு நாள் காலை எழுந்து முக்கண் முதல்வரை வணங்கி அவரின் அடியவர்களுக்கு அமுது செய்வித்து, பின் தானும் பிரசாதம் புசித்து விரதத்தை முடிக்க வேண்டும்.

திருவாதிரை விரதித்தின் பெருமை:
ஸ்கந்த புராணத்தில் முனிசகேசர், வியாக்ரபாதர் மற்றும் கார்கோடகன் என்ற நாகம் ஆகியோர் இந்த திருவாதிரை விரதத்தை கடைப்பிடித்து ஐயனின் ஆனந்தத் தாண்டவத்தை தரிசனம் செய்யும் பேறு பெற்றனர் என்று கூறப்பட்டுள்ளது. பரமனிடம் பாற்கடலையே பெற்ற உபமன்யு முனிவரை வியாக்ர பாதர் பெற்றது இவ்விரத மகிமையால்தான். விபுலர் என்னும் பிராம்மணர் இவ்விரத மகிமையால் பூத உடலுடன் திவ்ய வாகனத்தில் திருக்கயிலாயம் சென்று திரும்பி வந்தார், முக்தியும் பெற்றார். திருவாதிரையன்று எம்பெருமான் ஆனந்த நடமாடி களித்திருப்பதால் இவ்விரதத்தை கடைப்பிடித்தால் அவரை எளிதில் திருப்திபடுத்தலாம்.

திருவாதிரை விரதம் இல்லங்களில் கொண்டாடப்படும் முறை:

பல்வேறு இல்லங்களில் இவ்விரதம் வழி வழியாக அனுஷ்டிக்கப் படுகின்றது. தாயாரோ அல்லது மாமியாரோ இவ்விரதத்தை பெண்களுக்கு எடுத்துக் கொடுப்பது வழக்கம் அதாவது இவ்விரதம் நின்று விடாமல் தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டு வருகின்றது. எல்லா வீடுகளிலும் ஆனந்த நடராஜப் பெருமானுக்கு திருவாதிரைக் களியும், தாலகமும் படைத்து வழிபடுகின்றனர். பல இல்லங்களில் பெண்கள் தங்கள் தாலி சரட்டை இவ்விரதத்தின் போது மாற்றும் வழக்கமும் உள்ளது.

திருவாதிரைக் களி :

திருவாதிரையன்று நடராஜப் பெருமானுக்கு களியும் தாலகம் என்னும் காய்கறி கூட்டும் தான் பிரசாதமாக படைக்கப்பதுகின்றது. ஒரு வாய்க் களி தின்னாதவர் நரகக்குழி என்பது பழமொழி இதன் மூலம் எம்பெருமானின் பிரசாதத்தின் மகிமை விளங்கும். களி என்றால் ஆனந்தம் என்று ஒரு அர்த்தம் ஒன்று ஆனந்த தாண்டவம் ஆடும் ஐயனை நாம் உண்மையான உள்ளன்புடன் வழி பட்டால் அவர் நமக்கு உண்மையான ஆனந்தமான மோக்ஷத்தை வழங்குவார் என்பதை உணர்த்துவதே களி படைப்பதன் உள்ளார்த்தம்.

ஆனந்தத் தாண்டவம் ஆடும் ஆண்டவனுக்கு களி எவ்வாறு பிரசாதமானது என்ற சுவையான வரலாற்றைப் பற்றி பார்ப்போமா? அது பராந்தக சோழனின் காலம், மன்னன் தில்லை சிற்றம்பலத்திற்கு பொன் வேய்ந்து கொண்டிருந்த சமயம், பராந்தக சோழன் தானே பொன் வேயும் பயை மேற்பார்வை செய்து கொண்டிருந்தான். தினமும் சாயுங்கால வேளையில், சித்சபையிலே நடராஜப் பெருமானுடைய பாத சிலம்பொலியை கேட்ட பின்னரே, தனது இரவு உணவை உண்ணும் வழக்கத்தை கொண்டிருந்தான் மன்னன். அதே சமயம் சேந்தன் என்பவரும் அம்பலவாணரின் மீது அளவிலா பக்தி கொண்டு வாழ்ந்து வந்தார். நந்தனாரைப் போல ,தாழ்த்தப்பட்டவராகவும் ,ஏழையாகவும் இருந்தாலும், எம் ஐயன் மேல் சேந்தனார் கொண்டிருந்த பக்திக்கு ஒரு எல்லையே இல்லாமல் இருந்தது. ஆண்டவன் முன் அனைவரும் சமமல்லவா? எனவே தாழ்த்தப்பட்டவராயிருந்தாலும் தனது பரம பக்தனின் பக்தியை உலகறிய செய்ய விரும்பிய அந்த அம்பல கூத்தன் ஒரு நாள் மன்னனுக்கு தன் பாத சிலம்பை ஒலிக்காமல் விட்டு விட்டார். மன்னன் இதனால் மிகவும் வருத்தமடைந்தான், " எம் ஐயா, நான் என்ன தவறு செய்தேன்? எதற்காக இந்த தண்டணை என்க்கு? நான் எந்த தவறு செய்திருந்தாலும், தாயினும் தயவுடையவனே ,நீ அதை பொறுத்தருளி அடியேனை காத்தருள வேண்டும்" என்று மனமுருக வேண்டி அந்த கவலையிலேயே மன்னன் உறங்கி விட்டான்.


மன்னனுடைய கனவிலே எம்பெருமான் தோன்றி, மகனே நீ கவலைப்பட வேண்டாம், நான் நேற்று இங்கு இல்லை எனது அன்பன் சேந்தனுடைய இல்லத்திற்கு சென்றிருந்தேன், அவனெனக்கு அளித்த களி விருந்தோம்பலில் மிகவும் மகிழ்ச்சியுற்ற நான் அங்கு இருந்ததால் நாம் உனக்கு என் பாத சிலம்பொலியை ஒலிக்க முடியவில்லை, எனவே நீ கவலைப்பட வேண்டாம் என்று கூறி மறைந்து விட்டார்.

அடுத்த நாள் கருவறையை அர்ச்சகர்கள் திறந்த போது அவர்கள் கண்ட காட்சி அவர்களை திடுக்கிட வைத்தது. எம் பெருமானின் திருமேனியெங்கும் களி சிதறி கிடந்தது. அதை கண்ட அவர்கள் மிகப்பெரிய அபசாரம் நடந்து விட்டதே, பூட்டிய கருவறைக்குள் யார் வந்து இந்த பாதக செயலை செய்திருக்ககூடும் என்று மனம் கலங்கி அரசனிடம் சென்று நடந்ததை கூறினார்கள். மன்னனும் தனது கனவில் இறைவன் வந்து கூறியதை அவர்களிடம் விளக்கினார். பின் சேந்தன் என்பவர் யார் என்பதை கண்டு பிடிக்க தனது வீரர்களை அனுப்பினார் ஆனால் அவர்களால் சேந்தனை கண்டுபிடிக்க முடியவில்லை.( எவ்வாறு எம்பெருமான் தனது அன்பனை உலகத்தோர் முன் வெளிக் காட்டினார் என்பதை நாளை காண்போம்.)

அன்று முதல் களி எம்பெருமானுக்கு உகந்த பிரசாதமானது. இன்றும் திருவாதிரை நாளன்று நாம் களி படைத்து சித்சபேசனை சிதம்பர நாதரை வழிபடுகின்றோம்.

இன்றைய தினம் ஆருத்ரா தரிசனத்தின் 8ம் திருனாள் தில்லையிலே இன்று ஐயன் எளி வந்த கருணையினால் தானே சித்சபையை விடுத்து வெளியே வந்து மாட வீதிகளில் அன்பர்களுக்கு திருக்காட்சி தர ஏதுவாக சர்வலங்கார பூஷிதராக தயாராகின்றார். எனவே இன்று சித் சபையில் ஐயன் மற்றும் அம்மையின் திருமுக தரிசனம் மற்றுமே கிடைக்கின்றது. வெள்ளை சார்த்தி காட்சி தருகின்றனர் அம்மையும் அப்பனும் இன்று.

பிக்ஷாடணர் - காரைக்கால்


மாலை தாருகாவானத்தில் கர்வம் கொண்டு அலைந்த முனிவர்களை கர்வம் அடக்க ஐயன் சுந்தர மூர்த்தியாக சென்று முனி பத்தினிகளை மயக்கி பிக்ஷாடணராக செல்ல, மோகினியாக உடன் சென்ற மஹா விஷ்ணு முனிவர்களை மயக்கினார். சிறிது நேரம் கழித்து உண்மையை உணர்ந்த முனிவர்கள் அபிசார வேள்வி செய்து புலியை அனுப்பினர் சிவபெருமான் அதன் தோலை உரித்து இடையில் ஆடையாகக் அணிந்து கொண்டார். பாம்புகளை ஆபரணமாக அணிந்து கொண்டார். ஆண் மானை கொம்பை உடைத்து இடக்கையில் ஏந்தினார். இறுதியாக யாகத்தை அழித்து அந்த யாக நெருப்பையே கையில் சுடராக ஏந்தி மஹா விஷ்ணுவும், முப்பத்து முக்கோடி தேவர்களும் மகிழ ஆனந்த தாண்டவம் ஆடிய பிக்ஷாடணர் உற்சவம். சுந்தரராக புலியதளாட, திகம்பரராக, ஒயிலாக வளைந்து நின்ற கோலத்தில் தோளில் நாகம் ஆட குண்டோதரன் குடைப் பிடிக்க, திரிசூலத்தை தோளிலே எழிலாக தாங்கி தங்கத்தேரில் மாட வீதி உலா வருகின்றார்.

Friday, December 21, 2007

ஆருத்ரா தரிசனம் - 6

திருச்சிற்றம்பலம்
கால் மாறி ஆடிய பெருமான்
வெள்ளியம்பலம் - மதுரை




தில்லையில் ஆருத்ரா தரிசனம் எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்று பார்த்தோம் இனி மற்ற சிவஸ்தலங்களில் இத்திருவிழா எவ்வாறு கொண்டாடப்படுகின்றது என்று பார்ப்போமா?



முத்து விதானம் பொற் கவரி முறையாலே
பத்தர் களோடு பாவையர் சூழப் பலி பின்னே
வித்தக்க் கோல வெண்டலை மாலை விரதிகள்
அத்தன் ஆரூர் ஆதிரை நாளால் அது வண்ணம்




தியாகராஜப் பெருமான் - திருவான்மியூர்


என்று அப்பர் பெருமான் பாடிய வண்ணம் திருவாதிரை நாளன்று திருவாரூரிலே இருந்தாடும் அழகராக, தியாகராஜப் பெருமானாக, அம்மையுடனும் ஸ்கந்தனுடனும் எழுந்தருளியுள்ள எம்பெருமான் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ர பாதருக்கும் தமது திருப்பாதத்தை காட்டியருளியதால், திருவாதிரை நாளன்று நாமும் தியாகராஜரின், மாலும் அயனும் காண இயலாத அந்த திருப்பாத தரிசனத்தை கண்டு களிக்கலாம். ஆதிசேஷன் மேல் வைத்த நிலையில் தொங்கவிடபட்ட அந்த வீரக்கழலணிந்த அந்த ஐயனின் திருப்பாதத்தையும், மேல் கொலுசும், சிலம்பும் அந்த அம்மையின் திருப்பாதத்தையும் முழுதும் வைரத்தால் போர்த்தப் பெற்ற ஸ்கந்தரையும் அன்று நாம் காணலாம். திருவாரூரிலே தியாகராஜப்பெருமான் ஆருத்ரா தரிசனத்தன்று வலது பாத தரிசனமும், பங்குனி உத்திரத்தன்று இடது பாத தரிசனமும் தந்து அருளுகின்றனார். மற்ற நாட்களில் நாம் எம்பருமானது வீரக்கழல் அந்த அந்த இணையார் திருவடி தரிசனம் காண முடியாது முக தரிசனம் மட்டுமே கிடைக்கும்.

திருவாதிரையன்று மட்டுமே கிடைக்கும் மற்றுமொரு திவ்ய தரிசனம் உத்திர கோச மங்கையிலே மரகத நடராஜரின் நிஜ தரிசனம். வருடம் முழுவதும் சந்தனத்தால் போர்த்த்ப்பட்டு காட்சியளிக்கும் எம்பெருமான் இன்று மட்டும் சந்தன காப்பு அகற்றப்பட்டு அபிஷேகம் கண்டருளுகிறார். நாமும் அவரை சந்தனக் காப்பு இல்லாமல் மரகத மேனியராக கண்டு ஆனந்தம் அடையலாம்.

திருமயிலையில் ஆருத்ரா தரிசனம்

ஊர்திரை வேலை யுலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வெல்வலார் கொற்றங்கொல் சேரிதனில்
கார்தரு சோலை கபாலீச்சுரம் அமர்ந்தான்
ஆதிரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்!

என்று திருமயிலையிலே சாம்பலாகிய பெண்ணை உயிர்பித்த போது ஞான சம்பந்தர் பாடிய மயிலையிலே கொண்டாடப்படும் பல்வேறு சீர்மிகு திருவிழாக்களுள் திருவாதிரையும் ஒன்று.

நடராஜபெருமான் எழுந்தருளியுள்ள எல்லா தலங்களிலும் அவருக்கு இன்று அபிஷேகம் மற்றும் திருவீதி உலா நடைபெறுகின்றது. கொங்கு நாட்டுத்தலங்கள் சிலவற்றில் இன்று நடராஜர், சிவகாம சுந்தரி திருக்கல்யாணமும் வெகு சிறப்பாக நடைபெறுகின்றது.
கோவை பேருரிலே இன்று எம்பெருமானின் பின்னே பின்னி தொங்கவிடப்பட்டிருக்கும் ஜடா முடியையும் நாம் கண்டு ஆனந்தம் பெறலாம். கங்கையும், இளம்பிறையும், பொன்போல் மிளிரும் கொன்றையும் சடாமுடியிலே அந்த எம்பெருமான் உருவமாக எழுந்தருளியுள்ள தலங்கள் அனைத்திலும் அவருடைய திருமேனிக்கு அபிஷேகம் நடைபெறுகின்றது.



குறிப்பாக சப்த விடங்க ஸ்தலமான திருநள்ளாற்றிலே அருணோதய காலத்தில் ஒரே சமயம் நடராஜப் பெருமானுக்கும், தியாகராஜப் பெருமானுக்கும் அபிஷேகம் நடப்பதை நாம் கண்டு ஆனந்தம் அடையலாம்.



தொண்டை மண்டலத்தின் தியாகராஜ ஸ்தலமான தர புகழ் திருவொற்றியூரிலே , தத்தமி தாள மொடு மாணிக்க தியாகர் பதினெட்டு வகை நடனக் காட்சி தந்தருளுகிறார்.




இனி மற்ற பஞ்ச சபைகளில் திருவாதிரைத் திருவிழா எவ்வாறு நடைபெறுகின்றது என்று பார்க்கலாமா? தாமிர அம்பலமாம் திருநெல்வேலியில் 10 நாள் உற்சவம் தரிசனத்தன்று பெரிய சபாபதி, மற்றும் சந்தன சபாபதி சன்னதியிலும் தாம்பிர சபா நடனம் நடைபெறுகின்றது.



சித்ர அம்பலமாம் திருக்குற்றாலத்திலும் 10 நாள் உற்சவம், தரிசனத்தன்று, குற்றால நாதர் சன்னதியிலிருந்து நடராஜப் பெருமான் சித்ர சபைக்கு எழுந்தருளி தாண்டவ தீபாரதனை கண்டருளுகிறார்.



திருநல்லம்(கோனேரி ராஜபுரம்) சுயம்பு நடராஜர்-சிவகாமி


சுயம்புவாக தோன்றி மிகப்பெரிய திருவுருவமாக விளங்கும் திருநல்லம் என்னும் கோனேரி ராஜபுரத்திலும் இத்திருவிழா பத்து நாள் மாணிக்கவாசகர் விழாவாக கொண்டாடப்படுகின்றது.



பாவை பாடிய வாயால் கோவை பாடு என்று எம்பெருமானலேயே திருக்கோவையார் பாடிய மாக்க வாசகருக்கு 10 நாள் உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது ஆவுடையார் கோவில் எனப்படும் திருப்பெருந்துறையிலே, இங்கு தில்லையம்பலத்தில் உள்ள ஆடல் வல்லானான இறைவனே தான் எழுதிய திருவாசகத்திற்கும், திருக்கோவையாருக்கும் பொருள் என்று அவருடன் ஒன்றற கலந்த மாணிக்க வாசகர் 10 நாட்களும் பல் வேறு வாகனங்களில் அருட்காட்சி தருகிறார். மேலும் வீரவ நல்லூர், சங்கரன் கோவில் ஆகிய தலங்களிலும் 10 நாள் விழாவாக சிறப்பாக கொண்டாடப்படுகின்றது.




சிறு வயதில் எங்கள் ஊர் உடுமலைப்பேட்டையில் அருள்மிகு பிரசண்ட வினாயகர் கோவிலில் முதலில் அடியேன் கண்ட ஆருத்ரா தரிசனம் இக்கோவிலில் தான். காலை 8 ம அளவில் ஆனந்த நடராஜரும், சிவகாம சுந்தரி அம்பாளும் சபையை விட்டு முன் மண்டபத்திற்கு எழுந்தருளுவர். பின் அவர்களுக்கு மஹா அபிஷேகம், பின் அலங்காரத்திற்குப் பின் திருக்கல்யாணம், பகல் 1 மணி அளவில் ஐயன் ஊர்வலம் புறப்படுகின்றார். உச்சி வெயில் நேரத்தில் அம்மையும் ஐயனும் வெளி வரும் அழகைக் காண காத்துக் கிடப்போம், பின் ஊர்வலம் வரும் சுவாமியுடன் நாங்களும் செல்லுவோம், அங்கங்கே மண்டகப்படி நடக்கும், நீர் மோர், சுண்டல், பொங்கல் என்று பிரசாதங்களை பெற்றுக்கொண்டு மாலை 5 மணி அளவில் சுவாமியுடன் கோவிலுக்கு திரும்புவோம்.